TNPSC - CCSE IV தேர்வுக்குத் தயாராகிவிட்டீர்களா?

12/4/2017 2:19:55 PM

TNPSC - CCSE IV தேர்வுக்குத் தயாராகிவிட்டீர்களா?

அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற பலரது கனவை நனவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாய்ப்புகளை வழங்கிவருகிறது. டி.என்.பி.எஸ்.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவ்வாணையத்தில் Group IV பிரிவில் தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலப்பதிவேடுகள் சார்நிலைப் பணி  உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள இடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படும். பத்தாம் வகுப்பு படித்திருந்தாலே போதும் இந்தத் தேர்வை எழுதி அரசுப் பணியாளர் ஆகிவிடலாம்.

அதனாலேயே பல லட்சம் பேர் இப்போட்டித் தேர்வில் பங்குகொள்வார்கள். கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வளவு பெரிய காலிப் பணியிடங்களை அதாவது, 9351-பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அளித்திருப்பது தேர்வுக்காகக் காத்திருந்தவர்களுக்கு கட்டாயம் மிகப்பெரிய மகிழ்ச்சியளித்திருக்கும். பிப்ரவரி மாதம் 11ம் தேதி 2018ம் ஆண்டு இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு  
கடந்த காலங்களில் VAO மற்றும் Group -IV தேர்வுகள் தனித் தனியாகவே நடத்தப்பட்டுவந்தன. ஆனால், இந்த ஆண்டு முதல் இரண்டு தேர்வுகளும் தனித் தனியே நடத்துவதற்குப் பல கோடி செலவு ஆகும் என்று கூறி VAO மற்றும் Group -IV தேர்வுகளை ஒருங்கிணைத்து - ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (Combined Civil Services Examination-4 - CCSE IV) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி - சி.சி.எஸ்.இ - IV தேர்வை முதன்முதலாக எழுதுவோர், 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாகப் படிக்க வேண்டியது அவசியம். பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதாரப் பாடங்களைப் படித்தாலே போதும்.

தேர்வுகளில் தத்துவயியல், மனத்திறன் தொடர்பான கணிதக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதற்கு ஆழமாகப் படிக்க வேண்டியதில்லை. கடைகளில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை வாங்கி ஒரு வாசிப்பு வாசித்தால் போதும். நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்களுக்கு, முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதனால் தினமும் செய்தித்தாள்களைப் படித்து, குறிப்பு எடுத்துவைக்க வேண்டும்.

முக்கிய செய்தி, சிறப்புக் கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றைச் சேகரித்து வைக்க வேண்டும். அறிவியல் பாடங்களைப் படிக்கும்போது, அதன் நடைமுறை, பயன்பாடுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸில் அடிப்படையாக 2 கேள்விகள் இருக்கும். இதற்கு கம்ப்யூட்டர் குறித்த அடிப்படை அறிவே போதும். பாடவாரியாக அட்டவணை தயார் செய்ய வேண்டும். தேர்வுக்கு முன் குறைந்தபட்சம், 10 மாதிரி தேர்வுகளை முந்தைய வினாத்தாள்களைக் கொண்டு எழுதிப் பார்க்க வேண்டும்.

தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை இல்லாத காரணத்தால் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதே சிறந்தது. மொழிப்பாடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் -100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்), பொதுஅறிவு - 75 கேள்விகள், அறிவுக்கூர்மை - 25 கேள்விகள் - மொத்தம் 100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்) என ஒட்டுமொத்தமாக 200 கேள்விகள் கேட்கப்படும். இந்த எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே போதும் - நேரடியாகச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். அவர்களுக்கு உடனடியாக வேலைக்கான அழைப்புக் கடிதம் வந்துவிடும்.

தேர்வுக்குத் தயாராவோர் மொழிப்பாடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலமொழிப் பாடத்தில் அதிகமான வினாக்கள் கேட்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பொது அறிவைப் பொறுத்தவரை போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியான உடன்படிக்கத் தொடங்குவது எந்த விதத்திலும் பயன் அளிக்காது. பொதுஅறிவு குறித்த தேடல்கள் எப்போதும் உங்களுக்குள் இருக்க வேண்டும். இதற்கென தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பிற்காக ஒதுக்க வேண்டும்.

