வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான திறன் தணிக்கைச் சோதனைத் தேர்வு!

11/21/2017 2:18:19 PM

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான திறன் தணிக்கைச் சோதனைத் தேர்வு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

திறன் தேர்வு

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த இந்தியக் குடிமக்கள், இந்தியாவில் மருத்துவத் தொழிலைச் செய்வதற்கான அனுமதியைப் பெறுவதற்காக நடத்தப்படும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் திறன் தணிக்கைச் சோதனைத் தேர்வு (Foreign Medical Graduate Screening Test - FMGE) வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வுக்கான பொது அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டு மருத்துவப் படிப்பு: இந்தியாவிலிருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கல்வி (எம்.பி.பி.எஸ்.) படிப்பதற்கு இடம் கிடைக்காத நிலையில், தங்களுடைய விருப்பத்திற்கும், பண வசதிக்கும் ஏற்றதாகக் கருதும் உக்ரைன், பல்கேரியா, ஜியார்ஜியா, ரோமானியா, செக் குடியரசு மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இருக்கும் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கல்வியைப் (எம்.பி.பி.எஸ்.) பலர் படித்துவிட்டு இந்தியா திரும்புகின்றனர்.

இப்படி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவக் கல்வி படித்தவர்கள், இந்தியாவில் மருத்துவத் தொழிலைச் செய்வதற்கான அனுமதியினை அளிக்கும் ஒரு தேர்வாக 15.03.2002க்குப் பின்னர் இந்திய மருத்துவக் குழு (Medical Council of India), தேசியத் தேர்வுகள் வாரியம் (National Board of Examinations) மூலம் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் திறன் தணிக்கைச் சோதனைத் தேர்வு (Foreign Medical Graduate Screening Test (FMGE)) ஒன்றினை நடத்த முடிவு செய்தது. இத்தேர்வு 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டிலிருந்து இத்தேர்வு ஆண்டுக்கு இருமுறையாக ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்: இந்தியக் குடிமக்களாக இருப்பவர்கள் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் இந்தத் தேர்வினை எழுதமுடியும். கடந்த ஆண்டுகளில் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியில் இளநிலைப் பட்டப்படிப்பு படித்துத் தேர்ச்சி பெற்றவர்களும், 30.11.2017 ஆம் தேதிக்கு முன்பாக இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறும் நிலையிலிருப்பவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவக் கல்விக்குழு வெளியிட்டுள்ள திறனாய்வுத் தேர்வுக்கான தகுதி குறித்த கூடுதல் விவரங்களை அறிய www.mciindia.org எனும் இணையதளத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://fmge.nbe.edu.in என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்பாகத் தகவல் குறிப்பேட்டை முழுமையாகப் படித்துத் தேவையான ஆவணங்களை முன்பே தயார் செய்து வைத்துக்கொள்வது நல்லது. விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ.5500-ஐ கிரெடிட்/டெபிட் போன்ற கார்டுகளைப் பயன்படுத்தியும், இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்தியும் செலுத்தலாம். விண்ணப்பம் மற்றும் பதிவுகள் செய்திடக் கடைசி நாள் 27.11.2017.

தேர்வு மையங்கள்: விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரிய விவரங்களை விண்ணப்பத்தில் முழுமையாகப் பதிவு செய்துகொள்வதுடன், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 24 தேர்வு மையங்களில் ஏதாவதொரு மையத்தையும் தேர்வு செய்து குறிப்பிட வேண்டும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முதல் வாய்ப்பு எனும் அடிப்படையில் தேர்வு மையங்களுக்கான ஒதுக்கீடு இருக்கும் என்பதால் முன்கூட்டியே பதிவு செய்துகொள்வது சரியானதாக இருக்கும்.

தேர்வு வழிமுறை: இந்தத் திறனாய்வுத் தேர்வு கணினி வழியிலான, ஆங்கிலத்தில் பதில் தேர்வு செய்யக்கூடிய தேர்வாக இருக்கும். இந்தத் தேர்வுப் பகுதிக்கு 150 மதிப்பெண்கள் வீதம் இரு பகுதிகளாக (Part A & Part B) மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைப்பு எதுவும் இல்லை. தேர்வு நாளில் தேர்வு மையத்தில் முதல் பகுதித் தேர்வுக்குக் காலை 9.00 மணி முதல் 9.15 மணிக்குள் சென்று விவரத்தினைத் தெரிவித்திட வேண்டும்.

காலை 9.30 மணிக்குள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுத் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவர். காலை 9.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை தேர்வு எழுத வேண்டியிருக்கும்.

இரண்டாம் பகுதித் தேர்வுக்கு மதியம் 2.30 மணி முதல் 2.45 மணிக்குள் சென்று விவரத்தினைத் தெரிவித்திட வேண்டும். மதியம் 3.00 மணிக்குள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுத் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவர். மதியம் 3.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வினை எழுத வேண்டியிருக்கும்.    

அனுமதி அட்டை: விண்ணப்பப் பதிவு நிறைவு செய்தவர்களுக்கு அனுமதி அட்டை மற்றும் தேர்வுக்கான முழுமையான விவரங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும், இந்த அனுமதி அட்டையினை அச்சிட்டு எடுத்து, ஒளிப்படத்திற்கான இடத்தில் குறிப்பிட்ட அளவிலான வண்ணத்திலான ஒளிப்படத்தை ஒட்டிக்கொண்டு, அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அளிக்கப்பட்டிருக்கும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, வருமான வரிக்கான நிரந்தரக் கணக்கு எண், கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஒன்றையும் உடன் எடுத்துக்கொண்டு தேர்வுக்குச் செல்ல வேண்டும். இந்தத் தேர்வு 21.12.2017 அன்று நடைபெற இருக்கிறது. இத்தேர்வின் முடிவுகள் 21.1.2018 அன்று http://fmge.nbe.edu.in எனும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

இத்தேர்வுக்கான (FMGE) பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புவோர் மேற்காணும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது 1800-11-1700 அல்லது 1800-11-1800 எனும் கட்டணமில்லாத் தொலைபேசி எண்
களில் அலுவலக நேரத்தில் தொடர்புகொண்டு பெறலாம்.

- தேனி மு. சுப்பிரமணி

X