பிளஸ் 2 பொதுத்தேர்வு உயிரியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

1/29/2020 3:11:00 PM

பிளஸ் 2  பொதுத்தேர்வு உயிரியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

பொதுத் தேர்வு டிப்ஸ்

+2 பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாகச் சிறந்த கல்வியாளர்களைத் தேர்வுசெய்து மாணவர்களுக்கு முக்கிய குறிப்புகள் மற்றும் மாதிரி வினாத்தாள் ஆகியவற்றைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். அந்த வகையில் இந்த இதழில் +2 உயிரியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளை சிவகங்கை மாவட்டம் பீர்க்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி விலங்கியல் ஆசிரியர் டி.முத்துராமலிங்கம் வழங்கியுள்ளார். இனி அவர் தரும் வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்…

மாணவர்கள் முதலில் ‘உயிரியல் பாடம் என்பது மிகவும் கடினமானது’ என்ற மனநிலையிலிருந்து வெளிவரவேண்டும். ஏனெனில் பல மாணவர்கள் உயிரியில் பாடம் படிப்பதற்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். மருத்துவப் படிப்புக்கெல்லாம் உயிரியல் பாட மதிப்பெண்கள் பிரதானமாக அமையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். அதேபோல மாணவர்கள் மனனம் செய்வதைக் குறைத்துக்கொண்டு பாடப்பகுதியைப் புரிந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். ஏனெனில் உயிரியல் பாட வினாக்கள் Higher Order Thinking (HOT) அளவில் இருக்கும். அதனால் மனனம் செய்யும்போது உங்களால் அவ்வினாவிற்குப் பதில் எழுதமுடியாது. எனவே, ஒவ்வொரு பாடத்திலும் புரியாத பகுதிகளை ஆசிரியர்களிடம் கேட்டு உணர்ந்து படிக்கவேண்டும். தற்போது Blue Print முறை இல்லாத காரணத்தால் எந்தப் பகுதியில் என்ன வினாக்கள் வரும் என்பது தெரியாது. எனவே, அனைத்துப் பாடங்களையும் நீங்கள் அவசியம் படித்தாக வேண்டும்.

+2 உயிரியல் வினாத்தாளைப் பொறுத்தவரை இரண்டு பாடப்பிரிவு களைக் கொண்டது. அவை 1.உயிரி-தாவரவியல், 2. உயிரி-விலங்கியல். ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் 35 மதிப்பெண்கள் என்றபடி மொத்தம் 70 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருக்கும். செய்முறைக்கு 30 மதிப்பெண்கள் வழங்கப் படும். இதில் எது எளிமையாக இருக்கிறது என்பதை உணர்ந்து அந்தப் பகுதிக்கு முதலில் கவனம் செலுத்தி எழுதவும். பின் அடுத்த பகுதிக்கு விடை அளிக்கவேண்டும். கட்டாய வினாக்கள் இரண்டு பாடப்பிரிவிலும் பகுதி III-ல் இருக்கும். அதை எழுதும்போது தான் உயிரியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறமுடியும். எனவே, அதனை மாணவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வினாவிற்கு ஏற்ற விடையளித்தால் போதுமானது. எல்லா வினாவிற்கும் நிறைய பதில் எழுத வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு இருக்கக்கூடாது. விடையைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியிருந்தால் போதும். கால அளவு 3.15 மணிநேரம். அதில் முதல் 15 நிமிடம் வினாத்தாள் வடிவமைப்பைப் பற்றி தெரிந்துகொண்டு அதில் வினாத்தாளை நன்றாக வாசித்து விடையளிக்க வேண்டிய வினாக்களை முடிவு செய்வதற்கானது. அதன்பின் விடையளிக்க வேண்டிய வினாக்களுக்கு விடையும் தேவையான இடங்களில் படம் வரைந்து மற்றும் பாகங்களைத் தெளிவாக குறியிடவும் வேண்டும். உயிரி-தாவரவியல் பகுதியில் கேள்விகள் சற்று எளிமையாகக் கேட்கப்படும். எனவே மாணவர்கள் அந்தப் பகுதியை நன்றாக படித்துக்கொள்ள வேண்டும்.

உயிரி-தாவரவியல் பிரிவில் 35 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். இதில் பகுதி I-ல் 8 ஒரு மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். பொருத்தமான விடையளிக்கவும் என்ற வினாக்களுக்குக் குறியீடு சேர்த்து விடையளிக்கவும். வினாக்கள் பெரும்பகுதி புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும். எனவே, மாணவர்கள் புத்தகப் பாடப்பகுதியை தெளிவாகப் படிக்கவேண்டும். அடுத்து பகுதி II-ல் 2 மதிப்பெண் வினாக்கள் 6 கொடுக்கப்பட்டு 4-க்கு விடையளிக்க வேண்டும். பகுதி III-ல் 3 மதிப்பெண் வினாக்கள் 5 கொடுக்கப்பட்டு 3-க்கு விடையளிக்க வேண்டும். இதில் 19-ம் எண் வினாவுக்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும். பகுதி IV-ல் 5 மதிப்பெண் வினாக்கள் ‘அல்லது’ என்ற வகையில் இரண்டு வினாக்கள் கேட்கப்படும். இரண்டு வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.

உயிரி-விலங்கியல் பாடப் பிரிவிலும் உயிரி-தாவரவியல் போன்றேதான் நான்கு பகுதியிலும் வினாக்கள் கேட்கப்படும். உயிரி-விலங்கியல் பாடப்பகுதியைப் பொறுத்தமட்டில் முதலிலுள்ள நான்கு, மற்றும் கடைசியாக உள்ள மூன்று பாடங்களைப் படித்தால் 80% மதிப்பெண் பெறலாம். வினாத்தாளில் எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என்று உள்ளதோ அதற்கு மட்டுமே விடையளிக்க வேண்டும். கூடுதல் வினாக்களுக்கு விடையளிக்கக்கூடாது. தற்போது உள்ள தேர்வு நடைமுறையில் பல வண்ண பேனாக்களைப் பயன்படுத்தக்கூடாது. நீலநிற, கறுப்புநிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கையேடு வாங்கிப் படிப்பதை விட்டுவிட்டு புத்தகத்தில் உள்ள பாடங்களை முழுமையாகப் படித்து அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகள்.

 தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

மேலும்

X