உலகத் தமிழ் இணைய மாநாடு பங்கேற்போம் வாங்க!

8/10/2017 6:11:03 PM

உலகத் தமிழ் இணைய மாநாடு பங்கேற்போம் வாங்க!

கனடா நாட்டில் International Forum for Information Technology (INFITT)) அமைப்பு “இணையவழிக் கற்றல் - கற்பித்தலின் இன்றைய நிலை” எனும் தலைப்பில் உலகத் தமிழ் இணைய மாநாட்டினைக் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்போரோக் வளாகத்தில்  வரும் அக்டோபர் 7 முதல் அக்டோபர் 9 வரையிலான (7-10-2017 முதல் 9-10-2017) மூன்று நாட்கள் நடத்தவிருக்கிறது. இந்த மாநாட்டுக்குழுவின் தலைவரும் தகவல் தொழில்நுட்பப் பொறியாளருமான கனடாவில் வசித்துவரும் செந்தூரன் நடராசா இம்மாநாடு குறித்துப் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:

1995 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 1 சதவிகிதம் பேர் மட்டுமே இணையம் பயன்படுத்தினர். ஆனால், 2016 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை உயர்வு 40%.  இன்னும் ஐந்தாண்டுகளில் 70% உயரும் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் 46.1% பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

தமிழ்மொழியிலான இணைய வழிக் கற்றல் - கற்பித்தலில் இன்றைய நிலையைப் பற்றிய செய்திகளை உலகம் முழுவதுமுள்ள பேராசிரியர்கள், கல்வியியல் வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன், உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் (International Forum for Information Technology (INFITT)) “இணையவழிக் கற்றல் - கற்பித்தலின் இன்றைய நிலை” எனும் தலைப்பிலான உலகத் தமிழ் இணைய மாநாட்டினை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.

இதில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய ராஜ்ஜியம், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், கணினி மற்றும் இணையத்தில் தமிழ் மொழியினைப் பயன்படுத்தி வரும் தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தங்களது ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்க உள்ளனர்.

இம்மாநாட்டிற்காகப் பேராசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கணினி மற்றும் இணையம் தொடர்புடைய பணிகளில் ஆர்வமுடையவர்களிடமிருந்து ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. ஆய்வுக்கட்டுரைகள் கீழ்க்காணும் தலைப்புகளைச் சார்ந்ததாக அமையவேண்டும்.  

1. கணினியில் தமிழ்ப் பேச்சு மற்றும் சொற்பகுப்பு ஆய்வு
2. தமிழ் மின் தரவு மற்றும் மின்னகராதிகள்
3. இணையத்தொழில்நுட்பத்தில் தமிழ் மொழி மற்றும் திறவூற்றுச் செயலிகள்
4. கணினி வழித் தமிழ் எழுத்து உணரிச் செயற்பாடுகள்
5. தமிழில் சிந்தனைத்திறன் கணினிச் செய்நிரல்கள்
6. மின்னாளுமை வழி அரசும் தமிழ்த் தகவல் தொழில்நுட்பமும்
7. கையடக்கக் கருவிகளில் தமிழ்
8. தரவகமும் இணைய வழித் தமிழ்க் கற்றல் கற்பித்தலும்
9. கற்றல் கற்பித்தலில் தமிழ்மொழித் தொழில்நுட்பம்
10. இணையவழித் தமிழ்க் கல்வி கற்றல்
11. பெருந் தரவகமும் தமிழ் மொழிகற்றலும்
12. செயற்கை அறிவின்  மூலம் கற்றல் கற்பித்தலின் வளர்ச்சி.

கட்டுரையின் ஆய்வுச் சுருக்கத்தினை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் மின்னஞ்சலில் அனுப்பித்தரலாம். தேர்வான ஆய்வுச் சுருக்கங்களின் அறிவிப்பு ஆகஸ்ட் 25 அன்று மாநாட்டிற்கான இணையதளத்தில் (அ) கட்டுரையாளருடைய மின்னஞ்சல் வழியாகத் தகவல் தெரிவிக்கப்படும். அதன்பின், ஆய்வுக் கட்டுரையினை நிறைவு செய்து செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டுரையைச் சமர்ப்பிக்கும் ஆய்வாளர்களும், மாநாட்டில் கலந்துகொள்ளும் பார்வையாளர்களும் பதிவுக்கட்டணம் $100 செப். 5 க்கும் முன்னதாகச் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து சிறந்த 5 கட்டுரைகள் தேர்வு செய்யப்பெற்று, ஒரு கட்டுரைக்கு தலா அமெரிக்க டாலர் $200 பரிசு வழங்கப்படும். மாநாட்டுக்கு வரப்பெற்ற கட்டுரைகள் தொகுக்கப்பெற்று நூலாக வெளியிடப்படும்.

கனடா மாநாட்டில் பங்கேற்கும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் முன்பதிவுப்படி 3 நாட்கள் தங்குமிடவசதியும், நாட்டைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பும் உண்டு. இம்மாநாட்டின் ஒரு பகுதியாக முப்பதுக்கும் அதிகமான அரங்குகளைக் கொண்ட கண்காட்சி ஒன்றும் நடத்தப்படவிருக்கிறது. இக்கண்காட்சி அரங்கில், கணினி மற்றும் இணையம் பயன்பாட்டிற்கான பல்வேறு தமிழ் மென்பொருட்கள் காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன.

இக்கண்காட்சி அரங்கில் இடம் பெற்றிருக்கும் தமிழ் மென்பொருட்களைச் சலுகைவிலையில் பெறலாம். மேலும் இம்மாநாட்டில் தமிழ் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கமும், புதிய தொழிலைத் தொடங்குவதற்கான தொடக்கநிலை முனைவுப் பயிற்சிகளும் (Tamil Entrepreneurs Forum) உண்டு.   

இம்மாநாட்டில் அமைக்கப்படும் மக்கள் அரங்கம் எனும் பொது நிகழ்வில் கனடாவாழ் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முகமாகவும், அவர்களுக்குத் தமிழ்க் கணினியை அறிமுகம் செய்யும் நோக்கத்திலும், பல்வேறு தமிழ்க் கணினி அறிஞர்களின் உரையும், புதிய தொழில்நுட்பத்தில் தமிழின் பயன்பாட்டையும் எடுத்துச் சொல்லும் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகளும் இடம் பெறவிருக்கின்றன.

உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம், இந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டினைச் சிறப்பாக நடத்துவதற்காக, உள்ளூர் ஏற்பாட்டுக் குழு (Local Organizing Committee), மாநாட்டு ஆய்வரங்கக் குழு (Conference Programme Committee), பன்னாட்டு ஏற்பாட்டுக் குழு (International Organizing Committee), பரிசுகள் தேர்வுக்குழு (Awards Committee) எனும் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இக்குழுக்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். இம்மாநாடு குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய http://www.infitt.ca/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது இம்மாநாட்டின் பன்னாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவரும், திருச்சிராப்பள்ளி, நவலூர் குட்டப்பட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் துரை. மணிகண்டன் - 9486265886 (அ) மாநாட்டு ஆய்வரங்கக் குழுத் தலைவரான பேராசிரியர் அ. காமாட்சி(சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.) - 7904377820 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். info@infitt.ca எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

- முத்துக்கமலம்

X