குறைந்த செலவில் செயற்கை மழையை உருவாக்கும் குட்டி விமானம்!

2/6/2019 4:06:06 PM

குறைந்த செலவில் செயற்கை மழையை உருவாக்கும் குட்டி விமானம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழக மாணவனின் நவீன கண்டுபிடிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவருகிறார் மாணவர் திருவருட்செல்வன். இவர் சிறுவயதிலிருந்தே பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்து மண்டல, மாநில மற்றும் தேசிய அளவில் பல பரிசுகளை வென்றுள்ளார். இவரின் சமீபத்திய கண்டுபிடிப்பு செயற்கை மழை பொழிய வைக்கும் ஆளில்லா குட்டி விமானம்.

கடந்த வருடம் டிசம்பர் 27ம் தேதி ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அறிவியல் மாநாட்டில் பத்து ஆசிய நாடுகளும், நான்கு அரபு நாடுகளும் கலந்துகொண்டன. இப்போட்டியில் இவரது குட்டி விமானம் பி++ விருது வென்றுள்ளது. சுமார் நானூறு அடி உயரம் பறக்கும் ஆளில்லா குட்டி விமானம் கண்டுபிடித்ததற்கான காரணத்தையும், அதன் இயங்கு முறையையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார் திருவருட்செல்வன்.

‘‘உலகின் இன்றைய முக்கிய பிரச்னை புவி வெப்பமயமாதல். இதன் விளைவாக அதீத வெப்பம், அதீத குளிர் மற்றும் பருவம் தவறிய மழை என ஒட்டுமொத்த பருவநிலையும் அப்படியே நேரெதிராக மாறியுள்ளது. மேலும் மழையை உருவாக்கும் மேகங்களின் தன்மையும் முற்றிலுமாக மாற்றம் அடைந்துள்ளது.  

பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் மேகங்கள் ஒன்றோடு ஒன்று இணையும்போது இடி இடித்து மின்னல் வெட்டி மழை பொழிகிறது. ஆனால், புவி வெப்பமயமாதலால் பாஸிட்டிவ்-பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் - நெகட்டிவ் என மேகங்களின் தன்மை மாறியுள்ளது. இதனால் மழையும் பொய்த்துப்போகிறது… பருவ நிலையும் மாற்றம் அடைகிறது. ஆகவே, மேகங்களின் தன்மையை மாற்றவும், செயற்கையாக மழையை உருவாக்கவும் விமானம் மூலம் மேகங்களில் கெமிக்கல் தூவப்படுகிறது.

வெளிநாடுகளில் பெரிய விமானங்களில் குறைந்த அளவு கெமிக்கல் எடுத்துச் செல்லப்பட்டு மேகத்தில் தூவி செயற்கை மழையை உருவாக்குகின்றனர். இது கிளவுட் சீடிங் (Cloud Seeding) என அழைக்கப்படுகிறது. மொத்தம் ஐம்பது வகையான மேகங்கள் உள்ளன. இம்முறை தவறாக செயல்படுத்தப்பட்டால் ஆலங்கட்டி மழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

மேலும் கெமிக்கலை தூவும்போது மேகங்களிடையே சிறுவெடிப்பு ஏற்பட்டு பொருட்சேதமும் ஏற்படும். அதிக செலவு பிடிக்கும் இம்முறையைப் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இந்தியாவில் சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆகையால் இம்முறைக்கு மாற்றாக குறைந்த செலவில் திறன்மிக்க கண்டுபிடிப்பை நிகழ்த்தவேண்டும் என்று அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கினேன்’’ என்கிறார்.

மேலும் தொடர்ந்த மாணவர், ‘‘வெளிநாடுகளில் தூவப்படும் கெமிக்கல்கள் தாவரங்களின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. ஆகையால் வீட்டில் பயன்படுத்தப்படும் உப்பை பொடியாக்கி டிஸ்டில் வாட்டருடன் மிக்ஸ் செய்து அந்த கெமிக்கலை மேகத்தில் தூவ பயன்படுத்தினேன்.

என்னுடைய விமானத்தில் வெதர் சென்சார் பொருத்தப்பட்டு தட்பவெப்பநிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி காற்றின் ஈரப்பதம் அதிகமாகும்போது விமானம் ஆட்டோமேட்டிக்காக மேலே பறந்து சென்று மேகங்களின் தன்மையை ஆராயும். மழை வரும் வாய்ப்பை அறிந்து மேகங்களில் கெமிக்கலை தூவி செயற்கை மழை பொழியச் செய்யும்.

