கடிதம் எழுதும் போட்டியில் இந்திய அளவில் முதல் பரிசு!

10/24/2018 3:03:55 PM

கடிதம் எழுதும் போட்டியில் இந்திய அளவில் முதல் பரிசு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அசத்தும் அரசுப் பள்ளி மாணவன்!

பேச்சுவழக்கில் உருவத்துக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லை என்பதை உணர்த்த ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பார்கள். இதை நிரூபித்திருக்கிறார் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கொம்யூனைச் சேர்ந்த சேந்தநத்தம் அரசு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்றுவரும் மாணவர் சஞ்சீவ். பள்ளியில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி நடத்தப்பட்ட பிரதமருக்கு கடிதம் எழுதும் போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியை செல்வி மகிழ்ச்சியோடு சில தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘மாணவன் சஞ்சீவின் பெற்றோர் பூராசாமி, வளர்மதி இருவரும் கூலித்தொழிலாளிகள். தங்கை சுருதி கண்ணகி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்றுவருகிறார். சஞ்சீவ் மழலையர் பள்ளியில் பயின்றபோதிலிருந்தே புத்திசாலிக் குழந்தையாக இருந்துள்ளார். துருதுருப்பான இந்த மாணவன் மழலைப் பாடல் பாடுவதில் வல்லவர், கதைகளைத் தெளிவான உச்சரிப்புடன் சொல்லும் திறமைகொண்டவர்.

பிரதமருக்கு கடிதம் எழுதும் போட்டியில் மாணவர் சஞ்சீவ் எழுதிய கடிதம் தேர்வு செய்யப்பட்டு புதுச்சேரி கல்வித்துறை மூலம் புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய அளவில் பல ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் சஞ்சீவ் எழுதிய கடிதம் முதல் பரிசை வென்று எங்கள் பள்ளிக்கு பெருமை பெற்றுத் தந்துள்ளது.

சஞ்சீவ் எழுதிய கடிதத்தில் தன்னுடைய அறியாமையால் எவ்வாறு ஓர் அழுக்குப் பையனாக இருந்தார் எனவும், பள்ளியில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விளக்கியதன் விளைவாக சுயசுத்தம், சுகாதாரம், சுற்றுப்புறத்தூய்மை இவற்றை இப்போது பேணிக்காப்பதாகவும் எழுதியுள்ளார். ‘நான் இப்போது அழுக்குப் பையன் இல்லை, அழகுப் பையன்’ என்ற இவரது வாசகம் மனதைக் கவர்வதாக இருந்தது. தன்னைப்போன்ற குழந்தைகளுக்கும், தம் கிராம மக்களுக்கும் சுற்றுப்புறத்தூய்மை குறித்து சொல்லித்தரவும் உறுதி கூறியிருந்தார்.

மாணவர் சஞ்சீவ் இதற்கு முன்பு கதைப்பாடல், கதை சொல்லுதல், கையெழுத்து, நடனம் எனப் பல போட்டிகளில் கலந்துகொண்டு மாநில அளவில் பரிசுகளை வென்றுள்ளார். அக்டோபர் 2ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து கடிதம் எழுதும் போட்டிக்கான முதல் பரிசைப் பெற்றுள்ளார்’’ என்றார் செல்வி.

 சஞ்சீவ் போன்ற பல மாணவர்கள் உருவாவதில் பள்ளியின் பங்கு எத்தகையது என்பதை தலைமையாசிரியை செல்வி கூறும்போது, ‘‘சேந்தநத்தம் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மிகவும் ஏழ்மைச் சூழ்நிலையிலிருந்து வருபவர்கள். மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து அவற்றை வெளிக்கொணர்வதில் இப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். அனைவரும் கூட்டாக முயற்சி செய்து, பள்ளி மாணவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி வருவது இப்பள்ளியின் சிறப்பம்சம்.

புதுச்சேரி மாநிலத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பள்ளிகளில் மிகச் சிறப்பான பள்ளி இது. பல பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. இப்பள்ளி பல திறமையான மாணவர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இதற்கு சஞ்சீவ் ஒரு சான்று.கடந்த நான்காண்டுகளில் இப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் பல பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த ஆண்டு அகில இந்திய அளவில் மூன்றாமிடம் நின்று தூய்மைப்பள்ளி விருது பெற்று பெருமையோடு விளங்குகிறது. இவ்வாண்டில் தேசிய அளவில் இரண்டு விருதுகளைப் பெற்ற ஒரே பள்ளி என்ற பெயரோடு சேந்தநத்தம் பள்ளிக்கும், புதுச்சேரி மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளது’’ என்று பெருமிதத்தோடு பேசி முடித்தார் தலைமையாசிரியை செல்வி.

- தோ.திருத்துவராஜ்

X