வாழ்க்கை முறையைக் கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடம்!

4/13/2018 11:56:14 AM

வாழ்க்கை முறையைக் கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடம்!

ஸ்டேட் போர்ட், சமச்சீர், சி.பி.எஸ்.இ.... பாடத்திட்டங்கள் பல உள்ளன. இவை அனைத்தும் மதிப்பெண் நோக்கியே செல்கின்றன. மதிப்பெண்கள் அவசியம். அதே சமயம் அதை எதிர்நோக்கிச் செல்ல ஆரம்பத்தில் இருந்தே பயிற்சி அளிக்கணும் என்கிறார் சென்னை, நாவலூரில் அமைந்துள்ள வேலம்மாள் நியு ஜென் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷர்மிலி ஷா.

‘‘குழந்தைகள் களிமண் மாதிரி. நாம் அவர்களை எவ்வாறு பிடிக்கிறோமோ அதற்கு ஏற்ப தான் தங்களுக்கான உருவங்களை தேர்வு செய்வார்கள். பாடத்திட்டங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், குழந்தைகளின் விருப்பம், பெற்றோர்களின் தேவைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டதுதான் நியு ஜென் பள்ளி. பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யமுடியாது. ஆனா பயிற்றுவிக்கும் முறையில் மாற்றம் செய்யலாம்’’ என்றவர் நம்மிடம் கேள்வியை முன்வைத்தார்.

‘‘படிச்ச படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் உள்ளதா? அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களில் எத்தனை பேர் பணியிடங்களில் சிறந்து விளங்குகிறார்கள்? இரண்டுக்குமே நம்மிடம் சரியான பதிலில்லை. படிக்கும் காலத்தில் இருந்து வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வர நிறைய இடைவேளை உள்ளது. பாடங்களையும் தாண்டி சர்வதேச அளவில் சிந்திக்கக்கூடிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பது தான் எங்க பள்ளியின் நோக்கம்.

மாணவர்களின் திறன்களை அறிந்து, பயிற்சி அளிக்க வேண்டும். அதனை வாழ்க்கை முறையில் செயல்படுத்தவும், தொழில்நுட்பத்திலும் முன்னேற வேண்டும். இதில் என்ன புதுமையை தரமுடியும்? எ.பி.சி.டி.... ஒன்று முதல் நூறு வரை உள்ள எண்களை மாற்ற முடியாது. ஆனா பள்ளியில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் திறன்களை ஊக்குவிக்க முடியும். உதாரணத்துக்கு குழந்தைகள் இரண்டரை வயதிலேயே பள்ளிக்கு வர ஆரம்பிச்சிடுறாங்க. ஒவ்வொரு குழந்தையின் சிந்திக்கும் திறன், பிடித்த விஷயங்கள் எல்லாம் மாறுபடும். இவர்களை மோல்டு செய்வது எல்லா ஆசிரி யர்களுக்கும் சேலஞ்ச்தான்.

நாளிடைவில் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். வகுப்புக்குள் நுழைந்ததும் சாப்பாடு மற்றும் புத்தகப் பையை எங்கு வைக்க வேண்டும். சாப்பிடும் முன் கைகழுவ வேண்டும். பெற்றோர்களும் குழந்தைகள் ஐ.டி துறையிலோ, டாக்டராகவோ ஆகணும்ன்னு தான் விரும்புறாங்க. அது ஒரே நாளில் வந்திடாது. படிப்படியாகதான் கொண்டு வர முடியும். அழுத்தம் கொடுத்தால், நல்லா படிக்கிற மாணவனும் பின்தங்கும் வாய்ப்புள்ளது.

