அரசுப் பணிக்கு ஆசைப்படுவது ஏன்?

8/30/2018 5:50:25 PM

 அரசுப் பணிக்கு ஆசைப்படுவது ஏன்?

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

வழிகாட்டல்

படிப்புக்கேற்ற வேலையா வேலைக்கேற்ற படிப்பா ?

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

வேலைவாய்ப்பு என்று வந்துவிட்டால் அரசுப் பணிக்கு என்றுமே தனி மரியாதை இருக்கவே செய்கிறது. ’ஆயிரம்தான் இருந்தாலும் அரசு வேலை மாதிரி வருமா..?‘,’அரைக் காசு சம்பாதிச்சாலும் அரசாங்க சம்பளம் ஆச்சே..!’,’உனக்கு என்னப்பா… கவர்ன்மென்ட் உத்தியோகம்… எந்தக் கவலையும் இல்லை..!‘ இதெல்லாம் காலம் காலமாக நம் நாட்டில் சொல்லப்பட்டு வருவதுதான். இதற்குக் காரணம், பணிப் பாதுகாப்பு, அதிகாரம், உரிமைகள், சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சாதகங்கள்தான்.

என்னதான் ‘பெரிய’ பதவியில் இருந்தாலும், தனியார் துறையில் வேலை பார்ப்பது என்றாலே, அடங்கி ஒடுங்கி நடப்பது போலத்தான். இந்தியாவைப் பொறுத்தவரையில், அரசு வேலையில்  இருக்கிற சுதந்திரம் வேறு எதிலும் கிடைக்கவே கிடைக்காது. அதனால்தான் அரசாங்க வேலைக்கு ஆலாய்ப் பறக்கின்றனர். அதெல்லாம் சரி… அரசுப் பணி கிடைக்க என்ன வழி..? போட்டித் தேர்வுகள்தான்.

போட்டித் தேர்வுகள் மூலம் மட்டும்தான் அரசுப் பணியில் நுழைய முடியும். மத்திய அரசு, மாநில அரசு இரண்டுக்குமே இதே விதிதான். இதில் மாற்றம் இல்லை.மத்திய அரசுப் பணி என்றால் UPSC - Union Public Service Commission; SSC - Staff Selection Commission; RRB - Railway Recruitment Board ஆகியன. மூன்று முக்கிய பணித்தேர்வு நிறுவனங்களும் அனேகமாக ஆண்டுக்கு ஒரு தேர்வேனும் நடத்திவிடுகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர்நிலைப் பதவிகளுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத வேண்டும்.

‘இன்ஸ்பெக்டர்’ அதாவது ஆய்வாளர் நிலையிலான இடைநிலைப் பதவிகளுக்கு ‘எஸ்.எஸ்.சி.’ தேர்வு. ரயில்வே துறையில் பல்வேறு நிலைகள் உள்ளன. தனித்தனியே தேர்வுகள் உண்டு. பொதுவாக, ‘யு.பி.எஸ்.சி.’ மற்றும் ‘எஸ்.எஸ்.சி.’ தேர்வுகளுக்கு பட்டப் படிப்புதான் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இருக்கிறது. அதற்குக் குறைவாகப் படித்தவர்கள். இந்தத் தேர்வு எழுத முடியாது என்பதால், பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி கொண்டவர்கள் மட்டுமே மத்திய அரசுப் பணிக்கு வரமுடியும் என்றாகிவிட்டது.

ரயில்வேயைப் பொறுத்தமட்டில், பத்தாம் வகுப்பு நிறைவு செய்தவர்கள் கூட, தேர்வில் வெற்றிபெற்று, ரயில்வே பணிக்கு வரமுடியும். இதுமட்டுமில்லாமல் ‘ஐ.டி.ஐ.’ போன்ற தொழிற்கல்வி படித்தவர்களுக்கு,  ரயில்வேயில் ஏராளமான வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

எந்தக் கல்வித் தகுதி உடையவர்களுக்கும், எந்த பிரிவினரைச் சேர்ந்தவருக்கும், வாய்ப்புகளை அள்ளித் தருவதில்  இந்திய ரயில்வே தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

அதனால்தான் ஆசியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பணியாளர்களைக் கொண்ட இரண்டாவது பெரிய நிறுவனமாக இருக்கிறது. 15 லட்சம் பேர் பணியாற்றுகிற  ரயில்வேயில் தமிழக இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவது நல்லது.

