மாணவர்களைப் பட்டை தீட்டிய வைரமாக்கும் திண்ணைப் பயிற்சிப் பட்டறை!

11/21/2017 2:26:49 PM

மாணவர்களைப் பட்டை தீட்டிய வைரமாக்கும் திண்ணைப் பயிற்சிப் பட்டறை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்வதுடன், படித்து முடித்தவுடன் உயர்கல்விக்கு வழிகாட்டி அவர்களை அரசுப் பணியில் அமர்த்துவதையே நோக்கமாகக்கொண்டு தேனியில் செயல்பட்டு வருகிறது திண்ணைப் பயிற்சிப் பட்டறை. இதன் ஒருங்கிணைப்பாளரும்,  அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியருமான செந்தில்குமாரிடம் திண்ணை அமைப்பின் செயல்பாடுகள் குறித்துப் பேசினோம்.

“ஓர் ஆசிரியரது கடமை மாணவர்களைத் தனது பாடத்தில் தேர்ச்சிபெறச் செய்வது அல்லது அடுத்த மேல் வகுப்பிற்கு நகர்த்து வதோடு முடிந்துவிடுவதில்லை. மாணவர்களை அவர்களது இலக்கினை அடையும் வரை வழிகாட்டுவதும் அவர்களைச் சமூக ஏற்புடைய ஆளுமைகளாக உருவாக்குவதும் ஆசிரியரது கடமையாகும்.

என்னிடம் பயின்ற அறிவும் திறனும் வாய்ந்த மாணவர்களைச் சில ஆண்டுகள் கழித்து சந்திக்கும்போது, எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் இல்லாமல் மிகச் சாதாரண நிலையில் இருப்பதையும் சிலர் எதிர்மறை மனிதர்களாக இருப்பதையும் கண்டு மனம் வெதும்பினேன்.

உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பினைப் பெறுவதில் சரியான வழிகாட்டுதலும் உதவியும் கிடைக்காததே இதற்குக் காரணம் என்பதையும் உணர்ந்தேன். அதற்காக நான் பணிபுரியும் பள்ளியின் முன்னாள் மாணவர்களைத் தொகுத்து TNPSC, TET போன்ற போட்டித் தேர்வுகளுக்கு நான் பணிபுரியும் பள்ளியிலேயே மாலைநேரத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தினேன்.

2013-ல் நடைபெற்ற TNPSC Group IV போட்டித் தேர்வில் 5 பேர் தேர்ச்சி பெற்று அரசு ஊழியர்களாயினர். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பயிற்சிக்கு வரத்தொடங்கினர்.

அப்போது எனது ஆசிரிய நண்பர்களும், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி யும் மிகப்பெரிய உதவிகளைச் செய்தனர். ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராமமூர்த்தி, ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன், அந்தோனிராஜ் மற்றும் சமூக ஆர்வலர் அசோகன் ஆகியோரது வழிகாட்டுதலின்படி திண்ணை அமைப்பு உருவாகியது” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

“தேனி என்.ஏ.கொண்டுராஜா நினைவு உயர்நிலைப் பள்ளியில் இலவசமாகப் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்குப் பள்ளியின் செயலர் சிங்கப்பராஜா அனுமதி வழங்கியதையடுத்து அங்கு வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது.

பள்ளியின் தலைமையாசிரியர் முருகன் சிறப்பான ஒத்துழைப்பு அளித்துவருகிறார். தற்போது ஆண்டுக்கு மூன்று பயிற்சி பட்டறைகள் வாயிலாகச் சுமார் ஆயிரம் இளைஞர்களுக்குக் கட்டணமின்றி போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.

கடந்த ஐந்தாண்டுகளில் ஒன்பது பயிற்சி பட்டறைகள் வாயிலாக சுமார் நான்காயிரம் இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து நானூற்றுக்கும் மேற்பட்ட வெற்றியாளர்களை உருவாக்கியுள்ளோம்.

இருபதுக்கும் மேற்பட்ட பயிற்றுநர்கள் பாடவாரியாகப் பயிற்சியளித்து வருகின்றனர். திண்ணையின் பயிற்சிப்பட்டறையில் இணையும் மாணவர்களை அரசு ஊழியர்களாக்குவது என்பது எங்களது இரண்டாவது நோக்கமே! அவர்களை சமூகப் பொறுப்புணர்வு உடையவர்களாக மாற்றுவதுதான் திண்ணையின் முதல் நோக்கம்” என்றார்.

‘சாளரம்’ - உயர்கல்வித் திட்டம்திண்ணை அமைப்பின் எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் அவர் விவரித்தபோது, “திண்ணைப் பயிற்சிப் பட்டறையானது ‘ஏழ்மையும் அறியாமையும் தனிமனிதக் கனவுகளை அழித்துவிட அனுமதியோம்’ - என்னும் இலக்குடன் அடுத்த முயற்சியாக ‘சாளரம்’ உயர்கல்வித் திட்டம் உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் பயில இடம் கிடைத்தும் ஏழ்மையினால் கற்க இயலாத மாணவர்களின் கல்லூரிக் கனவினை நிஜமாக்கும் முயற்சிதான் அது.

உத்தர்காண்ட் மாநிலத்தில் பணிபுரிந்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவிசங்கரால் 2015-ல் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக 15 மாணவர்கள் தமிழகத்தில் வெவ்வேறு கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். திண்ணையில் படித்து அரசு ஊழியர்களாகப் பணியாற்றிவரும் இளைஞர்களின் உதவியுடன் இத்திட்டம் நடந்தேறி வருகிறது.

‘முற்றம்’- பள்ளி மாணவர்களை முன்னேற்றும் திட்டம்:
“பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் நுழைவுத் தேர்வுகள் சார்ந்த வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிகள் வழங்கி NEET, JEE, QSET, CLAT போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் செயல் திட்டம் 2018-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பள்ளி மாணவர்களது தனித்திறன்களை வளர்க்கும் செயல் திட்டத்தையும் உள்ளடக்கியதாக ‘முற்றம்’விளங்கும். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

முற்றம் திட்டத்தின் வாயிலாகப் பள்ளியில் பயின்று வரும் ஆற்றல் மிகுந்த மாணவர்களை அடையாளங்கண்டு அவர்களைப் பட்டைதீட்டுவது, அடையாளங்காணப்பட்ட மாணவர்களில் ஏழ்மையான நிலையில் இருக்கும் மாணவர்களைச் சாளரம் - உயர்கல்வித்திட்டம் வாயிலாகக் கல்லூரியில் சேர்ப்பது.

திண்ணைப் பயிற்சிப் பட்டறை வாயிலாக  வேலைவாய்ப்பிற்கான பயிற்சியினை வழங்குவது ஆகியவை திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைந்த செயல் திட்டமாகும்” என திறன் மிக்க இளைஞர்களை உருவாக்கியே தீருவோம் என்ற நம்பிக்கையுடன் பேசி முடித்தார் செந்தில்குமார்.

- தோ.திருத்துவராஜ்

X