வேலைவாய்ப்புகளை மாய்த்த இயந்திரமயம்!- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

12/5/2018 3:10:31 PM

 வேலைவாய்ப்புகளை மாய்த்த இயந்திரமயம்!- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

நன்றி குங்குமம் சிமிழ் - கல்வி வழிகாட்டி

வளர்ந்து வரும் தொழில்நுட்பப் புரட்சி பல நன்மைகளைச் செய்தாலும் உலக நாடுகளோடு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த உதவினாலும் இயந்திர மயமானதால் பல தொழில்களில் வேலைவாய்ப்புகளை இழந்தவர்கள் ஏராளம் என்பதை மறுப்பதற்கில்லை.‘என்னை என்ன செய்யச் சொல்றீங்க..? நாத்து நட... களை எடுக்க... வரப்பு எடுக்க… தண்ணி பாய்ச்ச... எதுக்குமே, ‘ஆளுங்க’ கெடைக்க மாட்டேங்கறாங்களே... இப்பிடி இருந்தா, வேளாண்மை எப்படி செய்யறது..?’

இந்தியா முழுவதும் பரவலாக இந்தக் குரல் கேட்கிறது. விவசாயம் மட்டுமல்ல; நெசவு, மீன் பிடிப்பு, மண் பாண்டம் செய்தல் உள்ளிட்ட எல்லாவற்றிலும் இந்தப் பிரச்னை வேரூன்றிக் கிடக்கிறது. ‘இயந்திர மயம்’ கொண்டு வந்த தீமைகளில் இதுவும் ஒன்று. எல்லாவற்றையும் இயந்திரங்களே பார்த்துக்கொள்ளும்.‘உத்தரவுகள்’ (commands) தருவது மட்டுமே நமது வேலை என்று, பணித் தேவை எப்போது உடலுழைப்பைப் புறம் தள்ளத் தொடங்கியதோ அப்போதே, இந்தியாவின் பாரம்பரியத் தொழில்கள், தேயத் தொடங்கிவிட்டன.

இன்றைய நலிவுற்ற நிலைக்கு, இயந்திர  மயமாக்கலும் ஒரு முக்கியக் காரணம்.‘எத்தனை நாளைக்குத்தான் பழைய முறைகளையே கொண்டிருப்பது..? காலத்துக்கு ஏற்ப அறிவியல் மாற்றத்துக்கு ஏற்ப, நாமும் மாறவேண்டாமா...?’. மிகவும் நியாயமான கேள்விதான். இதற்கு முன்னாள் பிரதமர், நல்ல பதில் தருகிறார். ‘யார் அந்த முன்னாள் பிரதமர்?’ என்றுதானே யோசிக்கிறீர்கள்.

முழுநேர விவசாயியாக இருந்து பிரதமர் ஆனவர் அவர். விவசாயிகளின் நலன்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர், பாடுபட்டவர். இன்று அநேகமாக எல்லாருமே மறந்துபோய்விட்ட சரண்சிங்! பிரதமர் ஆன பிறகு, ஒரு கருத்தரங்கில் பேசியபோது சரண்சிங் சொன்னார் - ‘நவீன மயம் என்றாலே, இயந்திரமயம்தான் என்று கட்டாயம் இல்லை.

நவீன வழிமுறைகளை, கண்டுபிடிப்புகளை, நம்முடைய வலிமையான மனித வளத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ள முயற்சித்தல் வேண்டும்.’ மிக அருமையான வாசகம். இன்றைய இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்னைக்கு மூல காரணம் இங்குதான் பொதிந்து கிடக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு இயந்திர மயமாக்கலுக்கு முழு ஆதரவு நல்கினோம்.

இது எந்த அளவுக்கு மோசமான நிலைக்கு நம்மை தள்ளிவிட்டது. அதற்கான சில உதாரணங்களைப் பார்ப்போம்… வெறுமனே 50 பேர் பணி செய்கிற ஒரு நிறுவனத்தில், ‘பணியாளர் வருகைப் பதிவேடு’ (‘அட்டண்டன்ஸ் ரிஜிஸ்டர்’) பராமரிப்புக்கு, ‘பயோ மெட்ரிக்’ முறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு மேலாளர் அல்லது ‘மேஸ்திரி’ செய்யவேண்டிய ‘ஊழியர் கண்காணிப்பு’ பணி இப்போது, ஒரேயொரு இயந்திரம் வசம் தரப்படுகிறது.