தற்போதைக்குத் தென்னக ரயில்வேயில், குறிப்பாகத் தமிழகத்தில், வட இந்திய இளைஞர்கள்தான் அதிக அளவில் வேலை செய்வதைப் பார்க்க முடிகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கைகளை நாம் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். தேர்வுக்கே விண்ணப்பிக்காதபோது, பணியில் எவ்வாறு சேரமுடியும்..?

மத்திய அரசு மற்றும் ரயில்வே பணிகளுக்கான தேர்வுகளில் மொழிப் பாடங்களை விடவும், வரலாறு, புவியியல், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.நடப்பு நிகழ்வுகள் எனப்படும் ‘Current affairs’ பகுதியிலும் அதிக வினாக்கள்
கேட்கப்படுகின்றன. பள்ளிப் பாடப்புத்தகங்களை மீண்டும் ஒருமுறை முழுமையாகப் படித்து, நாள்தோறும் செய்தித்தாள்களை முழுமையாகப் பார்த்துவந்தாலே போதும். மத்திய அரசுப் பணிக்கான தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.

‘ஐ.ஏ.எஸ்.’ பணிக்கான ‘யு.பி.எஸ்.சி.’ தவிர்த்து வேறு எந்தப் பணிக்கும் நேர்முகத் தேர்வு (இன்டர்வியூ) கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றால் நேரே பணியாணை வந்துவிடும். மருத்துவப் பரிசோதனை இருக்கலாம். அதற்கு தயாராக வேண்டியது ஒன்றும் இல்லையே..?

இந்தியாவில் நடைபெறும் எல்லாப் போட்டித் தேர்வுகள், பணி அமர்விலும், அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை  முழுவதுமாகப் பின்பற்றப்படும். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கான ஒதுக்கீடும்  அரசு விதிமுறைகளின்படியே செயல்படுத்தப்படும்.

போட்டித் தேர்வுகளுக்கான கட்டணத்திலும் சலுகைகள் உண்டு. பொதுவாக,‘எஸ்.சி., எஸ்.டி.’ பிரிவினருக்கு தேர்வுக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக, தேர்வாணையம் வெளியிடும் அறிவிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்து உறுதி செய்துகொள்ளவும்.

சரி, மாநில அரசுப் பணிக்கு வருவோம். நாமெல்லாம் நன்கு அறிந்த ‘டி.என்.பி.எஸ்.சி.’ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஆண்டுதோறும் பல தேர்வுகளை நடத்தினாலும், இரண்டு தேர்வுகள் மட்டும் மிகப் பிரபலம். அவை ‘குரூப் 4’ தேர்வு மற்றும் ‘வி.ஏ.ஓ.’ தேர்வு.

பல லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் வந்து குவியும். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற குருப் 4 தேர்வுக்கு,  15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணிகளுக்கு ‘குரூப் 4’ தேர்வு நடைபெறுகிறது. 18 வயது நிரம்பியிருத்தல் வேண்டும்; பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் தேர்வு எழுதலாம். இதே கல்வித் தகுதிதான் ‘வி.ஏ.ஓ.’ என்கிற கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுக்கும். ஆனால், வயது மட்டும் 21 நிரம்பியிருக்க வேண்டும்.

கல்வித் தகுதி, தேர்வுக்கான பாடத்திட்டம் ஆகியன இரண்டு தேர்வுகளுக்கும் பொதுவானவை என்பதால், ‘வி.ஏ.ஓ.’ மற்றும் ‘குரூப் 4’ பணியிடங்களுக்கு, பொதுவாக ஒரே தேர்வும்கூட நடைபெறலாம்.‘டி.என்.பி.எஸ்.சி.’ தேர்வுகள் குறித்து நிறைய விவரங்கள் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதிலும் மிக சுவாரசியமான ஒரு செய்தி சொல்லியே ஆகவேண்டும். வேறு எந்தப் பணியாளர்  தேர்வாணையமும் தராத சிறப்புச் சலுகையை ‘டி.என்.பி.எஸ்.சி.’ தருகிறது. அது என்ன..? அடுத்த இதழில் பார்ப்போம்…  

(வளரும்)

X