தொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்!

6/1/2018 3:27:46 PM

 தொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சர்ச்சை

உயர்கல்விப் படிப்புகளில் மருத்துவப் படிப்புக்குத் தகுதித் தேர்வு என நீட் தேர்வை கொண்டுவந்ததிலிருந்து தமிழக மாணவர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நீட் தேர்வு வேண்டாமெனப் போராட்டங்கள் வெடித்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.

தகுதித்தேர்வு என்ற பெயரில் தமிழகத்தின் கல்வி உரிமை பறிக்கப்படுவது குறித்து பல்வேறு சர்ச்கைகள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து கல்வியாளர் மற்றும் மருத்துவர்களின் கருத்துகளைக்கேட்டோம். அவர்களின் கருத்துகள் இங்கே…

பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்.இந்திய மருத்துவ கவுன்சில் (திருத்தம்) சட்டம் 2016 செக்‌ஷன் 10D அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் பொது நுழைவுத்தேர்வு எனச் சொல்கிறது. அப்படியென்றால், எய்ம்ஸும், ஜிப்மரும் அதில் ஏன் அடங்கவில்லை.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் மத்திய அரசாங்கம் இயற்றிய சட்டத் திருத்தத்திற்கும் விரோதமாகத்தானே எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய தன்னாட்சி நிறுவனங்களுக்குத் தாங்களே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையைப் பின்பற்றிக்கொள்ள அனுமதித்துள்ளார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைவிட தன்னாட்சி பெற்ற இந்த நிறுவனங்கள் எந்த வகையில் உயர்வானது?

அடுத்து, சி.பி.எஸ்.இ. ஒரு மாநிலத்தில் தேர்வு நடத்துகிறது என்றால் சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் கலந்தாலோசிக்க வேண்டாமா? எல்லாவற்றுக்கும் மேலாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு வருகிறது. உயர் நீதிமன்றத்தினுடைய 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாணவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதில், மாணவர்கள், தமிழ்நாட்டில் இருக்கின்ற தேர்வு மையங்களுக்குச் செல்லுங்கள், உங்களுடைய அட்மிட் கார்டை காண்பியுங்கள், தேர்வு எழுதுங்கள் என்று சொல்லிவிட்டு, சி.பி.எஸ்.இ-க்கு எங்கள் மாணவர்களுடைய இருப்பிடத்திற்கு அருகில் மையத்தைக் கொடுங்கள் என உத்தரவு போடுகிறது.

உத்தரவு வந்த அன்றைக்கே சி.பி.எஸ்.இ. நாங்கள் உத்தரவை ஏற்கமுடியாது, மேல்முறையீட்டுக்கு போகிறோம் எனச் சொல்லியிருந்தால் மாணவர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பும், ஆசையும் உருவாகியிருக்காது. திடீரென உச்சநீதிமன்றத்தில் மனு போட்டு உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்துகொண்டு வருகிறார்கள் என்றால், மாணவர்களுடைய உளவியல் ரீதியிலான சிக்கல்களை உணராமல், அவர்களின் நலனில் அக்கறையில்லாமல், மாநில அரசை ஒரு பொருட்டாகவே கருதாமல், எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத்தானே இது இருக்கின்றது.

ஒரு மாநிலத்திற்குள்ளேயே அதனுடைய எல்லைக்குள் நூறு கிலோ மீட்டருக்குமேல் தொலைவு இருக்கிறதல்லவா? ராமநாதபுரம் மாவட்ட மாணவருக்குச் சென்னையில் மையம் கொடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட மாணவிக்குக் கோயம்புத்தூர் மையம் கொடுத்துள்ளார்கள். மாணவர்களுடன் பெற்றோர்கள் செல்லவேண்டுமென்றால் அந்த செலவுகளை யார் பார்ப்பது என்பது உள்ளிட்ட எதைப்பற்றியுமே கவலைப்படாமல் ஒரு தேர்வை நடத்துவோம் என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்? அப்படியென்றால், இதற்கெல்லாம் செலவு செய்கின்ற அளவுக்கு வசதி இருக்கிறதென்றால் உயர்கல்விக்கு வா, இல்லையென்றால் உயர்கல்விக்கு வராதே என்று சொல்வது ஒரு நல்ல அரசு செய்யக்கூடிய காரியம் அல்லவே.

எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினுடைய பிரிவுகள் மாநிலத்திற்கு கொடுத்திருக்கக்கூடிய அதிகாரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இயற்றி அனுப்பிய இரண்டு சட்ட மசோதாவுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தருவது மட்டும்தான் நியாயமான தீர்வு, ஒரே தீர்வுமாகும்.

 டாக்டர் ரவீந்திரநாத், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர்.மத்திய அரசின் பழிவாங்கும் நோக்கமும், சி.பி.எஸ்.இ. என்ற அமைப்பினுடைய லாப நோக்கமும்தான் மாணவர்கள் அவதிப்பட்ட பிரச்னைகளுக்கும் அவர்களின் பெற்றோர் பட்ட கஷ்டத் துக்கும் காரணம். தமிழக அரசும் இதைத் தடுப்பதற்குப் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது தமிழக மாணவர்களின் மீதுள்ள அக்கறையின்மையைத்தான் காண்பிக்கிறது.

