விளையாட்டு ஆசிரியர்கள் இல்லாத நடுநிலைப் பள்ளிகள்!

5/7/2018 11:56:53 AM

விளையாட்டு ஆசிரியர்கள் இல்லாத நடுநிலைப் பள்ளிகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி மகிழ்ச்சிக்காகவும் சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயல்பாடுதான் விளையாட்டு. ஆனால் செல்போனும், கம்ப்யூட்டர் கேம்களும் வந்தபின்னர் மைதானங்களில் ஓடி விளையாடும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த நிலையை மேலும் மோசமாக்கும் விதமாக உள்ளது தமிழகத்தின் பெரும்பாலான நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் இல்லாத அவலநிலை.

எதிர்காலத்தில் தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களால் எந்தவித விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொள்ள முடியாத ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது. ஒன்பதாயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளில் வெறும் 40 பள்ளிகளில் மட்டுமே அதுவும் ஒரே ஒரு (PET) விளையாட்டு ஆசிரியர் இருக்கும் மோசமானநிலை உருவாகியுள்ளது. அரசு சார்ந்த பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளின்போது ஒருசில மாணவ மாணவிகள் தானாக கலந்துகொண்டு தக்க பயிற்சி இல்லாமல் போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

டேட்டாக்களின் அடிப்படையில் பார்த்தால் 0.44% பள்ளி களுக்கு மட்டுமே விளையாட்டு ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் அடிப்படைக் கல்வி பெறும் மாணவர்கள் கல்வியைத் தவிர்த்து கூடுதல் திறமைகளான விளையாட்டுகளில் பின்தங்கியேயிருக்கிறார்கள். வெறும் படிப்பு மட்டுமே விளையாட்டு இல்லை என்னும் சூழல் தொடர்ந்தால் படிப்பிலும் ஆர்வம் குறைந்து மனத்தளவில் அழுத்தம் உண்டாகும் நிலைகூட ஏற்படலாம் என்கிறது கருத்துக்கணிப்புகள்.

உண்மையாகவே எவ்வளவு ஆசிரியர்கள் இருக்கவேண்டும், எந்த அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வுகள் நடக்க வேண்டும்?

* பல வருடங்களாக பின்பற்றப்பட்டுவரும் சட்டத்தின் அடிப்படையில் அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஒரு விளையாட்டு ஆசிரியர் இருக்கவேண்டும். அதேபோல் ஒவ்வொரு மாணவரும் ஏதேனும் ஒரு விளையாட்டைக் கற்கவேண்டும். அடுத்த 300க்கும் அதிகமான மாணவர்களுக்கு மற்றுமொரு விளையாட்டு ஆசிரியர் அமர்த்தப்பட வேண்டும்.

400க்கும் அதிகமான மாணவர்கள் ஒரு மேல்நிலைப்பள்ளியில் இருந்தால் அப்பள்ளியில் விளையாட்டு இயக்குநர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் (Physical Director-PD) ஆனால், உண்மையில் தமிழக நடுநிலைப் பள்ளிகளில் இருக்கும் நிலைமையோ, ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர்கூட இல்லை என்பதுதான் சோகம். ஒரு பக்கம் ஒன்பதாயிரம் நடுநிலைப் பள்ளிகளுக்கு 40 பள்ளிகள் மட்டுமே விளையாட்டு ஆசிரியர்கள் இருக்கும் நிலை என்றால் மறுபக்கமோ ஏழாயிரத்து ஐநூறு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்களுக்கான 5,576 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 660 விளையாட்டு இயக்குநர்களுக்கான பணியிடங்களும் அடக்கம்.

இதுமட்டுமின்றி 2,900 தொடக்கக்கல்வி பள்ளிகளும் விளையாட்டு ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கின்றன. இந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் விளையாட்டுத் துறையில் இல்லாமலே போகும் வாய்ப்பு ஏற்படலாம். இதற்கு முன்பு 5000 பகுதிநேர விளையாட்டு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். எனினும் அதுவும் 2012ல் கடைசியாக அமர்த்தப்பட்டவர்களே. அதன் பிறகு எந்த பணிநியமனமும் நடைபெறவில்லை.