மூணு வயது குழந்தைக்கு கலாம் தினம், சாலை பாதுகாப்பு முறைகள், பகிர்ந்து கொடுக்க வேண்டிய குணம், பெரியவர்களை மதிப்பது கற்றுக் கெள்வார்கள். இவை பாடத்திட்டதில் கிடையாது. வாழ்க்கைக்கு அவசியம். அடுத்து தொழில்நுட்பம். இந்த காலத்து குழந்தைகள் கைபேசி பற்றி தெரியாமல் இல்லை. இதில் நல்ல விஷயமும் உள்ளது. தீங்கும் உண்டு. எங்க பள்ளி மாணவர்களுக்கு முதல் வகுப்பிலேயே டேப் (tab) கொடுக்கிறோம். விளையாட்டு மட்டும் இல்லை, பாடங்களை படிக்கவும், செயல்திறன் பயிற்சி மேற்கொள்ளவும் சொல்லித் தறோம். இப்போது எல்லாமே ஆன்லைன் தேர்வு என்பதால், இப்போது இருந்தே பயிற்சி அளிக்கிறோம்’’ என்றவர் பின்லாந்து நாட்டின் கல்விப் பயிற்சி முறைகளைப் பின்பற்றுவதாக கூறினார்.

‘‘குழந்தைகள் பள்ளியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். பள்ளி வளாகத்தில் உள்ள மாடிப்படிகளில் வாய்ப்பாட்டினை எழுதி வைப்பதால், தினமும் பார்க்கும் போது மனதில் பதியும் மனப்பாடம் செய்ய வேண்டாம். வகுப்பறையின் கதவை திறக்கும்போது 30 டிகிரி, 45 டிகிரி, 90 டிகிரி கோணங்கள் பற்றிய குறிப்பு. வருகையை பதிவு செய்வதன் மூலம் மாதம், வாரங்கள் மற்றும் மாதங்களில் எத்தனை நாட்கள் தெரிந்துக்கொள்ளலாம். குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை தூண்டக்கூடிய பயிற்சிகளும் உள்ளன. குழந்தைகளுக்கும் உணர்வுகள் உண்டு. அதனை ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்த வகுப்பறை சுவர்களின் இரண்டு பக்கம் பிளாக்போர்ட் போன்ற அமைப்புள்ளது. மறுபக்கம் உலகம் மற்றும் இந்தியாவின் வரைபடம், அதனுடன் ஒவ்வொரு நாட்டின் தலைநகரம் பற்றிய குறிப்பும் இருக்கும்’’ என்றவர் ஆசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிப்பதாக தெரிவித்தார்.

‘‘ஆசிரியராக வருவது சுலபமில்லை. அவர்களுக்கு நியு ஜென்னுக்கு ஏற்ப சிறப்புப் பயிற்சி அளிக்கிறோம். இங்கு புத்தகத்தை திறந்து வரிக்கு வரி படிப்பதில்லை. பாடத்தில் உள்ளதை வாழ்க்கை முறைக்கு ஏற்ப புரிய வைக்கிறோம். உதாரணத்திற்கு கணக்கில் விகிதம் குறித்த பாடம் இருந்தால் அதைப் பற்றி நேரடியாக சொல்லாமல் வாழ்க்கையில் எங்கெல்லாம் விகிதம் பயன்படுகிறதுன்னு புரிய வைக்கிறோம். தோசை மாவு, சப்பாத்தி மாவு ஏன் அரிசி வேக வைக்க எல்லாவற்றுக்கும் விகிதம் அவசியம். இதனை புரிந்துகொண்டால் பாடமும் எளிதாகும்.

பாடப் புத்தகத்தை மட்டுமே படிக்காமல், அதையும் தாண்டி யோசிக்க ஆரம்பிப்பார்கள். சில குழந்தைகள் பார்த்து கற்றுக் கொள்வார்கள். சிலருக்கு கேட்கும் திறன் அதிகமாக இருக்கும். மற்றவர்களுக்கு செயல்திறன். இவை மூன்றையும் செயல்படுத்துகிறோம். பாடங்களைப் புரிந்து கொண்டு செயல்படுத்த கற்றுக் கொண்டால் அவர்களுக்கான பாதையை அவர்களே தேர்வு செய்ய தயங்கமாட்டார்கள்’’ என்றார் ஷர்மிலி ஷா.

- ப்ரியா
படம்: கிருஷ்ணமூர்த்தி

X