நானோ டெக்னாலஜி தருகிறது நிச்சய வேலைவாய்ப்பு!

7/13/2017 2:32:15 PM

நானோ டெக்னாலஜி தருகிறது நிச்சய வேலைவாய்ப்பு!

இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பமான நானோ தொழில்நுட்பம் (Nanotechnology) 21 ஆம் நூற்றாண்டில் முதன்மையான இடத்தைப் பிடிக்கும் என்கின்றனர். இந்தியா உட்பட உலகமெங்கும் நானோ தொழில்நுட்பம் குறித்த ஏராளமான படிப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

படிப்புகள்
இந்தியாவில் நானோ தொழில்நுட்பம் குறித்த படிப்புகளில் நானோ அறிவியல், நானோ தொழில்நுட்பம் எனும் இரு பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்புகளும் (B.Sc. / B.E or B.Tech), முதுநிலைப் பட்டப்படிப்புகளும் (M.Sc / M.Tech) இடம் பெற்றிருக்கின்றன. முதுநிலைப் பட்டப்படிப்புகளில் நானோ தொழில்நுட்பம் (Nano-Technology) எனும் பொதுவான பாடப்பிரிவு தவிர, தற்போது பாலிமர் நானோ தொழில்நுட்பம் (Polymer Nano-Technology), உடல் நலத்திற்கான நானோ தொழில்நுட்பம் (Health Care Nano Technology) என்பது போன்ற சில சிறப்புப் பாடங்களுடனான முதுநிலைப் பட்டப்படிப்புகளும் உள்ளன.

சில கல்லூரிகளில் நானோ அறிவியல், நானோ தொழில்நுட்பப் பாடங்களில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகள் (M.Sc / M.Tech) இடம் பெற்றிருக்கின்றன. இதுபோல் இரட்டைப் பட்டப்படிப்பு (Dual Course) முறைகளிலும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் உள்ளன.   

நானோ தொழில்நுட்பம் குறித்த ஆய்வுப் படிப்புகளாக நானோ அறிவியலில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மற்றும் முனைவர் (Ph.D) பட்டப்படிப்புகளும், நானோ தொழில்நுட்பத்தில் முனைவர் (Ph.D) பட்டப்படிப்பும் உள்ளன.  ஒரு சில கல்லூரிகளில் நானோ அறிவியலில் முதுநிலைப் பட்டயப்படிப்பும், சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

கல்வித் தகுதிகள்
பொதுவாக பிளஸ்டூவில் அறிவியல் பாடப்பிரிவுகளைப் படித்திருப்பது பொதுக்கல்வித் தகுதி. ஒவ்வொரு நிலையிலான படிப்புகளுக்கும் தேவையான கல்வித் தகுதி விவரங்கள் கீழேயுள்ளன.

இளநிலைப் பட்டப்படிப்பு
மூன்று ஆண்டு நானோ அறிவியல் (B.Sc) இளநிலைப் பட்டப்படிப்பிற்கு பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் (PCM) அல்லது இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (PCB) பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி தேவை. நான்கு ஆண்டு நானோ தொழில்நுட்பம் (B.Tech) இளநிலைப் பட்டப்படிப்பிற்கு பிளஸ்டூவில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் (PCM) பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி தேவை. சில மாநிலங்களில் அரசு இட ஒதுக்கீட்டு நடைமுறைகளுக்கேற்ப மதிப்பெண் தளர்வுமுண்டு.

முதுநிலைப் பட்டப்படிப்பு
இரண்டு ஆண்டு அறிவியல் (M.Sc) முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு நானோ அறிவியல் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் 60% தேர்ச்சியோடு இளநிலைப் பட்டம் (B.Sc) பெற்றிருக்க வேண்டும். நானோ தொழில்நுட்பம் (M.Tech) முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு 60% தேர்ச்சியோடு பொறியியலில் இளநிலைப் பட்டம் (B.E/B.Tech) அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல், இயற்கை அறிவியல், கணிதம், மின்னணுவியல் (Electronics), கருவியியல் (Instrumentation) போன்ற அறிவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.Sc) தேவை.