பொருளாதார சூழ்நிலையோ, சமூகக் காரணியோ உங்கள் முயற்சியைத் தடுக்க முடியாது. உங்கள் முயற்சி மட்டுமே உங்களுக்கான வெற்றியைத் தரும். நீங்கள் வெற்றி பெற்றால், அதற்குப் பல பேர் காரணமாக இருக்கலாம், தோல்வியுற்றால் நீங்கள் மட்டும்தான் காரணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்களும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்து தேர்வு எழுத விரும்பினால் காலம் கடந்துவிடவில்லை 13.12.2017 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும்போது கவனிக்க...
விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் வலைத்தளங்களான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net ஆகியவற்றில் இணைய வழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

1. நிரந்தரப் பதிவு 1.3.2017 க்கு முன்பு OTP செய்திருந்தால் அதனைக் கொண்டு விண்ணப்பிக்கலாம்-அதன் பின்னர் விண்ணப்பிப்பவர் ரூ.150-ஐ செலுத்தி நிரந்தரப் பதிவு செய்து பின்னர்தான் விண்ணப்பிக்க முடியும். உங்களது பெயர், தகப்பனார் - தாயார் மற்றும் திருமணமாகியிருந்தால் துணையின் பெயர், விலாசம் போன்றவற்றை நிரந்தரப் பதிவு மற்றும்விண்ணப்பத்தில் சரியாகக் குறிப்பிடுங்கள்.

2. பிறந்த தேதி, சாதி பிரிவு, சாதி உட்பிரிவு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாதம், வருடம் போன்றவை கவனமாகப் பதிவிட வேண்டியது மிகவும் முக்கியம். தவறாக விண்ணப்பிக்கும்பட்சத்தில் இவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்காது.

3. எப்போதும் அறிவிப்பு வந்தவுடன் விண்ணப்பம் செய்ய வேண்டாம். இரு நாட்கள் கழித்து விண்ணப்பம் செய்வது நலம். ஏனெனில், கணினி சர்வர் பிரச்னை, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை சம்பந்தமாக சில பிரச்னைகள் வரலாம்.

4. அதே சமயம், மாதம் முழுவதும் விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் கடைசி இரு நாட்களில் விண்ணப்பிப்பதை தவிர்க்கவும். ஒட்டுமொத்தமாக அனைவரும் இறுதிக்கட்டத்தில் விண்ணப்பிப்பதனால் கணினி சர்வரின் செயல்பாடு பாதிக்கப்பட்டு உங்களால் விண்ணப்பிக்க இயலாமல் போகலாம்.

6. கூடுமானவரை மொபைலில் விண்ணப்பிப்பதைத் தவிர்க்கவும். வீட்டில் கணினி இருந்தால் பயன்படுத்தவும் அல்லது ஏதேனும் கணினி மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும். மொபைலில் விண்ணப்பிக்கும்போது, உங்களுக்கே தெரியாமல் ஏதேனும் எண்கள் அல்லது எழுத்துகள் கூடுதலாக அச்சாகிவிடலாம் அல்லது தவறுகளைக் கண்டுபிடிப்பது கடினம்.

7. விண்ணப்பத்தில் மின்-அஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களைப் பதிவு செய்யும்போது உங்களுக்குச் சொந்தமான மின்-அஞ்சல் மற்றும் நீங்கள் தற்போது பயன்படுத்தி வரும் அலைபேசி எண்களைக் கொடுக்க வேண்டும். உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களின் எண்களை, மின்-அஞ்சலைக் கொடுக்க வேண்டாம். அவ்வாறு கொடுக்கும்பட்சத்தில், நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெறும் வேளையில் உங்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற தகவல்களை - அழைப்புகளை உங்களால் பெற முடியாமல் போகலாம்.

8. தேர்விற்கு தேர்வு கட்டணம் கட்டுவது என்பது மிகவும் முக்கியம். SC, ST பிரிவுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குறைபாட்டு சதவீதம் நாற்பது மற்றும் அதற்கு அதிகமான குறைபாடு உடையவர்களுக்கு மட்டும் நிரந்தர கட்டண விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, உங்களுக்கு தேர்வுக் கட்டணம் குறித்த சந்தேகம் இருப்பின் கட்டணத்தைக் கட்டிவிடுவது மிகவும் நன்று.

9. மூன்று முறைக்கு மேல் கட்டண சலுகையைப் பயன்படுத்தி இருந்தால் சான்றிதழ் சரிபார்ப்பின்போது போட்டியிலிருந்து விலக்கப்படுவீர்கள்.

