10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

1/28/2020 2:50:56 PM

10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

* பொதுத்தேர்வு டிப்ஸ்

முதல் முதலாகப் புதிய பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு இப்போதிருந்தே தயாராக வேண்டியது அவசியம். காலம் கரைந்தோடிவிடும் என்பதைக் கருத்தில்கொண்டு சமூக அறிவியல் பாடத்தில் சிறந்த மதிப்பெண் பெறவும், எளிதாகத் தேர்வில் வெற்றியடையவும் குறிப்புகள் தருகிறார் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓசூர் அரசு உயர்நிலைப் பள்ளி, பட்டதாரி ஆசிரியர் (வரலாறு) பே.சீனிவாசன். வெற்றி பெறும் வழிகளுக்கான குறிப்புகளைப் பார்ப்போம்…

வினாத்தாள் நான்கு பகுதிகளைக் கொண்டது. முதல் பிரிவு 14 சரியான விடையைத் தேர்வு செய்து எழுதவேண்டும். இரண்டாம் பிரிவு வினா எண் 15 முதல் 28 வரை உள்ள வினாக்களில் ஏதேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இவற்றில் 28வது வினா கட்டாய வினாவிற்கு விடையளிக்க வேண்டும். இப்பகுதியில் வரலாறு - 4, புவியியல்-4, குடிமையியல்-2, பொருளியல்-2 ஒரு கட்டாய வினா கேட்கப்படும்.பகுதி மூன்றில் 5 மதிப்பெண் வினா, வினா எண் 29 முதல் 42 வரையில் உள்ளதில் ஏதேனும் 10 வினாக்களுக்கும், அதில் 42வது கட்டாய வினாவிற்கு விடையளிக்க வேண்டும். இப்பகுதியில் வினாக்கள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொண்டால் எவற்றை எழுதினால் மதிப்பெண் பெற முடியும் என்ற தெளிவு கிடைக்கும். வினா எண் 29 - கோடிட்ட இடங்களை நிரப்புக, 30 - வரலாறு பொருத்துக, 31 - புவியியல் பொருத்துக, 32 - வேறுபாடு இரு வினாக்கள் ஒரு காரணம் கூறுக. 33, 34-வரலாறு, 35,36-புவியியல், 37,38-குடிமையியல், 39,40-பொருளியல் வினாக்கள் கேட்கப்படும்.

41வது வினா காலக்கோடு பகுதியில் 1900-1920, 1920-1940, 1930-1950 என ஏதாவது ஒன்றில் ஐந்து முக்கிய நிகழ்வுகளைக் காலக்கோட்டில் எழுதவேண்டும். 42வது வினா உலகப்படம் (அ) இந்திய வரைபடத்தில் 5 இடங்களைக் குறிப்பது கட்டாய வினாவாக இருக்கும். (ஏதேனும் ஒன்று மட்டுமே வரும்)பகுதி-4-ல் 8 மதிப்பெண் கொண்ட தலைப்பின் கீழ் வினா இரண்டு எழுதவேண்டும்;. 43வது வினா இரண்டு தலைப்பு வினா, வரலாறு பாடத்தில் தொகுதிக்கு ஒன்றிற்கு ஒரு வினா அடங்கியிருக்கும். 44வது வினா இந்தியா (அ) தமிழ்நாடு வரைபடத்தில் 8 இடங்களைக் குறிக்க வேண்டும்.

முக்கியக் காலக்கோடு நிகழ்வுகள்

1905-வங்கப்பிரிவினை, 1906-முஸ்லீம் லீக் தோற்றம், 1909-மிண்டோ-மார்லி சீர்திருத்தம், 1911-வங்க இணைவு, 1914-முதல் உலகப்போர் தொடக்கம், 1918-முதல் உலகப்போர் முடிவு, 1919-ரௌலட் சட்டம், 1920-ஒத்துழையாமை இயக்கம், 1922-சௌரி சௌரா நிகழ்வு, 1923-சுயராஜ்ஜிய கட்சி தோற்றம், 1927-சைமன் குழு அமைத்தல், 1928-சைமன் குழு வருகை, 1930-முதல் வட்ட மேசை மாநாடு, 1931- இரண்டாவது வட்ட மேசை மாநாடு, 1932-மூன்றாம் வட்ட மேசை மாநாடு, 1935-இந்திய அரசு சட்டம், 1939-இரண்டாம் உலகப்போர் தொடக்கம், 1940-தனி நாடு கோரிக்கை, 1942-வெள்ளையனே வெளியேறு இயக்கம், 1945-இரண்டாம் உலகப்போர் முடிவு, 1946-இடைக்கால அரசு, 1947-இந்தியா விடுதலை, 1950-இந்தியா குடியரசு எனப் பார்த்தாலே போதுமானது.

முக்கிய இந்திய வரைபடங்கள்

மலைத்தொடர், ஆறுகள், சமவெளிகள், கடற்கரைகள், வளைகுடாக்கள், உயிர்க்கோள காப்பகம், மண் வகைகள், வேளாண் பயிர் விளையும் பகுதி, போக்குவரத்து, எரிசக்தி நிலையம், பருவமழை, காடுகள், முக்கியப் பெருநகரங்களான சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்றவை பயிற்சி செய்வது நல்லது.

முக்கியத் தமிழ்நாடு வரைபட இடங்கள்

குன்றுகள், கடற்கரை, வேளாண் பயிர் விளையும் பகுதி, அணைகள், துறைமுகம், ஏரிகள், மண் வகைகள், போக்குவரத்து போன்றவை பயிற்சி செய்வது முழு மதிப்பெண் பெற வழிவகுக்கும்.

முக்கிய உலக வரைபட இடங்கள்

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, மொராக்கோ, எகிப்து, சூயஸ் கால்வாய், கியூபா, இத்தாலி, கிரீஸ், ஆஸ்திரியா, செர்பியா, ஜப்பான், ரஷ்யா, முத்துத் துறைமுகம், சான்பிரான்சிஸ்கோ, ஹிரோஷிமா, நாகசாகி, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலந்து போன்றவை பயிற்சி செய்வது நல்லது.பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50. பாட வினாக்கள் 90 சதவீதமும், பாடத்தின் உள் பகுதியிலிருந்து 10 சதவீதமும் வினா கேட்க வாய்ப்பிருக்கிறது. உள் வினாக்கள் பெரும்பாலும் பெட்டிச் செய்திகள், உங்களுக்குத் தெரியுமா, உயர் சிந்தனை வினா போன்றவை இடம்பெறும். இவற்றை முறையாகக் குறிப்பெடுத்துக்கொண்டால் முழு மதிப்பெண்களைப் பெறலாம்.நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் வினாத்தாள் வரிசைப்படி மாறாமல் எழுதுதல், அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுதல், எந்தக் கேள்விக்கு அதிகப் பாயிண்டுகள் எழுதலாம் என்பதை முடிவு செய்து எழுதுதல் வேண்டும்.

என்ன மாணவர்களே திட்டமிட்டு, நன்றாகத் திருப்புதல் செய்து உற்சாகமாகத் தேர்விற்குத் தயாராகுங்கள், நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துகள்.
(இவர் தரும் மாதிரி வினாத்தாள் அடுத்தடுத்த பக்கங்களில்…)

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

மேலும்

X