பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்களின் தலையீடு எப்படி இருக்கவேண்டும்?

7/13/2017 2:31:17 PM

பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்களின் தலையீடு எப்படி இருக்கவேண்டும்?

தங்கள் வாழ்க்கையை விடத் தங்கள் பிள்ளையின் வாழ்க்கை அப்டேட்டாக அமைய வேண்டும் என்கிற எண்ணமும், அதற்காகத் தங்கள் பிள்ளையைப் தன் வரவுக்கு அப்பாற்பட்டு கடன் வாங்கியாவது பெரிய அளவில் படிக்க வைத்து, அதிக வருமானம் கிடைக்கும் பணிக்கு அவர்களைக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டுவிட வேண்டும் என்கிற பேராசை இன்றைய பெற்றோர்களிடம் நீக்கமற இருக்கிறது.      
   
தங்கள் பிள்ளை எங்கு படிக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? என்ன ஆக வேண்டும்? என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்களுக்குக் குழந்தை பிறந்த நாளிலிருந்தே பிளான் செய்யத் தொடங்கிவிடுகின்றனர். தங்களது குழந்தைக்கு ஆங்கிலக் கல்வி, அரசின் உயர் பதவியைப் பெறுவது, அயல்நாட்டு வேலை போன்ற கணக்கிலடங்காத எதிர்பார்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக, ஆரம்பக் கல்வி முதலே கலெக்டர், டாக்டர்கனவுகளுடன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று டன் கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அளவு கடந்த பேராசைகளை பிள்ளையின் ஆழ்மனங்களில் விதைத்து, அதிகபணம் சேர்ப்பவர்களே வாழ்க்கையில் வெற்றியடைபவர்கள் என்கிற தவறான எண்ணத்தையும் அவர்களுக்குள் ஏற்படுத்தி, அவர்களைப் பணத்தேடல் என்கிற குறுகிய வட்டத்திற்குள் சுற்றி வரச்செய்து விடுகின்றனர்.

பிள்ளைகள் பள்ளியில் படிக்கத் தொடங்கிய வுடனே, அவர்களின் சிறு வயது விருப்பங்கள், விளையாட்டுகளையெல்லாம் விரட்டியடித்துப் புத்தகத்திலுள்ள பாடங்களை அப்படியே மனமை செய்ய வேண்டும் என்கிற ,சிந்தனையை மழுங்கச் செய்யும் வழக்கத்தை அவர்களுக்குள் திணித்து விடுகின்றனர். பிள்ளைகளும் தங்களின் சிறு வயது வேடிக்கை, விளையாட்டுகளில் கிடைக்கும் மகிழ்ச்சிகளை எல்லாம் மறந்து, உற்சாகமிழந்து பாடப்புத்தகங்களில் மூழ்கிப்போய் விடுகின்றனர்.

பெற்றோர்களின் படிப்புத் திணிப்புகள் பிள்ளையின் தொடக்கக் கல்வியில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் பெட்ரோல் விலைபோல அதிகரித்துக்கொண்டேபோகிறது. ஒன்பதாம் வகுப்புக்குச் செல்லும் நிலையில் அதன் வேகம் மேலும் அடுத்த கட்டத்தை தொடுகிறது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான், தங்கள் பிள்ளைகளுக்கு பிளஸ் 1-ல் தாங்கள் விரும்பும் பாடம் கிடைக்கும் என்கிற எண்ணத்தில் பத்தாம் வகுப்பில் படிக்கும் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் கொடுக்கும் உளவியல் நெருக்கடி மிகவும் கொடூரமானதாக இருக்கிறது.

