கால்நடைப் பல்கலைக்கழகத்தின் சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள்!

1/6/2017 2:44:33 PM

கால்நடைப் பல்கலைக்கழகத்தின் சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தகவல் பலகை

அறிவோம்… பயன் பெறுவோம்!

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் இந்தியாவின் முதல் கால்நடை பல்கலைக்கழகம் என்ற பெருமைக்குரியது. இது அனைத்து மாவட்டங்களிலும் தன் கிளை மையங்களை நிறுவியும், தொலைதூரக் கல்வி மூலமும், புத்தகங்கள் வெளியிடுவது, கால்நடைக் கதிர் என்ற பயனுள்ள மாத இதழை வெளியிடுவது, கருத்தரங்கம் / கண்காட்சிகள் நடத்துவது எனப் பல அரிய செயல்களைச் செய்துவருகிறது.

கால்நடைத் தொழில்முனைவோருக்கு, சென்னை வேப்பேரி கால்நடை கல்லூரியில் கால்நடை வணிக மேலாண்மைத் துறை சென்னை, அலமாதியில் பால்பண்ணை தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கி உதவுகிறது.கால்நடை வளர்ப்பு, முயல் / காடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தீவன தயாரிப்பு, பால்பொருட்கள் தயாரிப்பு என 100 வகை பயிற்சிகள் அளிக்கிறது.

சென்னை, காட்டுப்பாக்கம், கால்நடைப் பல்கலைக்கழக விவசாய விஞ்ஞான கேந்திரத்தில் கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் பொருட்களை விற்கக்   ‘கால்நடைச் சந்தை’நடத்தி வெற்றிகரமாக உதவுகிறது. இதுமட்டுமில்லாமல் தொழில்மயமாக மாறிவருகின்ற பால்பண்ணைத் தொழில், கோழிப்பண்ணைத் தொழில், செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, உணவுப்பொருட்கள் பதனிடுதல் போன்ற பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் மனிதவளத் தேவையைக் கருத்தில்கொண்டு பல்வேறு செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வருவாயை உயர்த்தும் நோக்கில் சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள்/மையங்கள் மூலம் நடத்தப்பட்டுவருகின்றன.

செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில், பால்பண்ணை உதவியாளர், பால் பதன நிலைய உதவியாளர், பால் மற்றும் பால் பொருட்கள் தரக்கட்டுப்பாடு உதவியாளர், தீவன ஆலை மேற்பார்வையாளர், தீவனப் பகுப்பாய்வுத் தொழில்நுட்ப உதவியாளர், கால்நடைப் பண்ணை மேலாளர், கோழிப்பண்ணை மேலாளர், கோழிக் குஞ்சு பொரிப்பக மேற்பார்வையாளர், கோழிப் பண்ணை மேற்பார்வையாளர்,  கோழியின இனப்பெருக்கப் பண்ணை மேற்பார்வையாளர், வான்கோழிப் பண்ணை உதவியாளர், கோழிகளுக்கான நோய்த்தடுப்பூசியாளர், ஆய்வக உதவியாளர், அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க அறை உதவியாளர், செல்லப் பிராணிகளுக்கான உடனாள், மீன் உணவு தயாரிக்கும் உதவியாளர், இறால் பண்ணை உதவியாளர், மீன் பதன உதவியாளர் போன்றவற்றிற்கு ஒரு மாதம் முதல் மூன்று மாத காலம் வரை குறுகிய காலப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

சுய வேலைவாய்ப்புப் பயிற்சிக்கான பயிற்சிகளாகப் கறவை மாட்டுப்பண்ணையம், செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பசுந்தீவனம் மற்றும் விதை உற்பத்தி, உறைமோர் மூலம் பால்பொருட்கள் தயாரித்தல், கால்நடைப் பண்ணைக் கழிவினைப் பயன்படுத்துதல்,முயல் வளர்ப்பு, வெண்பன்றி வளர்ப்பு, ஜப்பானியக் காடை வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு,  ஈமு கோழி வளர்ப்பு,  நன்னீர் மீன் வளர்ப்பு, கடல்பாசி உற்பத்தி, அலங்கார மீன் வளர்த்தல் மற்றும் இனப்பெருக்கம் போன்றவற்றுக்கு ஒரு மாதக் குறுகிய காலப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள்/ மையங்களில் பயிற்சியை மேற்கொள்ளலாம். செயல்திறன் மேம்பாட்டு மற்றும் சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகளில் ஆண்டு முழுவதும் சேர்ந்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்கள் பெற விரும்புவோர் பின்வரும் முகவரிகளில் தொடர்புகொள்ளலாம்.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் காலனி, சென்னை -51. தொலைபேசி: 044 25551571சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை  600 007, தொலைபேசி: 044 25381506கால்நடை மருத்துவ அறிவியலுக்கான முதுகலைப்பட்ட ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்- 603 203. காஞ்சிபுரம் மாவட்டம், தொலைபேசி: 044 27529548           

 எம்.ஞானசேகர்

மேலும்

X