கற்பித்தலில் பன்முக நுட்பங்களைக் கையாளும் பள்ளி!

1/5/2018 12:38:41 PM

கற்பித்தலில் பன்முக நுட்பங்களைக் கையாளும் பள்ளி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உலகில் அனைத்து குழந்தைகளுக்குள்ளும் ஒரு தனித்திறன் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் தேர்வு மதிப்பெண்கள் மட்டும்தான் மாணவர்களின் திறமையைக் கணிக்க உதவும் கருவியாக பள்ளிகளில் இன்றுவரையிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் உள்ள தொடர்பும், பிள்ளைகள் பெற்றோருக்கு இடையே உள்ள தொடர்பும் பல இடங்களில் கசப்பான நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட சூழலை மாற்றும் முயற்சியாக, ஒரு சிறந்த ஆசிரியர் எப்படி செயல்பட வேண்டும்? மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவு எவ்வாறு பேணப்பட வேண்டும்? மாணவர்களும் ஆசிரியர்களும் கற்று விவாதிக்கும் வகுப்பறையானது எப்படி இருக்க வேண்டும்?

மேலும் ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் அவர்களுக்கே உரித்தான தனித்திறனை எப்படி கண்டறிவது? அதே நேரத்தில் இன்றைய யதார்த்த உலகுக்குப் பொருந்துமாறு மாணவர்கள் அனைவரையும் நல்ல மதிப்பெண்கள் எடுக்கச் செய்வது எப்படி? போன்ற வினாக்களுக்கு விடையாகிப்போயிருக்கிறது ஒரு பள்ளி. திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் உள்ளகோன்குருநாதர் வித்யாலயா நர்சரி அண்ட் பிரைமரி ஸ்கூல்தான் அது. இப்பள்ளி நாள்தோறும் படிப்பு மற்றும் டெஸ்ட், மதிப்பெண்களை இரை வைத்து துரத்தும் போக்கு, இதன் விளைவால் நாளுக்குநாள் குறைந்த மாணவர்களின் வருகைப்பதிவு விகிதம் என 2016ம் ஆண்டு டிசம்பர் வரையும் மற்ற பள்ளிகளைப் போலவே சாதாரணமாக இயங்கி வந்துள்ளது.

ஆனால், இன்று அப்பள்ளியின் நிலை அப்படியே நேர் எதிராக மாறியுள்ளது. அன்றாட பள்ளி நாட்களில் மாணவர்களின் முழு வருகைப் பதிவு,  ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் நான் என போட்டியிடும் மாணவர்களின் நூறு சதவீத ஈடுபாட்டுடன் அரங்கேறும் வகுப்பறைகள், அதீத ஆர்வமுடன் கற்றலை அணுகும்  மாணவர்கள் என மெருகேறியுள்ளது அப்பள்ளி. இந்த அசாத்திய மாற்றத்திற்கு காரணம் மல்டிப்பிள் இன்டலிஜன்ஸ் டெக்னிக்ஸ் எனும் எட்டு வித திறனாய்வு நுட்பங்களைக் கற்பித்தலில் புகுத்தி வெற்றி கண்டுள்ளனர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும். அவர்கள் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்…

“இசை அறிவு, மொழி அறிவு, காட்சி அறிவு, இயற்கை அறிவு, லாஜிக்கல் (கணித) அறிவு என்பன போன்ற எட்டு வகையான திறனறி நுட்பங்களை அன்றாட பாடங்களில் புகுத்தி  மாணவர்களின் தனித்திறனைக் கண்டறிய முற்படுகிறோம்” என்று கூறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜலஜா “ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இந்த எட்டு வகையான அறிவுகளில் ஏதாவது ஒன்று தலைமையாக இருக்கும். ஆகையால் வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களுக்குள்ளும் இருக்கும் தனித் தனித் திறனைக் கண்டறிந்து, பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும்போது வெவ்வேறு திறனையுடைய அனைத்து மாணவர்களுக்கும் புரியும்படியாக இந்த எட்டு விதமான திறன் நுட்பங்களை உள்ளடக்கிய கான்செப்ட்களை ஒவ்வொரு பாடங்களுக்கும் தனித் தனியாக  உருவாக்கியுள்ளோம்.