இதனால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? நன்றாகத் தெரிகிறது. ஒரு முதலாளிக்குப் பணம் மிச்சம். ஒரு தொழிலாளிக்கு வேலை போய்விட்டது. ஒரு குடும்பத்துக்கே வருமான இழப்பு. ஆனால், வேறு வழியில்லை என்றாகிவிட்டது. சாலை போடுவதைப் பார்த்தால்... உயர்ந்த மாளிகைகள் கட்டப்படுவதைப் பார்த்தால், எல்லா இடங்களிலும் விலை உயர்ந்த நவீன இயந்திரங்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன.

நூறு உழைப்பாளிகள் நூறு நாட்களில் செய்கிற பணியை ஒரேயொரு இயந்திரம், ஒரே நாளில் செய்து முடித்துவிடுகிறது. அந்த இயந்திரம் வைத்திருப்பவர் யார்..? ஏதோ ஒரு கட்டுமான நிறுவனம். நூறு தொழிலாளர்களின் ஊதியம், அந்த ஒரு நிறுவனத்துக்கு மட்டுமே போய்ச் சேர்ந்துவிடுகிறது. எத்தனை பேருக்கு, அடித்தட்டு மக்களுக்கு, வேலையும் போச்சு? வருமானமும் போச்சு? வாழ்க்கையும் போச்சு?

எங்கெல்லாம் எப்போதெல்லாம் கனரக நவீன இயந்திரங்களைப் பார்க்கிறீர்களோ.. அங்கெல்லாம் அப்போதெல்லாம் இதனை நினைவில் கொள்வோம் - ‘இதனால் நூறு குடும்பங்கள் ‘நடுத்தெருவுக்கு வந்து விட்டன!’ இது ஒன்றும், அச்சுறுத்துவதற்காகச் சொல்லப்படுகிற கற்பனை வாதம் அல்ல. நம் கண் முன்னே நிகழ்ந்து வருகிற, உழைக்கும் மக்களுக்கு எதிரான பெரிய சிக்கல்.

இயன்றவரை இயந்திரங்கள் இல்லாமல் மனித பங்களிப்புடன் செய்யப்படுகிற எந்தத் தொழிலும், பல நூறு குடும்பங்களை வாழவைக்கும். இதிலே இன்னொரு கொடுமையும் உண்டு. உடல் ஆரோக்கியம், உயிர்ப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கிற பல தொழில்களில் இயந்திரங்களைக் கொண்டு வரச் சற்றும் முயலாதவர்கள், தேவையற்ற இடங்களில் எல்லாம் இயந்திரங்களைக் கொண்டு வந்து திணிக்கிறார்கள்.

யோசித்துப் பார்ப்போம்... மனிதக் கழிவுகளை அகற்றுதல், நிலத்தடிக் கால்வாய்களை சுத்தம் செய்தல் என்று ஆபத்தான காரியங்களில் சற்றும் மனிதாபிமானம் இல்லாமல், தொழிலாளர்களை ஈடுபடுத்துகிறோம். இதற்கெல்லாம் ஏன், இயந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தக்கூடாது..? நிலவுக்கும் செவ்வாய்க் கிரகத்துக்கும் விண்கலன்களைத் தயாரித்து அனுப்புகிற நம்மால், கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்கிற இயந்திரங்களைத் தயாரிக்க முடியாதா..?

இன்னொரு புறம் என்ன நடந்துகொண்டிருக்கிறது..? ‘மனிதக் கைகள்’ படாமல், முற்றிலும் இயந்திரங்களே தயாரித்தது என்று பெருமையுடன் விளம்பரப்பபடுத்த முடிகிறது. நாம் சாப்பிடும் சிற்றுண்டிக் கடைகளில் கூட, ‘கை படாமல்’ சமைத்தது என்றால், ஆரோக்கியமானது என்று ஏற்றுக்கொள்கிறோம். நமக்குள் எப்படி வந்தன இந்தத் தவறான கற்பித்தல்கள்..? இயந்திரங்களைப் பயன்படுத்துதலில் இதுவரை ஒரு ‘தேசியக் கொள்கை’ வடிவமைக்கப்படவில்லை.

இதை விடவும் ஆச்சரியம் - யாரும் இதனைக் கோரவும் இல்லை. பணி வாய்ப்புகளுடன் நேரடித் தொடர்பு கொண்டது இது. ஆனாலும் நாம் சற்றும் கவலைப்படவில்லை. சற்றே மனதுக்குக் கலவரமாகத்தான் இருக்கும். ஆனாலும் இதுதான் உண்மை. இன்றைய நிலை நீடித்தால், நீடிக்க அனுமதிக்கப்பட்டால், அடுத்த தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பு அறவே அற்றுப்போய்விடும். அத்தனை கோடி பேரும், வாழ்வாதாரம் இல்லாமல் எப்படிப் பிழைக்கப்போகிறார்கள்...?

சிந்திப்போம்…

X