ஆற்று மணலுக்கு மாற்று மணல் தயாரிப்பு!

6/5/2018 2:38:22 PM

ஆற்று மணலுக்கு மாற்று மணல் தயாரிப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சுயதொழில்

மாதம் ரூ.2.61 லட்சம் சம்பாதிக்கலாம்!

மலைகளின் மீது பொழியும் மழை நீரும், தானாக உற்பத்தியாகும் நீரும் அருவியாகவும் ஆறாகவும் மாறி மலை, காடுகள் வழியே ஓடி வரும்போது அதன் வேகத்தில் வழியில் உள்ள பாறைகளைக் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு உடைத்து கொண்டுவந்து ஆற்றுப் படுகைகளில் சேர்க்கிறது. அது ஆற்று மணல். ஆற்று நீரின் வேகத்தில் பாறை இயற்கையாகவே உடைக்கப்படுகிறது.

ஆனால், வானுயர்ந்த கட்டடங்களின் பெருக்கத்தாலும், ஏற்றுமதியாலும் ஆற்று மணல் சுரண்டப்பட்டு, கிடைப்பதே அரிதாகிவிட்டது. ஆகவே, ஆற்று மணலுக்கு மாற்று மணலைத் தேடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதுதான் எம். சேண்ட் (Manufactured Sand - M-Sand) மணல். அதாவது, தயாரிக்கப்பட்ட மணல் அல்லது செயற்கை மணல்.

கட்டுமானத்தில் மணல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இரும்பு, சிமென்ட் ஆகிய பொருட்கள் தேவைக்கு ஏற்ப தயார் செய்துகொள்ள முடியும் என்பதால் அவற்றின் விலை சில நேரங்களில் நிலையாக இருக்கிறது. ஆனால், ஆற்று மணல் விலை மட்டும் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் கட்டுமான வேலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. மணலின் தேவை தற்போது அதிகரித்து வரும் அதே வேளையில் ஆற்று மணல்
அள்ளுவதற்கும் பல்வேறு தடைகள் இருப்பதால் மணலுக்கு மாற்றுப் பொருளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

செயற்கை மணல் அல்லது எம்.சேண்ட் கடினமான கருங்கற்களை இயந்திரங்கள் மூலம் தூள் தூளாக அரைத்து உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் எம்.சேண்ட் எனும் செயற்கை மணலைக் கொண்டு கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமே பெரும்பாலான கட்டட வேலைகளை இன்னமும் ஆற்று மணல் வைத்து கட்டும் முறை உள்ளது.

ஆற்று மணலைவிட குறைந்த குறைபாடுகளும், அதிக வலிமையும், குறைந்த விலையுடனும், சூழலியலுக்கு உகந்ததாகவும் எம்.சேண்ட் மணல் உள்ளது. இதனால் கட்டுமானச் செலவு குறைகிறது. எம்.சேண்ட் எனும் செயற்கை மணல் பெருமளவில் பயன்படுத்துவதால், ஆற்று மணல் அள்ளப்படுவது பெருமளவில் குறையும். இதனால் ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரக்கூடும்.

ஆற்றுப்படுகைகளில் இருந்து கட்டடத்திற்கு மணல் எடுக்கப்படுகின்றது. இது அதிகளவில் எடுக்கப்படும்போது இயற்கை அழிவிற்கு வழிவகுக்கும். கட்டடங்கள், பாலங்கள் கட்ட மணல் மிகவும் இன்றியமையாததாகும். ஆனால், மாற்று மணல் தயாரித்தல் என்பது சிலிக்கா, சுண்ணாம்புக் கல், ஆற்றுப்படுகை கல், கிரானைட் கற்கள், சிமென்ட் ஆலை உருக்கு கழிவு போன்ற கடினமான மூலப்பொருட்களிலிருந்து எளிதாக தயாரிக்கலாம். இந்தத் தயாரிப்பின்போது ஏற்படும் தூசிகளை வீணாக்காமல் சேகரித்து பட்டி தயாரிக்கும் தொழில்களுக்கும் கொடுக்கலாம்.