அவற்றை விளையாட்டு செயல்பாடுகளாக மாற்றி மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறோம். உதாரணமாக, பரமபத தாயத்தை மாணவர்களை உருட்டச் செய்து விழும் எண்களுக்கு ஏற்றவாறு காயை நகர்த்தும்போது பாம்புகளுக்கு பதிலாக ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் கெட்ட உணவுகளில் சிக்கி கீழிறங்க செய்து, ஏணிகளுக்கு பதிலாக மனிதன் உண்ணுவதற்கு தகுந்த இயற்கை உணவுகளை வைத்து அவர்களை மேலேற செய்து இவ்விளையாட்டின் மூலம் அவர்களுக்கு குட் ஃபுட்ஸ், ஜங்க் ஃபுட்ஸ் பற்றி கற்றுத் தருகிறோம். இப்படி விளையாட்டின் மூலம் பாடம் நடத்துவதால் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் பாடமானது எப்போதும் மறக்காது. இந்த ஒரு செயல்பாட்டில் காட்சி அறிவு, லாஜிக்கல் (கணித) அறிவு, இயற்கை அறிவு ஆகியன பிணைந்துள்ளன” என்கிறார்.

கணித ஆசிரியை கீதா கூறும்போது, “கணித வகுப்புகளுக்கு ஐந்து மாணவர்களை மேடைக்கு வரச்செய்து யோகா செய்யச் சொல்லி அதன் மூலம் மற்ற மாணவர்களுக்கு கணித வடிவியல் கோணங்களைப் பற்றி விவாதிப்போம். அறிவியல் பாடங்களுக்கு நேரடியாக இயற்கையான இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வோம்” என்கிறார். “பாடங்களுக்கான கால அட்டவணைப் படி அன்றைய பாடங்களுக்கு ஏற்ற  கான்செப்ட்களை உரிய நேரத்திற்கு முன்னமே திட்டமிட்டு உருவாக்கி தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் பெற்று அதை எப்படி செயல்பாடுகளாக மாற்றுவது என்பது பற்றி முடிவு செய்வோம். ஐடியாக்கள் செயல்பாடுகளாக மாறும்போது அவை அனைத்து மாணவர்களும் உள்வாங்கும்படி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

இப்படி வரும் கான்செப்ட்டுகள் கடைசியாக பாடலாகவோ, சார்ட்டில் படமாகவோ அல்லது விளையாட்டு போன்ற செயல்பாடுகளாக மாறும்” என்கிறார் அறிவியல் ஆசிரியை அஸ்வதி. “மாணவர்களுக்கு பாடங்களிலிருந்து குறிப்பிட்ட பகுதியை கொடுத்து அவர்களையே கான்செப்ட்டை உருவாக்கச் சொல்லி புராஜெக்ட் செய்ய உத்வேகப்படுத்துவோம். இப்படியாக 80 மார்க்குக்கு எழுத்துத் தேர்வும், புராஜெக்ட் மற்றும் வகுப்பறையில் மாணவர்களின் ஈடுபாடு பொறுத்து  20 மார்க் என்ற முறையில் தேர்வு நடத்தப்படும்” என்ற ஆசிரியர்களிடம், நடைமுறைக் கல்வி முறையிலிருந்து முற்றிலும் நேர் எதிரான மல்டிப்பிள் இன்டலிஜன்ஸ் டெக்னிக்ஸ் கற்பித்தல் முறைக்கு எப்படி உங்களை தயார்படுத்துனீர்கள் என்றோம்.

