சிறந்த கண்டுபிடிப்புக்கான தேசிய விருது பெற்ற மாணவி

1/8/2019 4:48:29 PM

சிறந்த கண்டுபிடிப்புக்கான தேசிய விருது பெற்ற மாணவி

நன்றி குங்குமச் சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் மற்றும் பால் பொருட்களில்கூட இன்றைக்கு கலப்படம் உள்ளது. அவற்றை உட்கொள்வதால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழலில் எது நல்ல பால்? எது கலப்படப் பால்? என்பதை சாமான்ய மக்களும் கண்டறியும் வகையில் ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த எஞ்சினியரிங் மாணவி ஹேமலதா. அதற்காக அவருக்கு தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது. அவரின் நோக்கம் மற்றும் கண்டுபிடிப்பு குறித்து ஹேமலதா கூறியதைப் பார்ப்போம்…

‘‘நான் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ‘செயின்ட் ஜோசப்’ஸ் பொறியியல் கல்லூரியில் பி.டெக். உயிரி-தொழில்நுட்பவியல் இறுதியாண்டு படித்து முடித்திருக்கிறேன். இறுதியாண்டில் ஒவ்வொருவரும் ஒரு புராஜக்ட் ஒர்க் செய்யவேண்டும். என்னுடைய புராஜக்ட் ஒர்க் ‘நவீன பால் மற்றும் ஆர்கானிக் உணவுகளில் உள்ள கலப்படத்தை கண்டறியும் கருவி’ கண்டுபிடிப்பதாகும். அதற்குக் காரணமாக இருந்தது, ‘ஏழை எளிய மற்றும் படிப்பறிவில்லாதவர்களும் பயன்படுத்தும் வகையில் ஏதாவது ஒன்றை நீ கண்டுபிடிக்க வேண்டும்’ என்று என் தந்தை கூறிய வார்த்தைதான்’’ என்கிறார்.

மேலும் தொடர்ந்த மாணவி, ‘‘நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களான பால் மற்றும் காய், கனிகளில் உள்ள உடலுக்கு கெடுதல் விளைவிக்கக்கூடிய கெமிக்கல்களைக் கண்டறிய ஒரு சோதனை பட்டையைக் கண்டுபிடிக்கலாம் என தோன்றியதை உதவிப் பேராசிரியை யுவராணியிடம் கூறினேன். இதையடுத்து அவர் உற்சாகமாக வழிநடத்த தொடங்கினார்.

இதையடுத்து பாலில் யூரியா இருப்பதைக்கண்டறிய நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளைக் காகிதத்தை சிறுசிறு துண்டுகளாகச் செய்து, அதில் சில வேதிப்பொருட்களை சேர்த்து ஒரு பட்டையைபோல் உருவாக்கினேன். அதேபோல் ஆர்கானிக் பழம் மற்றும் காய்கறிகளில் உள்ள பூச்சிக்கொல்லியைக் கண்டறிய நாம் உபயோகப்படுத்திவிட்டு தூக்கியெறியும் ஸ்கெட்ச் பென்னில் உள்ள பஞ்சுச் சுருளைப் பயன்படுத்தி தயாரித்
துள்ளேன்.

இதில் இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன. ஒன்று, இதை சாமானிய மக்களும் பயன்படுத்தி எளிதாக நிறம் மாற்றத்தை வைத்து கலப்படத்தைக் கண்டறிய முடியும். உதாரணமாக, பாலில் யூரியா உள்ளதா என்று தெரிந்துகொள்ள இந்த காகிதப் பட்டையை சிறு துளி பாலில் வைத்தால் போதும், வெளிர் மஞ்சள் நிறத்திலிருந்து அடர் மஞ்சள் நிறமாக பட்டை மாறினால் யூரியா கலப்படம் உள்ளது என புரிந்துகொள்ளலாம். அதேபோல், பூச்சிக்கொல்லியைக் கண்டறிய சிறு பழம் அல்லது காய் சாறுகளை பஞ்சு சுருளில் சேர்த்தால் வெள்ளை நிறமான பஞ்சு நீல நிறமாக மாறினால் அதில் பூச்சிக்கொல்லி இருப்பதை உறுதி செய்யலாம்.

இரண்டாவது சிறப்பம்சம், கடைகளில் பாலில் உள்ள கலப்படத்தை கண்டுபிடிக்க ரூ.800 முதல் ரூ.1000 வரை கருவி விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக 20 முதல் 50 பைசாவுக்கே கிடைக்கும் வகையில் காகிதத்தைக்கொண்டே பாலில் கலப்படத்தை கண்டுபிடிக்கும் முறையைக் கண்டுபிடித்தேன். இதன் காரணமாகவே எனக்கு இந்த ஆண்டின் தேசிய பொறியியல் கழகத்தின் (INAE) சிறந்த கண்டுபிடிப்பிற்கான புத்தாக்க விருது (Innovative Project Award) கிடைத்துள்ளது.

எனது கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் பாபுமனோகரன் புத்தாக்கவியூகத்தை எப்போதுமே வரவேற்பவர். அதனால் என்னுடைய ஆய்வுப் பகுதியை எனது கல்லூரியிலும் மற்றொரு பகுதியை கிண்டியில் உள்ள அர்மட்ஸ் பயோடெக் ஆய்வகத்திலும் உதவிப் பேராசிரியை யுவராணியின் உதவியோடு வெற்றிகரமாக செய்ய முடிந்தது.’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

X