10. சான்றிதழ் எண்கள் மற்றும் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதிகளை நன்கு கவனித்து பதிவு செய்ய வேண்டும்.

11. உங்களது விண்ணப்பத்தினை நீங்கள் பூர்த்தி செய்வது நன்று. கணினி மையங்கள் மற்றும் உங்களது நண்பர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பின் நீங்கள் அருகில் இருக்க வேண்டும். உங்களது சான்றிதழ் எண், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதி போன்றவற்றை பதிவு செய்யும்போது சிறிது தவறு நேரிட்டாலும் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாவது நீங்கள்தானே தவிர விண்ணப்பிக்க உதவியர்கள் அல்ல. தற்போது TNPSC -விண்ணப்பத்தில் எடிட்டிங் வாய்ப்பைக் கொடுப்பது அரிதாகி வருகிறது. சில தகவல்களை மாற்ற முடியாமல் செய்துவிடுகிறார்கள்.

12. நீங்கள் நிரந்தர பதிவில் சில தவறுகள் ஏற்கனவே செய்து இருந்தாலும், விண்ணப்பத்தில் சரியாகக் கொடுக்க முயற்சியுங்கள்.TNPSC-ல் எந்த ஒரு தேர்விற்கும் அதற்காக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் தகவல்களிலே இறுதியாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதனை நினைவில் கொள்க.

13. எந்த தேர்விற்கு விண்ணப்பித்தாலும், அந்தத் தேர்விற்கென்று கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகளை நன்கு படித்துப்பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும். படிக்காமல் விண்ணப்பிப்பது தவறு.

14. தமிழ் வழியில் படித்து இருப்பின் அதனை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் படித்து இருந்தால் நீங்கள் குரூப்-4 மற்றும் VAO தேர்வுகளுக்கு மற்றும் தமிழ் வழியில் பயின்றதற்கான 20% இடஒதுக்கீடு பெற தகுதியானவர். இளநிலை தமிழ் வழியில் படித்து இருந்தால் குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-2A போன்ற தேர்வுகளுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இடஒதுக்கீடு பெற தகுதியானவர். இந்தத் தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தமிழ்வழி சான்றிதழைப் பயன்படுத்தக்கூடாது.

15. சமீபத்தில் எடுத்த புகைப்படத்தைப் பயன்படுத்துதல் நலம்.

16. தேர்வுக் கட்டணத்தை Credit Card / Debit Card போன்றவற்றின் மூலம் செலுத்துதல் நலம். உங்களுக்கு விரைவாக கட்டணம் அவர்களிடம் (TNPSC) சென்று விட்டதற் கான ஒப்புதல் கிடைக்கும்.

17. தபால் அலுவலகம் மூலம் கட்டணச் சலுகை செலுத்துபவர்கள் இறுதி நாட்களில் விண்ணப்பம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தபால் மூலம் கட்டணம் செலுத்தும்போது உங்களது பணம் அவர்களிடம் சென்றடைய மூன்று வேலை நாட்கள் ஆகும்.

18. விண்ணப்பித்து முடிந்தவுடன் வரும் உங்கள் விண்ணப்பத்தின் கோப்பினை, உங்கள் மின்-அஞ்சலில் சேமித்து வைத்துக்கொள்வது நலம். பிறகு வரும் நாட்களில் அதனைத் தேடுவதற்கு உதவியாக இருக்கும்.

19. தமிழ்வழி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர், ஆதரவற்ற விதவை, ஏற்கனவே அரசு ஊழியர் போன்ற தகவல்களை மறக்காமல் குறிப்பிட வேண்டும். இவற்றைக் குறிப்பிடத் தவறிவிட்டு, பின்னாளில் அதற்கான அத்தாட்சியைக் கொண்டு சென்றால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நீங்கள் அதற்குண்டான சலுகையை இழக்க நேரிடும்.

20. ஒவ்வொரு தேர்விற்கும் உரிய கல்வித் தகுதி மற்றும் தொழில்நுட்பத் தகுதியினை அறிவிப்பு வந்த தேதிக்கு முன்னாள் முடித்து இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில் சான்றிதழ் சரிபார்ப்பில் நீக்கப்படுவீர்கள்.

21. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை 1800 4251002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

மேலும்

X