இவை பத்தாம் வகுப்புடன் முடிவடைந்து விடுவதில்லை, அடுத்தும் தொடரத்தான் செய்கின்றன. பெற்றோர் விரும்பும் பள்ளியில், விரும்பும் பாடத்தில் பிளஸ்1 வகுப்பில் தங்கள் பிள்ளைகளுக்கு இடம் கிடைத்தாலும் பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான் தாங்கள் விரும்பும் கல்வியைப் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்க முடியும் என்கிற எண்ணத்துடன் அவர்களுக்குக் குறிப்பிட்ட சில பாடங்களில் தினமும் ட்யூஷன், லீவிலும் ஸ்பெஷல் கிளாஸ் என்று எக்கச்சக்க பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளில் ‘அதிக மதிப்பெண்கள்’ என்பதே லட்சியம். பிளஸ்டூ படிக்கும் மாணவர்களுக்குப் பெற்றோர்களால் கொடுக்கப்படும் மன அழுத்தம் மிக அதிகம்.
                                                       
தங்கள் பிள்ளைகளின் படிப்பு சிறக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களுக்கும் சமூக ரீதியாக மனஅழுத்தங்கள் உண்டு. தங்கள் பிள்ளையின் தொடக்கக் கல்வி சிறப்பாக அமைய வேண்டுமென்பதற்காக, இலவசக் கல்வியளிக்கும் அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து, அதிக பணம் செலுத்தித் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்வி தரும் பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர்.

தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்குத் தேவையான பணத்திற்காகத் தங்கள் வருமானத்தில், தங்கள் தேவைகளையெல்லாம் சுருக்கிக் கொண்டு, அதில் மீதமாகும் பணத்தினைச் சேர்த்து வைத்துச் செலவழிக்கும் பெற்றோர்கள் இருக்கின்றனர். தாங்கள் படிக்காவிட்டாலும், தங்கள் பிள்ளைகளின் படிப்பு எவ்வகையிலும் குறைந்து போய்விடக் கூடாது என்பதற்காகத் தங்கள் பிள்ளைகளைப் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், தனியாக, அதிக பணத்தைச் செலவழித்துத் தனிப்பயிற்சிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களும் உண்டு.

தங்கள் பிள்ளையின் படிப்பிற்காக எத்தனையோ கடன்களை வாங்கிச் செலவு செய்யும் பெற்றோர்களும் இங்குண்டு. பிள்ளைகளின் படிப்புகளுக்காகப் பெற்றோர்களின் விருப்பங்களும், அதற்காக அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளும் மிக அதிகமாகத்தான் இருக்கின்றன. வருங்காலத்தில் தங்கள் பிள்ளை வளமாய் வாழ வேண்டுமென்பதற்காகத் தங்களின் சுகபோகங்களை எல்லாம் இழந்து நிற்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

இருப்பினும், தங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்காகத் தொடர்ந்து, தங்கள் பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்கள் அதிகமான கவனம் செலுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். தங்களின் பிள்ளை வசதியோடு இருந்தால், வயதான காலகட்டத்தில் தங்களின் வாழ்க்கை பாதுகாப்பாகவும், சிறப்பானதாகவும் அமையும் என்கிற எண்ணத்தில் பெற்றோர்கள் செய்த செயல்பாடுகள் அனைத்தும் இன்று தவிடுபொடி ஆகி வருகின்றன.

பெற்றோர்களின் விருப்பப்படி வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பிள்ளைகள் பலர், தங்கள் பெற்றோர்களுக்குத் தேவையான பணத்தைச் செலவழிக்கத் தயாராக இருக்கிறார்களே தவிர, அவர்களைத் தங்களுடன் சேர்த்து பராமரிக்க தயாராக இருப்பதில்லை. இதனால் பல பெற்றோர்கள் முதுமையில் தளர்ச்சியில் தனிமையில் மனம் குமைந்து கிடக்கிறார்கள்.   
 
பணம் ஒன்றுதான் வாழ்க்கை என்று நினைத்துப் பெற்றோர்கள் செதுக்கி உருவாக்கிய பிள்ளைகளால் எந்தவொரு மகிழ்ச்சியையும் பெற முடியாமல் தவிக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களுக்கான சுதந்திரத்தை அனுமதித்து அவசிய வழிகாட்டுதலைத் தேவைப்படும்போது  தந்தால் சமூகத்துக்குப் பங்களிக்கும் நாடுபோற்றும் நல்மனிதர்களாக அவர்கள் உருவாவது நிச்சயம்.  

- முத்துக்கமலம்

மேலும்

X