சிறப்பம்சங்கள்

*இது ஆற்று மணலுக்கு மாற்றாக பயன்படுத்த உகந்தது.
*உபயோகப்படுத்த முடியாத கடினமான சிறு கற்கள் மற்றும் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக் கலாம்.
*சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு மாசுகளைக் கட்டுபடுத்தும் நவீன இயந்திரங்கள் மூலம் அதிகளவில் தயாரிக்கலாம்.
*சேமிக்கும் தூசிகளையும் விற்பனை செய்யலாம்.
*இதன் தேவை அதிகம். நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.
*இந்தத் தொழிலை NEEDS and STAND-UP போன்ற திட்டங்களில் அரசு மானியத்துடன் கடன் பெற்றும் தொடங்கலாம்.
விலையை ஒப்பிடும்போது ஆற்று மணலைவிட மிகக் குறைவாக இருக்கும்.எம்.சேண்ட் மணல் தகுந்த அளவு களில் தரமாகத் தயாரிக்கப்படுவதால் சிமென்ட் கலவை மற்றும் காங்கிரீட்டின் வலிமையும் தரமும் அதிகரிக்கிறது.

திட்ட மதிப்பீடு : ரூ.46.55 லட்சம்
அரசு மானியம் : 25% புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS Scheme)
எம்.சேண்ட் தயாரிப்பு முறைகருங்கற்களை இயந்திரங்கள் மூலம் நொறுக்கி மைனிங், கிரஷிங், ஷேப்பிங், வாஷிங் என பல்வேறு நிலைகளுக்கு உட்படுத்தி மணல் போன்று துகள்களாக மாற்றி தயார் செய்யப்படுகின்றது.
 
இப்படி தயாரிக்கப்படும்போது மாவு போன்ற கழிவுகள் எல்லாம் தண்ணீர் மூலம் வெளியேற்றப்பட்டு விடும். பொதுப் பணித்துறையினர்
எம்.சேண்டை பயன்படுத்துமாறு கடந்த ஆண்டு (2012) தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகைய குவாரிகள் கோவை மாவட்டத்தில் சூலூர், பெரிய குயிலி, செட்டிப்பாளையம்,கோவை வடக்கு தாலுகா, கோவை தெற்கு தாலுகா, பொள்ளாச்சி, சிறுமுகை, காரமடை,உடுமலை ஆகிய இடங்களில் உள்ளன. இந்த மணல் தற்போது வெளிச் சந்தைகளிலும் கிடைக்கிறது. எம்.சேண்ட் தயாரிக்கும் ஆலைகள், மாற்று மணலான எம்.சேண்டை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்குட்படுத்தி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேவையான இயந்திரங்கள்

1. தாடை நொறுக்கி இயந்திரம் (Jaw Crusher)
2. கூம்பு நொறுக்கி இயந்திரம் (Cone Crusher)
3. உள்வாங்கி ஊட்டும் இயந்திரம் (Looper Feeding)
4. விளிம்பு செதுக்கி இயந்திரம் (Edge Trimmer)
5. சல்லடை (Vibrating Screen Filter)
6. திருகு வகைப்படுத்தி இயந்திரம் (Screen Classifier)
7. அடுக்கி வைக்கும் முற்றம் (Stake Yard Bin)

முதலீடு (ரூ. லட்சத்தில்)

இயந்திரம்     : 35.00 லட்சம்
கட்டடம்     : 10.00 லட்சம்
நிலம்     : வாடகை
மூலப்பொருள்     : 1.55 லட்சம்
மொத்தம்    : 46.55 லட்சம்
(புதிய தொழில்முனைவோர்களுக்கு தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியம் மற்றும் வங்கிக் கடன் கிடைக்கும்.)
நமது பங்கு (5%)     : 2.33 லட்சம்
மானியம் (25%)     : 11.25 லட்சம்
வங்கிக் கடன்      : 32.97 லட்சம்
தயாரிப்புத் திறன்
ஆண்டுக்கு 30,000 மெட்ரிக் டன்
ஒரு மெட்ரிக் டன் விற்பனை விலை ரூ.280 (தோராயமாக…)