“ஷ்ரத்தா எனும் கல்வி அமைப்புதான் எங்கள் பள்ளிக்கு மல்டிப்பிள் இன்டலிஜன்ஸ் டெக்னிக்ஸ் பற்றி அறிமுகப்படுத்தியது. ஷ்ரத்தா அமைப்பின் நிறுவனர் மதுமதி நாராயணன் ஆசிரியர்களாகிய எங்களுக்கு ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தார். அதன் மூலம். கற்பித்தல் நுட்பங்களைப் பற்றி பயிற்சி அளித்தார். இப்போது நடத்தப்படும் பாடங்கள் எல்லாம் அப்போது உருவாக்கியதுதான்” என்கிறார்கள் ஆசிரியர்கள். ஷ்ரத்தா அமைப்பின் நிறுவனர் மதுமதி நாராயணனைத் தொடர்புகொண்டபோது, “1983ம் ஆண்டு ஹாவர்ட் கார்டனர் என்ற அமெரிக்க உளவியலாளர் கண்டுபிடித்த ஒரு கருத்தியல்தான் இந்த மல்டிப்பிள் இன்டலிஜன்ஸ்.

மற்றவனுக்கு இயல்பாக வரும் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அது வராத இன்னொருவனை அழைத்து இவனுக்கு திறமை இல்லை என்று உலகம் தூற்றியபோது, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இந்த எட்டுவித திறன்களில் கண்டிப்பாக ஏதாவது ஒன்று உச்சமாக இருக்கும் என்று கூறியது அவருடைய தியரி. அந்தத் தியரியை அடிப்படையாக வைத்து செயல்படுவதுதான் இந்த மல்டிப்பிள் இன்டலிஜன்ஸ் டெக்னிக்ஸ். வகுப்பில் ஒரு மாணவனுக்கு இசையிலும், அடுத்தவனுக்கு மொழியிலும், இன்னொருவனுக்கு இயற்கையிலும், மற்றவனுக்கு காட்சியிலும் என அவர்களுக்கே தெரியாமல் ஆர்வம் இருக்கலாம்.

இதை கண்டறியவும் மற்றும் வகுப்பில் உள்ள அனைவரையும்  ஈர்க்கும் விதமாகவும் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே இந்த டெக்னிக்கின் முதல் விதி. மாணவர்கள்தான் வருங்கால சமுதாயம். ஆகவே அவர்களை பண்பாளனாகவும். அறிவானவனாகவும் உருவாக்குவது ஆசிரியர்களின் சமூக பொறுப்பு. ஆதலால் தான் நாங்கள் முதலில்  ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கிறோம். பொதுவாக இந்த மல்டிப்பிள் இன்டலிஜன்ஸ் டெக்னிக்கைப் பயன்படுத்தி  பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரை பாடம் எடுக்கலாம். ஆகையால்தான் நாங்கள் இந்த பிரைமரி பள்ளியைத் தேர்ந்தெடுத்தோம்.

இன்றுவரையிலும் இந்திய அளவில் மல்டிப்பிள் இன்டலிஜன்ஸ் டெக்னிக்கை பயன்படுத்தி பாடத்திட்டங்களை எடுக்கும் ஒரே பள்ளி ஸ்ரீகோன்குருநாதர் வித்யாலயா தான். அவ்வகையில் எங்கள் கல்வி அமைப்பு இதில் வெற்றி பெற்றுள்ளது. ஷ்ரத்தா எனும் அமைப்பு முழுக்க முழுக்க என்னை போன்ற  பெண்களால் நிறுவப்பட்ட கல்வி அமைப்பு. அதனால் இது மட்டும் எங்களுக்கு போதாது. தமிழ்நாடு முழுவதும் கற்பித்தலில் புரட்சியை ஏற்படுத்தி தமிழ்நாட்டு மாணவர்களை உலகுக்கே உதாரணம் காட்டும் அளவுக்கு அவர்களை உயர்த்த வேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என்று தீர்க்கமாக முடித்தார் மதுமதி நாராயணன்.

- வெங்கட்

படங்கள்: ஏ.டி. தமிழ்வாணன்

X