12ம் வகுப்பு பொதுத் தேர்வு விலங்கியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

3/5/2020 3:41:44 PM

12ம் வகுப்பு பொதுத் தேர்வு விலங்கியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

பன்னிரண்டாம் வகுப்பு விலங்கியல் வினாத்தாள் 70 மதிப்பெண்களைக் கொண்டது. தேர்வு நேரம் 3 மணி நேரம், கூடுதலாக 15 நிமிடம் வினாத்தாள் வாசிப்பதற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வினாத்தாளை நன்கு வாசித்துப் பார்க்க வேண்டும். விலங்கியல் பாடம் மருத்துவப் படிப்புக்கு முதன்மையான பாடம். மருத்துவம் சார்ந்த நுழைவுத் தேர்வுகளுக்கும், துணை மருத்துவப் படிப்புகளுக்கும், பட்டயப்படிப்புகளுக்கும் அவசியமான ஒன்றாகும். இதனை நன்கு புரிந்து படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால்தான் நுழைவுத் தேர்வுகளில் எளிமையாக விடையளிக்க முடியும்.

பகுதி - I
இந்தப் பகுதியில், 15 வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். அனைத்து பாடப்புத்தக வினாக்களையும் படித்து தயார் செய்யவேண்டும். இந்தப் பகுதியில் எதிர்மறை வினாக்கள் (Negative Questions) கேட்கப்படலாம்.

எ.கா:- பின்வருவனவற்றுள் ஒன்று பாக்டீரியா நோய் அல்ல?
அ) சீதபேதி ஆ) டைபாய்டு இ) சாதாரண சளி ஈ) டிப்தீரியா.
இதனை நன்கு வாசித்து படித்து புரிந்துகொண்ட பிறகே விடையளிக்க வேண்டும். விடையை எழுதும்போது குறியீட்டுடன் எழுத வேண்டும். அதாவது, ஆ) என்று எழுதி விடையை எழுத வேண்டும். 1 மதிப்பெண் விடை வினாக்களில் ஏதேனும் குழப்பமாகவோ அல்லது சந்தேகமாகவோ இருந்தால் யோசித்து கடைசி நேரத்தில் எழுதினால் போதும்.

பகுதி - II
இந்தப் பகுதியில் கொடுக்கப்படும் 9 வினாக்களில் ஏதேனும் 6-க்கு மட்டும் விடையளித்தால் போதும். இந்தப் பகுதி வினாக்களுக்கு விடையளிக்கும்போது ஓரிரு வார்த்தைகளில் விடையளிக்க வேண்டும்.

எ:கா:- 4R என்பதன் விளக்கம் தருக. மறுத்தல், குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி. எல்லா அலகுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும். வினா எண் 24-க்குக் கண்டிப்பாக விடையளிக்க வேண்டும்.

பகுதி - III
இந்தப் பகுதியில் கொடுக்கப்படும் 9 வினாக்களில் ஏதேனும் 6-க்கு மட்டும் விடையளிக்க வேண்டும். இதற்கான விடைகள் ஓரிரு வரிகளில் அமைந்திருக்க வேண்டும். ஒருசில வினாக்கள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். (அ) அன்றாட பிரச்னைகளைத் தீர்க்கும் வழிமுறைகளை வினாக்களாகக் கேட்கலாம். இந்த மாதிரியான வினாக்களைப் பலமுறை படித்து புரிந்துகொண்ட பிறகே விடையளிப்பது உத்தமம். வினா எண் 33-க்குக் கண்டிப்பாக விடையளிக்க வேண்டும்.

பகுதி - IV
இந்தப் பகுதியில் ஐந்து வினாக்கள் இருக்கும். அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். தேவையான இடங்களில் படம் வரைய வேண்டும். வினாக்களை நன்கு புரிந்துகொண்டு விடையளிக்க வேண்டும். சில வினாக்கள் புரியாமல் இருக்கும், அதனை பலமுறை நன்கு படித்து விடையளிக்க வேண்டும்.

எ.கா:- தற்போது சுற்றுப்புறத்திலுள்ள மாசுக்களை நீக்குவதற்கு வேதியப் பொருட்கள் பயன்படுத்துவதால் பலவிதமான சுற்றுச்சூழல் கேடுகளை விளைவிப்பதோடு மனிதனுக்கும் பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனைத் தவிர்ப்பதற்கு நீ செய்யக்கூடிய முறை யாது? அதனைப் பற்றிக் கூறுக. இந்த கேள்வியின் எளிய வடிவம்தான் ‘உயிரியத் தீர்வில் நுண்ணுயிர்கள் பங்கு யாது?’ என்ற வினாவினை மேற்சொன்னதுபோலும் கேட்கலாம். எனவே, ஒன்றுக்கு பலமுறை கேள்வியைப் படித்துப் புரிந்து பதிலளிக்க வேண்டும். தேர்வறையில் நம்பிக்கையோடும் பதற்றமில்லாமலும் விடையளித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். (இவர் தரும் மாதிரி வினாத்தாள் அடுத்தடுத்த பக்கங்களில் காணலாம்.)

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்.

மேலும்

X