30,000 x 280     = 84.00 லட்சம்
மாதம்     : 7.00 லட்சம்
மூலப்பொருள் செலவு (ரூ)
மூல குவார்ட்சைட்  ரூ.62X 2500 மெட்ரிக் டன் = 1.55 லட்சம்
தேவையான பணியாளர்கள் மற்றும் சம்பளம் (ரூ.):
மேற்பார்வையாளர் 1 x 10000 : 10,000
பணியாளர்கள் 5 x 15,000 : 75,000
ஆய்வக உதவியாளர் 1 x 10,000 : 10,000
மொத்தம் : 95,000
நிர்வாகச் செலவுகள் (ரூ.) :
வாடகை
மின்சாரம்     : 45,000
ஏற்று இறக்கு கூலி     : 30,000
அலுவலக நிர்வாகம்     : 3,000
இயந்திரப் பராமரிப்பு     : 35,000
மேலாண்மை செலவு     : 5,000
மொத்தம்     : 1,18,000
நடைமுறை மூலதனச் செலவுகள் (ரூ.)
மூலப்பொருட்கள்     : 1.55 லட்சம்
சம்பளம்     : 0.95 லட்சம்
நிர்வாகச் செலவுகள்     : 1.18 லட்சம்
மொத்த செலவுகள்     : 3.68 லட்சம்
விற்பனை வரவு (ரூ)   :
மாதம் 2500 மெட்ரிக்
டன் x ரூ280 : 7.00 லட்சம்

சாதகங்கள்

ஆற்று மணலை விட சக்தி மிக்கது, தரமிக்கது; கட்டுமானத்துறையின் தர நிர்ணய தரத்தில் இருக்கிறது. ஆற்று மணல் தட்டுப்பாட்டைப் போக்க சரியான மாற்று; சிமென்டுடன் சேரும்போது வித்தியாசம் இருக்காது; ஆற்று மணலை விட 30 முதல் 40 சதவீதம் வரை விலை குறைவு என எம் சேண்ட் பயன்பாட்டுக்கு பல சாதகங்கள் உள்ளன.

பாதகங்கள்

தர பரிசோதனை நடக்காமல் அதை விற்பனை செய்ய முடியாது. காரணம், எம்.சேண்டில் கல்குவாரி துகள்கள் கலந்திருந்தால், கட்டுமானத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எம்.சேண்ட் குவாரி உரிமையாளர்களே ஒப்புக்கொள்கின்றனர். எம்.சேண்ட் பயன்படுத்தும்போது கலவையைக் நன்றாக கலக்கவேண்டியது அவசியம். கலவை சரியாக இல்லை என்றாலும் கட்டுமானங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
கடன் திருப்பம் மற்றும் வட்டி (ரூ)மூலதன கடன் திருப்பம்

(60 மாதங்கள்)    : 32.97 லட்சம்
மூலதனக் கடன் வட்டி
(12.5 ரூ)     : 12.37 லட்சம்
மொத்தம்     : 45.34 லட்சம்
லாப விவரம்
மொத்த வரவு     : 7.00 லட்சம்
மொத்த செலவு : 3.63 லட்சம்
கடன் திருப்பம்
மற்றும் வட்டி     : ரூ. 75,570
நிகர லாபம்    : ரூ. 2.61 லட்சம்

இனியும் மணல் எடுக்க இயலாத அளவுக்கு தமிழக ஆறுகள் கட்டாந்தரைகளாகிவிட்டன என்பதாலும்,மணலுக்கு இதுதான் மாற்று என்பதாலும் இப்போதைக்கு நமக்கு வேறு வழியில்லை. அதற்காக ஒரு சிக்கலில் இருந்து அதைவிட பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளக்கூடாது. எனவே, இதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

- தோ.திருத்துவராஜ்

X