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருக்கான பணியிடங்களும் கடந்த ஐந்து வருடங்களாக நியமிக்கப்படாமல் இருக்கிறது. வேலையில் இருக்கும் மூத்த விளையாட்டு இயக்குநர்களும் மூப்புக் காரணமாக பள்ளிகளின் மற்ற வேலைகளில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து ஒவ்வொரு பள்ளிகளிலும் பள்ளிக் கல்வி அமைப்பு டேட்டாக்களை சேகரித்துவருகிறது.

மேலும் 250 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் வேலையில் இருக்கிறார்களா என்னும் ஆய்வும் நடந்துவருகிறது. எனினும் இவையனைத்தும் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளன. தக்க முடிவுகள் எடுத்து பிரச்னைகளுக்கான தீர்வுகள் கொண்டுவரும் நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்கிறது தமிழ்நாடு விளையாட்டுக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள் அமைப்பு. குறைந்தது 1200 பணியிடங்களேனும் அவசரகால அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். இல்லையேல் பின்வரும் பாதிப்புகள் உண்டாகலாம்.

*பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் இல்லையெனில் மாணவர்கள் முற்றிலுமாக விளையாட்டுகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டு எப்போதும் பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்துமாறு திணிக்கப்படுவார்கள்.

*மாணவர்களின் திறமைகள் தெரிந்தே மறைக்கப்பட்டோ அல்லது மறுக்கப்பட்டோ விடுவதால், மாணவர்களின் மனநலனில் பிரச்னைகள் ஏற்படலாம்.
 
*பதக்கங்களை வெல்லும் அளவிற்கு தகுதி படைத்த மாணவர்கள் தக்க பயிற்சிகள் இல்லாமல் பள்ளி அளவில்கூட வெல்லும் திறனை இழக்கும் அபாயம் ஏற்படலாம்.

இதனால் பாதிக்கப்பட்டிருப்பது மாணவர்கள் மட்டுமல்ல, தகுதிவாய்ந்த ஆசிரியர்களும்தான். சில பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளம் ரூ.7000 மட்டுமே. பல பள்ளிகளில் பல தேசிய விளையாட்டு வீரர்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்ட இப்படிப்பட்ட பகுதிநேர வேலைகளில் இருப்பதுதான் துயரம்.

கடந்த வருடம் வள்ளுவர்கோட்டம் அருகே நிரந்தர வேலைவேண்டி போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி மந்திரி கே.ஏ.செங்கோட்டையன் கொடுத்த உறுதிகள் ஏதும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பணி ஓய்வு, காலியிடங்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மாற்றம் என மொத்தமாக 16,000 விளையாட்டு ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாகயிருக்கின்றன. இதனால் கொஞ்சம் வசதி இருக்கும் குழந்தைகள் தனியார் பயிற்சி மையங்களில் விளையாட்டுப் பயிற்சி பெறுகிறார்கள். அதேபோல் 0.44% பள்ளிக் குழந்தைகள் இவர்களில் அதிர்ஷ்டவசமாக ஆசிரியர்கள் பெற்றதால் விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் படைக்கிறார்கள். ஆனால் மீதியுள்ள மாணவர்கள் நிலை கேள்விக்குறிதான்.

மாணவர்கள் நிலை இப்படியெனில் தேசிய அளவில் பதக்கங்கள் குவித்து முறையாக ஆசிரியருக்கான படிப்புகள் முடித்தும் சாதாரண ஜவுளிக்கடை விற்பனையாளர் அளவிற்குக்கூட சம்பளம் கிடைக்காமல் அன்றாடம் வாழ்வை ஓட்ட பகுதி நேரமாகவோ அல்லது வேலையே இல்லாமலோ, மேலும் சம்பந்தமே இல்லாத வேலை பார்த்துக்கொண்டோ வாடும் ஆசிரியர்களின் நிலை இன்னும் மோசமானது.

X