ஆஸ்திரேலியாவில் பட்டம் படிக்கலாம்... பகுதிநேர வேலையும் பார்க்கலாம்!

5/7/2018 11:55:32 AM

ஆஸ்திரேலியாவில் பட்டம் படிக்கலாம்... பகுதிநேர வேலையும் பார்க்கலாம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நம் நாட்டில் உயர்கல்வி கற்பதற்கு ஆகும் செலவில் வெளிநாடுகளுக்கே சென்று படித்துவிடலாம் என்ற நிலைதான் இப்போது உள்ளது. இங்கு கடன் வாங்கி, வீடு வாசலை விற்று உயர்கல்வியை முடித்தாலும் அதற்கு அடுத்தகட்டமாக வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக உள்ளது.

‘‘நம் நாட்டில் படிப்பதற்கும் வேலை கிடைப்பதற்கும் இங்கு பல போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்தத் தேர்வுகளிலும் ஆயிரம் முறைகேடுகள், சிக்கல்கள்.

ஆனால், பிளஸ்2 முடித்தவுடன் பட்டப்படிப்போடு, படித்துக் கொண்டிருக்கும்போதே பகுதி நேரமாக வேலை செய்வதற்கும், படித்து முடித்து நிரந்தரமான வேலைவாய்ப்பைப் பெற்று வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளவும் வெளிநாட்டுக் கல்வியில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன’’ என்கிறார் சென்னையில் இயங்கி வரும் ஏ.டி.எம்.சி. கல்வி நிறுவனத்தின் ஏ.யூ.பி.பி. திட்ட இயக்குநர் வெள்ளைச்சாமி தங்கவேலு.

வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஏ.டி.எம்.சி. என்னென்ன வசதி வாய்ப்புகளைச் செய்துதருகிறது என்பதையும் விளக்கிக் கூறினார். ‘‘நமது நாட்டில் வேலைவாய்ப்பு அரிதாகிவிட்ட இன்றைய நிலையில் படிக்கும்போதும் வேலை, படித்து முடித்தவுடனும் வேலை என்பதைக் கடந்த 14 வருடங்களாக சாத்தியப்படுத்தி வருகிறோம். அதுமட்டுமல்லாமல் 21 வயதிலேயே உலக அங்கீகாரம் பெற்ற டிகிரியைப் பெற்று கைநிறைய சம்பாதிக்கும் வாய்ப்பை அமைத்துக் கொடுக்கிறது மெல்போர்ன் மற்றும் சிட்னியை மையமாகக் கொண்டு செயல்படும் ATMC (Australian Technical Management College) என்னும் கல்வி நிறுவனம்.

இந்தக் கல்வி நிறுவனம் AUPP (Abroad Unified Pathway Program - வெளிநாட்டோடு ஒருங்கிணைக்கப்பட்ட பாதைவழித் திட்டம்) என ஒரு திட்டம் வைத்துள்ளது. அத்திட்டத்தின் மூலமாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபெடரேஷன் யுனிவர்சிட்டி, யுனிவர்சிட்டி ஆஃப் சன்ஷைன் கோஸ்ட் மற்றும் சார்லஸ் டார்வின் யுனிவர்சிட்டிகளுடன் இணைந்து ஒரு வருடம் இந்தியாவிலும் மீதி இரண்டு வருடங்களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒன்றிலும் படிக்க வழிசெய்கிறது. அத்துடன் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்திருப்பதால் படிக்கும்போதே பகுதிநேர வேலையையும் படித்து முடித்தவுடன் முழுநேர வேலையையும் அம்மாணவர்களுக்கு உறுதிசெய்து கொடுக்கிறது’’ என்கிறார் வெள்ளைச்சாமி.

‘‘ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் நேரடியாகச் சென்று படிக்கும் மாணவர் விசாவிற்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டியது கட்டாயம். IELTS எனும் உலக ஆங்கில மொழித் தேர்வு முறையில் 6.5%தேர்ச்சியும் அவசியமாகிறது. இந்த நடைமுறைகளை சரிசெய்வதற்கு ஒரு வருடம் வீணாகச் செலவிட வேண்டியிருக்கும். அதனால் முதல் வருடத்தில் படிக்க வேண்டிய வெளிநாட்டுப் படிப்பு மற்றும் ஆங்கிலப் புலமையை எங்கள் சென்னை மையத்திலேயே பயிற்றுவிக்கிறோம். ஆஸ்திரேலியாவின் பாடத் திட்டத்தையே இங்கு முதல் வருடம் படிப்பதால் IELTS-ல் 6.5க்கு பதிலாக 5.5% தேர்ச்சி பெற்றாலே மேற்கொண்டு ஆஸ்திரேலியா படிப்பிற்குத் தகுதியானவர்களாகிவிடுன்றனர்.