ஆய்வுப் படிப்புகள்
நானோ அறிவியல் பாடத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மற்றும் முனைவர் (Ph.D) போன்ற ஆய்வுப் படிப்புகளுக்கு நானோ அறிவியல் பாடத்தில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். நானோ தொழில்நுட்பம் பாடத்தில் முனைவர் (Ph.D) பட்டப்படிப்பிற்கு ஏதாவதொரு பொறியியலில் முதுநிலைப்பட்டம் (M.E/M.Tech) அல்லது பொறியியலில் இளநிலைப் பட்டம் (B.E/B.Tech) அல்லது ஏதாவதொரு அறிவியல் பாடத்தில் முதுநிலைப்பட்டம் (M.Sc) பெற்றிருக்க வேண்டும்.

முதன்மைக் கல்லூரிகள்
நானோ தொழில்நுட்பம் குறித்த படிப்புகளில் ஒடிசாவிலுள்ள Central Institute of Plastics Engineering & Technology (CIPET)), மும்பை, கான்பூர், டெல்லி, சென்னை மற்றும் கௌகாத்தியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IIT), பெங்களூரிலுள்ள Indian Institute of Science, உத்தரப்பிரதேசம், நொய்டாவிலுள்ள Amity University, குருஷேத்திரா மற்றும் காலிகட்டிலுள்ள National Institute of Technology, கொச்சியிலுள்ள Amritha Centre for Nanosciences, போபாலிலுள்ள Maulana Azad National Institute of Technology, தஞ்சாவூரிலுள்ள Sasthra University. தமிழ்நாட்டில் சென்னை SRM University, வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் Vellore Institute of Technology உட்பட தமிழ்நாட்டின் பல பொறியியல் கல்லூரிகளில் நானோ தொழில்நுட்பம் குறித்த முதுநிலைப் பட்டப்படிப்புகள் உள்ளன.

மாணவர் சேர்க்கை
நானோ அறிவியல் (B.Sc) இளநிலைப் பட்டப்படிப்பிற்கு பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நானோ தொழில்நுட்பம் (B.Tech) இளநிலைப் பட்டப்படிப்பிற்கு இந்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள Indian Institute of Technology, National Institute of Technology போன்ற கல்வி நிறுவனங்களில் பிளஸ் டூ மதிப்பெண்களுடன் இணை நுழைவுத் தேர்வு (முதன்மை) (JEE (Main)) தேர்வில் பெற்ற மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் பிளஸ்டூவில் தொடர்புடைய பாடங்களில் எடுத்த மதிப்பெண்களைக்கொண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நானோ அறிவியல், நானோ தொழில்நுட்பம் ஆகிய முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் மூலம் சேர்க்கை நடைபெறுகின்றன. நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் குறித்த ஆய்வுப் படிப்புகளுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் அறிவியல் தொடர்புடைய பாடங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (National Eligibility Test) மற்றும் GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.  

வேலைவாய்ப்புகள்
நானோ தொழில்நுட்பம் படித்த மாணவர்களுக்கு மருந்துத் தயாரிப்பு (Pharmaceutical), உயிரித் தகவலியல் (Bio-Informatics), நானோ மருத்துவம் (Nano - Medicine), நானோ நச்சியல் (Nano Toxicology), நானோ ஆற்றல் உற்பத்தி (Nano - Power Generating), முதல்நிலை உயிரணு வளர்ச்சி (Stem Cell Development) போன்ற பல்வேறு துறைகளிலான நிறுவனங்களில் முதன்மையான வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.

இது போல், உடல் நலம் (Health), சுற்றுச்சூழல் (Environment), வேளாண்மை (Agriculture), மரபியல் (Genetics), தடய அறிவியல் (Forensic Science), உயிரித் தொழில்நுட்பம் (Bio-Technology), தகவல் மற்றும் ஊடகம் (Communication & Media), விண்வெளி ஆய்வு (Space Research), உணவு மற்றும் பானங்கள் (Food & Beverage) போன்ற பிற நிறுவனங்களிலும் குறிப்பிடத்தக்க அளவிலான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.

மேலும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள் போன்றவைகளில் ஆசிரியர் மற்றும் ஆய்வாளர் பணியிடங்கள் அதிகளவிலுள்ளன. நானோ தொழில்நுட்பம் படிப்பவர்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அதிக சம்பளத்துடனான வேலைவாய்ப்பு நிச்சயம் என்பதால் இப்படிப்புகளில் சேர்வதற்காக மாணவர்கள் அலைமோதி வருகின்றனர்.

- உ.தாமரைச்செல்வி   

X