அறிய வேண்டிய மனிதர் : திவ்யா சூர்யதேவரா

10/11/2018 1:03:59 PM

அறிய வேண்டிய மனிதர் : திவ்யா சூர்யதேவரா

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ். மிகவும் பிரசித்திபெற்ற ‘செவர்லே’ கார் இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான். இந்த உலகப் புகழ்பெற்ற மல்டி நேஷனல் கம்பெனியின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக பதவியேற்க இருக்கும் திவ்யா சூர்யதேவரா சென்னையைச் சேர்ந்தவர் என்பது பெருமைக்குரியது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை முடித்த இவர், தனது 22வது வயதில் அமெரிக்காவுக்குச் சென்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து முடித்தார்.

முதலில் முதலீட்டு வங்கியான யுபிஎஸ் வங்கியில் பணியாற்றிய இவர், பின்னர் ஓராண்டு கழித்து தனது 25வது வயதில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அந்த நிறுவனத்தின் பல துறைகளிலும் பணியாற்றியவர், நிறுவனத்தின் கார்ப்பொரேட் ஃபைனான்ஸ் துறையின் வைஸ் பிரசிடென்ட்டாக உயர்ந்தார். 2016ஆம் ஆண்டின் கிரெய்ன்ஸ் டெட்ராய்ட் பிஸினஸின் 40 வயதுக்கு உட்பட்ட 40 வெற்றியாளர் பட்டியலில் இடம்பிடித்தார் திவ்யா. ‘‘இவரின் அனுபவம் எங்கள் நிறுவனத்தின் நிதிசெயல்பாடுகள் மற்றும் தொழில்வளர்ச்சியில் பல வருடங்களாக மிகச்சிறந்த மாற்றங்களை தந்தது.

திவ்யா நிதித் துறை தலைமைப் பொறுப்புக்கு வருவது எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் உயர்த்தும்” என்று ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பாரா தெரிவித்தார். சிறு வயதில் தந்தையை இழந்த திவ்யா அம்மாவின் அரவணைப்பில்தான் இத்தனை உச்சங்களையும் தொட்டிருக்கிறார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் உயர் பொறுப்பு, குடும்பம் என இரண்டையும் சமன்படுத்தி உலகின் முன்மாதிரி பெண்கள் பட்டியலில் திவ்யா சூர்யதேவரா இடம்பிடித்துள்ளார். மேலும் இவரைப்பற்றி தெரிந்துகொள்ள https://en.wikipedia.org/wiki/Dhivya_Suryadevara

X