இம்மையத்தில், காலை, மதியம் என இரண்டு பகுதிநேர வகுப்புகளாக வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 5 மணி நேர வகுப்பு என மேலைநாடுகளைப் போன்றே பயிற்றுவிக்கப்படுகிறது. மெட்ரிக் முறைத் தேர்வில் 55 சதவிகிதமும் சி.பி.எஸ்.இ. முறைத் தேர்வில் 50 சதவிகிதமும் என குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்திருந்தாலே இந்தத் திட்டத்தில் சேர்ந்து படிக்கலாம். 10+3 முறையில் டிப்ளமோ படித்தவர்கள் மேற்கொண்டு இந்தியாவில் பொறியியல் பட்டம் படித்து வேலை தேடுவதற்குப் பதிலாக இந்தப் படிப்புகளில் சேர்ந்து படித்தவுடன் வேலைவாய்ப்பு பெற்று ஆஸ்திரேலியக் குடியுரிமைக்குத் தகுதி பெற்றுக்கொள்ளலாம்’’ என்கிறார்.

‘‘இந்த வெளிநாட்டுக் கல்வித் திட்டத்தில் கற்றுத்தரப்படும் காமர்ஸ், மேனேஜ்மென்ட், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி போன்ற படிப்பை முதல் ஒரு வருடம் சென்னையில் முடித்து மீதி இரண்டு வருடங்களை மாணவர் விசாவுடன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சென்று படிக்கலாம்.

அத்துடன் இரண்டு வருடப் பகுதிநேர வேலை விசாவும் கிடைக்கபெற்று முழுப்படிப்பையும் தனது பகுதிநேர வேலையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே படித்து முடிக்கலாம். படித்து முடித்தவுடன் இரண்டு வருட முழுநேர வேலை விசாவுக்கு விண்ணப்பித்து அதன் மூலம் முழுநேர வேலையில் சேர்ந்து 2லிருந்து 3லட்சம் ரூபாய் வரை மாதச் சம்பளம் பெற முடியும்.

ஒருவிதத்தில் இதைச் செலவில்லா இலவசக் கல்வித்திட்டம் என்றுகூடச் சொல்லலாம்’’ என்று சொல்லும் வெள்ளைச்சாமி ஆஸ்திலேலிய படிப்பா...!!!  ஐயோ நம்மால் முடியாது என்று பயப்படவேண்டிய தேவையில்லை என்பதையும் அதை எப்படியெல்லாம் சாத்தியப்படுத்த முடியும் எனவும் விளக்கினார்.

‘‘சென்னையில் ஒரு வருடம் ஆஸ்திரேலியக் கல்வி முறையில் படிப்பதால், இந்த ஒரு வருடம் சேர்த்து இரண்டு வருடங்கள் ஆஸ்திரேலியாவில் பட்டம் படித்து முடித்து மேலும் இரண்டு வருடம் முழுநேர வேலை விசா பெற்று மொத்தம் ஐந்து வருடம் பூர்த்தியடைந்து விடும். அதனால் ஆஸ்திரேலியா குடியுரிமைக்குத் தகுதி பெற்று வாழ்க்கையை அங்கே வளப்படுத்திக்கொள்ள முடியும்.

சில பெற்றோர்கள் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புவார்கள். மிகச்சிறந்த மாணவர்கள் உதவி அமைப்பை உருவாக்கி மாணவ, மாணவிகளுக்கு ஒரு தாயின் மேற்பார்வையைப் போன்றதொரு சேவையையும் பாதுகாப்பையும் செயல்படுத்திவருகின்றது இந்தக் கல்வி நிறுவனம். ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு செமஸ்டருக்கும் 20% ஸ்காலர்ஷிப் கொடுக்கிறது.

+2-வில் 90%-க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதல் வருடத்தில் 100% ஸ்காலர்ஷிப் தருகிறது. இந்தியா முழுவதும் 62 ஏ.யூ.பி.பி. மையங்கள் இயங்கிவருகின்றன. தமிழகத்தைத் தவிர்த்து பிற மாநிலங்களில் உள்ளவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழக மக்களுக்குக்கும் இந்த வாய்ப்பு அமைய வேண்டும் என்பதற்காகச் சென்னையில் இந்த ஆண்டு புதிதாக ஆரம்பித்துள்ளோம்.

காரணம், தமிழக மாணவர்கள் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் மாணவர்கள் படித்து உடனடி வேலைவாய்ப்பைப் பெற்று தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காவே இந்த முயற்சியை எடுத்துள்ளோம். இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து வசதிகள் பெருகியதால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து எல்லாம் ஏதோ நம் உறவினர் வீடுகளுக்குச் சென்றுவருவதுபோல் ஆகிவிட்டது. இந்த நிலையில், படிப்பும் வேலைவாய்ப்பும் கிடைக்கும்போது காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதைப் போல நம் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார் நிறைவாக.

- தோ.திருத்துவராஜ்

X