தமிழகத்தில் தேர்வு மையங்கள் கிடைக்கவில்லை என்று சி.பி.எஸ்.இ. சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறைந்த அளவு மையங்களில் தேர்வு நடத்தினால் அதிக லாபம். கூடுதல் மையங்கள் அமைத்தால் லாபம் குறையும் அல்லது நஷ்டம் ஏற்படும். அதனால்தான் குறைவான மையங்களை இங்கு அமைத்துவிட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி அலைக்கழித்தார்கள். சி.பி.எஸ்.இ., ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். எல்லாம் இந்த மாதிரி தேர்வுகள் நடத்துவதன் மூலமாக வருடத்திற்கு பல கோடி ரூபாய் வருமானம் பார்க்கின்றன. இதுதான் மிக முக்கியமான காரணமே.

பிளஸ்2-ல் 50 சதவீதம் மதிப்பெண் வாங்கினால்தான் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இடஒதுக்கீடு உள்ள எஸ்.சி./ எஸ்.டி./ ஓ.பி.சி. மாணவர்கள் 40 சதவீதம் மதிப்பெண் வாங்க வேண்டும். 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக படித்திருக்க வேண்டும். இதெல்லாம் நீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள். அப்படியிருக்கும்போது அதையும் மீறி எப்படி பிளஸ்2 தேர்வு முடிவு வருவதற்கு முன்பே நாடு முழுவதும் தேர்வு நடத்துவது எதற்காக? பிளஸ்2 தேர்வு முடிவு வந்துவிட்டால் பலர் விண்ணப்பிக்க மாட்டார்கள்.

நுழைவுத்தேர்வை வணிகமயமாக்கி அதன் மூலம் வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பதால்தான் இதுபோன்ற தவறு
களெல்லாம் நடக்கின்றன. இதற்காகவே மத்திய அரசு ஓர் அமைப்பை உருவாக்கி வைத்துள்ளது. தேசிய தேர்வு முகமை (National Testing Agency). அதற்காக மத்திய அரசாங்கம் 25 கோடி ரூபாய் பணம் ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 2017-18 பட்ஜெட்டிலேயே அருண்ஜெட்லி பணம் ஒதுக்கியுள்ளார். அதன்படி தேசிய தேர்வு மூலமாக 40 லட்சம் பேருக்கு பல்வேறு தேர்வுகள் பல்வேறு படிப்புகளுக்கு நடத்தப்போகிறார்கள். வணிக லாப நோக்கத்திற்காகவே இதுபோன்ற தேர்வுகள்..!

இனிமேல், அரசு தேர்வு நடத்துவதை ஒழித்துக்கட்டிவிட்டு மிகப் பெரிய தனியார் நிறுவனங்கள் மூலம் தேர்வு நடத்துவதுதான் நீட் தேர்வின் உள்ளே மறைந்திருக்கும் முக்கிய விஷயம். இதுதான் இதன் பின்னால் உள்ள சூழ்ச்சி. அதனால்தான் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்.

முனைவர் முருகையன் பக்கிரிசாமி, கல்வியாளர்காது கம்மலிலும், கால் கொலுசிலும், மூக்குத்தியிலும் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையாக அள்ளிமுடித்து கூந்தலில் செருகிய கிளிப்பிலும் காப்பி அடிக்க ஏதுவான துண்டுச் சீட்டு, பென்டிரைவ் வைக்க முடியும் என்ற ஞானோதயம் எப்படித்தான் சி.பிஎஸ்.இ-க்கு வந்ததெனத் தெரியவில்லை. துப்பட்டா நீக்குவது, பையை உதறச்சொல்லி விழும் நாப்கின் பார்த்த மாணவி வெட்கித் தலைகுனிவது என இதற்குமேல் என்ன வேதனையை அனுபவிக்க முடியும் என்ற கதை ஆகிவிட்டது.

12 லட்சம் பேருக்கு பள்ளித் தேர்வையும், 20 லட்சம் பேருக்கு தமிழ்நாடு அரசுத் தேர்வாணையக் குழுத் தேர்வையும் எழுத வாய்ப்பளித்த தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் நீட் தேர்வு எழுத மையமில்லை எனச் சொல்வது யாருக்கு காது குத்துவது?

சி.பி.எஸ்.இ. நடத்திய 12ஆம் வகுப்பு பள்ளித் தேர்வில் பொருளியல், 10ஆம் வகுப்பு கணிதம் வினாத்தாள்கள் அவுட்டாகி நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்டு, சிரிப்பாய்ச் சிரித்த காட்சி நமக்குத் தெரியும். பள்ளித் தேர்வே நடத்த இயலாத இடைநிலைக் கல்வி வாரியம் எப்படி இப்படி ஒரு நீட் தேர்வை நடத்த முடியும்? நீட் தேர்வு வந்தபிறகு 12ஆம் வகுப்பில் பெறுகிற மதிப்பெண்களுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது.

இதன்மூலம் மாணவர்கள் கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்பிக்கும் பள்ளிகளைப் புறக்கணித்துவிட்டு (கோச்சிங் சென்டர்) பயிற்சி மையங்களை நாடிச்செல்லும் சூழ்நிலையை மத்தியஅரசு ஏற்படுத்திவிட்டது.

முதலில் நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த ஆண்டு தேர்வு மையங்களையாவது நம் மாநிலத்தில் அமைக்க வேண்டும் என்ற நிலையில் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தி மொழியில் மட்டும்தான் நீட் தேர்வு என அறிவிப்பு வந்தால், எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் தேர்வு மையத்தை அமையுங்கள், தேர்வை மட்டுமாவது தமிழில் எழுத அனுமதியுங்கள் என கெஞ்ச வேண்டிய நிலை வந்து
விடும்போல் தோன்றுகிறது.

- தோ.திருத்தவராஜ்

X