அருவி மீது எதிர்நீச்சல் மீன்கள்! அறிவியல் ஆயிரம் - 4

7/13/2017 2:33:02 PM

அருவி மீது எதிர்நீச்சல் மீன்கள்!  அறிவியல் ஆயிரம் - 4

சிலவகை மீன்களை அழகுக்காக வீட்டின் கண்ணாடித் தொட்டிகளில் வளர்க்கிறோம். ஆனால் இயற்கை தன் அழகை நமக்கு காட்டுவதற்காகச் சில மீன்களை வளர்க்கிறது. அதில் ஒன்றுதான் சால்மன் மீன். சில மீன்களை நாம் கடல் மீன்கள், நன்னீர் மீன்கள் என்றும் வகைப்படுத்தலாம். சால்மன் மீன்களை இப்படி நீங்கள் எந்த வதைப்பாட்டுக் குள்ளும் அடைக்க முடியாது.

இவை நன்னீர் பிளஸ் கடல் நீரிலும் எதிர்நீச்சல் போடுபவை. இந்த மீன்கள் எங்கு, எப்படி வாழ்கின்றன? சின்ன ப்ளாஷ் பேக். அயர்லாந்தில் ‘சால்மன்’ மீன்களை மென்று தின்றால் அறிவு லைட்ஹவுஸ் போல வளரும் என்று நம்பிக்கை. அப்புறமென்ன மார்க்கெட்டில் சால்மன் மீன்களுக்கு செம டிமாண்ட்.

வேல்ஸ் இலக்கியத்தில் வரும் ஒரு முக்கிய பாத்திரமான “மேபோன் - ஆப் - மேட்ரோன்” கடலுக்கு அடியில் போய் ஒளிந்துகொள்கிறான். அவன் ஒளிந்திருக்கும் இடத்தை அறிந்த ஒரே விலங்கு இந்த சால்மன்தான் என்பது இங்கிலாந்துக்காரர்களின் ஃபார்மல் நம்பிக்கை. வட அட்லாண்டிக், பசிபிக் கடல் பகுதியிலும் அதிகம் வாழும் மீன்கள் இவை.

பெரும்பாலும் நீரோட்டமுள்ள நதிக்கரை ஓரத்தில் வாழ்வதால் இவற்றின் வாழ்க்கையில் எதிர்நீச்சல் சகஜம். சினூக் என்று ஒரு வகை சால்மன் மீன்கள் 14 கிலோ வரை வளரக்கூடியது. குட்டியூண்டு மீன்  வளர்ந்த மீனாக மாறும்போது பல்வேறு உடல் உறுப்புகள் அப்டேட்டாகி கொண்டே இருக்கின்றன. இந்தப் புறத்தோற்ற மாற்றம்தான் இம்மீன்களை நன்னீரில் பிறக்க வைத்து கடல்நீரில் வாழ வைக்கிறது.

நன்னீரிலிருந்தும், கடல்நீரிலிருந்தும் ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதற்கான புறத்தோற்றம் இதன் ஸ்பெஷல் பிளஸ் பாய்ண்ட். சால்மன் மீன்கள் நமக்கு செய்யும் உதவி சாதாரணமானது அல்ல. தங்களையே தியாகம் செய்து அவை மனிதர்களுக்கு உதவி செய்யும் இயல்பு நம்மைச் சிலிர்க்க வைக்கும்.

நதிக்கரையோரம் வாழும் இம்மீன்கள் கரடிகள் மெயின்டிஷ். இந்த மீன்களை பிடித்துச் செல்லும் காட்டுக் கரடிகள் பாதியை மட்டுமே தின்று மீதியை அப்படியே காட்டில் விட்டுச் சென்றுவிடுகின்றன. இப்படி கழிவாகக் கிடக்கும் மீன்கள் அழுகி, மட்கிப் போய் மண்ணுக்குள் கலந்து பூமியில் நைட்ரஜன் சத்தை அதிகரிக்கிறது. காட்டில் தாவரங்களும், மரங்களும் நன்றாகச் செழித்து வளர்கின்றன. இது இயற்கைக்கு சால்மன் மீன்கள் தரும் பெரும் கொடை.

கரடிகளை விட சால்மன் மீன்களுக்கு பெரிய எதிரியாக இருப்பது ஒலி மாசுதான். 210 டெசிபலுக்கு தாண்டும் ஒலியால் சால்மன் மீன்கள் குழப்பத்திற்கும் உள்ளாகி, சில மீன்கள் இறந்தும் விடுகின்றன. அருவிகளில் நீர் குறைவதாலும், வெப்பம் அதிகரிப்பதாலும் கூட சால்மன் மீன்கள் இறக்கின்றன. அது சரி, எதிர்நீச்சல் எதற்காக? நன்னீரில் பிறக்கும் இம்மீன்கள், கடல் நீருக்கு வந்து வாழ்பவை மீண்டும் இனப்பெருக்கத்திற்காக நன்னீருக்குத் திரும்புகின்றன.

தாய்வீடு திரும்பும் பாதையில்தான் இவை ஆயிரம் கி.மீ மேல் எதிர்நீச்சல் போடுகின்றன. இந்த எதிர் நீச்சலின் பயணம் மிகவும் நீளமானது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கின்றன. அமெரிக்காவின் மத்திய இடாகோவில் சால்மன் மீன்கள் 1400 கி.மீ வரை எதிர்நீச்சல் போட்டுச் செல்கின்றன. “2” கிலோ மீட்டர் உயரமான அருவியில் எதிர்நீச்சல் போட்டு மேலே ஏறுகின்றன. மரணத்தைக் கண்டுகூட அஞ்சாமல் எதிர்நீச்சல் போடும் சால்மன் மீன்கள் நமக்கு நைட்ரஜனை மட்டும் தருவதில்லை. வாழ்வில் என்றும் கைவிட்டு
விடக்கூடாத போராட்ட குணத்தை அல்லவா கற்றுத் தருகின்றன!

- ஆதலையூர் சூரியகுமார்

X