ஒடிசா மாநிலத்தில் டிசம்பர் 27ம் தேதி நடைபெற்ற 26th National Children’s Science Congress-ல் இக்கண்டுபிடிப்பு இரண்டாம் இடமான பி++ விருது வென்றது.’’ என்ற திருவருட்செல்வன் இக்கண்டுபிடிப்பின் அடுத்த கட்ட வேலைகளில் பிசியாக உள்ளார்.‘‘சில தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்து வானிலை மையத்துடன் தொடர்பு ஏற்படுத்தி சேட்டிலைட்டுடன் கனெக்ட் செய்தால் போதும், இவ்விமானம் மேகத்தை தொடர்ந்து கண்காணித்து தேவையான இடங்களில் தானாகவே செயற்கை மழையை உருவாக்கும்.’’ என்று சொல்லும் இவர் தனக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வம் வந்த சம்பவத்தையும் விவரித்தார்.

‘‘ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் வீட்டுக்கு வெளியே ரிமோட் கார் வைத்து விளையாடிவிட்டு ரிமோட்டை வெளியே போட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். மழையில ரிமோட் நனைந்து ரிமோட் இல்லாமல் கார் தானாக ஓட ஆரம்பித்துவிட்டது. எப்படி கார் தானாக இயங்கியது? என்ற கேள்வி என்னை மூன்று வருடமாக துரத்தியது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் சயின்ஸ் சார் ராஜசேகர் ஷார்ட் சர்கியூட் ஆனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி விளக்கினார்.

இவ்விளக்கம் என் மூன்று வருட கேள்விக்கு விடை அளித்தது. மேலும் சர்கியூட்கள் பற்றி A to Z விளக்கமாக கற்றுக்கொடுத்து சந்தேகங்களைத் தீர்த்துவைத்தார். அன்றிலிருந்து அறிவியல் மீது எனக்கு தீராத ஆர்வம் ஏற்பட்டது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து புதிய கண்டுபிடிப்புகளைப் படைப்பதில் ஈடுபாடு ஏற்பட்டது.

விவசாயம் செய்யும் நிலத்தின் அமைப்பு, அதன் தன்மை, சீசன், தட்பவெப்பம் மற்றும் நீர் ஆதாரம் ஆகியவற்றை கணக்கிட்டு பயிர்களுக்கு தேவையான நேரத்தில் தேவையான அளவு ஆட்டோமேட்டிக்காக தண்ணீர் தெளிக்கும் கருவியை ஒன்பதாம் வகுப்பில் கண்டுபிடித்தேன். மேலும் உணவு உற்பத்திக்கு ஒளிச்சேர்க்கை இன்றியமையாதது.

ஆனால், அது பகலில் சூரிய வெளிச்சத்தால் மட்டுமே நிகழக்கூடியது. ஆகவே, ஹாலோஜன் பல்பை(Halogen Bulp) பயன்படுத்தி செயற்கை ஒளியால் சூரியஒளி மறைந்த பின்னரும் சுமார் ஆறுமணி நேரம் ஒளிச்சேர்க்கை நிகழச்செய்து, உணவு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அக்கருவியை வடிவமைத்தேன். அடுத்ததாக பத்தாம் வகுப்பு படிக்கும்போது,  வண்டியின் சைலன்சரில் சில மாற்றங்களை செய்து காற்று மாசுப்பாட்டை குறைக்கும் வகையில் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினேன்.

நல்ல வரவேற்பு கிடைத்தது. 2016-17 மற்றும் 2017-18 கல்வி ஆண்டுகளில் எனது கண்டுபிடிப்புகளுக்கு மண்டல, மாவட்ட மற்றும் மாநில அளவில் முதல் பரிசு கிடைத்தது. மேலும் தென்னிந்திய அளவில் ஸ்பெஷல் விருதும் கிடைத்தது பெருமகிழ்ச்சி அளித்தது’’ எனும் திருவருட்செல்வன் ‘‘சமூக நலனிற்கு உதவும் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து செய்வதே தனது லட்சியம்’’ என்கிறார்.மாணவர் திருவருட்செல்வனின் சமூக நலன் சார்ந்த நல்லெண்ணம் ஈடேற நாமும் வாழ்த்துவோம்!

- வெங்கட் குருசாமி

X