அண்ணா பல்கலையின் புதிய தேர்வுமுறைக் குழப்பங்கள்!

2/7/2019 3:46:59 PM

அண்ணா பல்கலையின் புதிய தேர்வுமுறைக் குழப்பங்கள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சர்ச்சை

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள எஞ்சினியரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் கிண்டி எஞ்சினியரிங் கல்லூரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லுாரி ஆகியவற்றில் இந்தப் பாடத்திட்டம் அமலுக்கு வந்தது.

பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டம் மற்றும் செமஸ்டர் தேர்வில் புதிய நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி ஒரு செமஸ்டரில் தோல்வியடையும் பாடத்துக்கான மறுதேர்வை இரண்டாவது செமஸ்டரில் எழுத முடியாது. மாறாக மூன்றாவது செமஸ்டரில் தான் எழுத முடியும். அதேபோல ஒரு செமஸ்டரில் மூன்று அரியர்கள் மட்டுமே எழுதமுடியும் என பல்வேறு விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆனால், கடைசி செமஸ்டர் அல்லது அதற்கு முந்தைய செமஸ்டரில் தோல்வியடைந்தால் அந்தப் பாடங்களை எப்போது எழுதி தேர்ச்சி பெறுவது என்பதற்கு பல்கலைக்கழகம் சார்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. இதனால் எங்களின் தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுவதுடன், கல்லூரிப் படிப்பை முடித்து உடனடியாக வேலைக்குச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் புதிய நடைமுறைகளை ரத்து செய்து, தடை விதிக்கவேண்டும்’ என மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்டோம்….

பேராசிரியர், முனைவர் ப.வே. நவநீதகிருஷ்ணன்  அண்ணா பல்கலைக்கழக இணைவுக் (Affiliated) கல்லூரிகள் அனைத்துக்கும் விருப்ப அடிப்படை மதிப்புத் திட்டம் (Choice Based Credit System) விரிவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. வளர்ந்துவரும் கல்வித் தேவைகளுக்கும் மாணவர்களின் விருப்பங்களுக்கும் இம்முறையில் ஈடுகொடுக்க முடிவது இதன் பெரும் பயனாகும். விருப்பமில்லாத பாடங்களையும், படிக்கமுடியாத அளவிலும் கற்கவேண்டிய வற்புறுத்தல் இதில் குறைவு. திறமைமிக்க மாணவர்கள், படிப்பை முடிக்கத் தேவையான மதிப்புகளை (credits) விரைவாக ஈட்டி, மீதமுள்ள காலத்தில் கூடுதலான பாடங்களை ஆன்லைனிலும் படிக்கலாம். இவ்வளவு நன்மைகளைக் கொண்ட இத்திட்டத்தில் சில கெடுபிடிகள் இருப்பதில் வியப்பில்லை.

அண்ணா பல்கலையில் அதன் ஆரம்ப காலத்திலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட முயற்சிகள் நடந்தன. அதை நடைமுறைப்
படுத்துவதில் எழுந்த சிக்கல்களைக் கண்டு (எடுத்துக்காட்டாக, தினசரி பாட அட்டவணை (Time Table)யில் உணவு இடைவேைளயே இல்லை. அந்த அளவுக்கு எல்லா நேரமும் பாடங்கள்!) மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இப்பொழுதும் கொண்டுவரலாம்.

CBCS என்பதன் ஒரு முக்கிய அங்கம், ஒரு மாணவர் ஒரு செமஸ்டர் தேர்வில் ஒரு பாடத்தில் தேறவில்லை என்றால், அடுத்த செமஸ்டர்
தேர்வில் அதை நேராக எழுதமுடியாது; அடுத்தமுறை அந்தப் பாடம் நடத்தப்படும்போது மீண்டும்அதற்குப் பதிவு செய்துகொண்டு, அந்த வகுப்பு
களுக்குச் சென்று, தேவையான அட்டென்டன்ஸ் பெற்று, இன்டர்னல் தேர்வுகள் எழுதி மதிப்பெண் ஈட்டி, முடிவில் செமஸ்டர் தேர்வும் எழுதவேண்டும்.

இதனால், எடுத்துக்காட்டாக, odd semester தேர்வில் தோற்றவர்கள் even semester-ல் அதை எழுத முடியாது; ஏதாவது ஒரு odd semester-ல் தான் எழுத முடியும். இதனால் ஆண்டுக்கு ஒரு வாய்ப்புதான் கிடைக்கும். இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் காலம் கூடும்; மறதி பாதிப்பு மிகும்; அரியர்ஸ் சேரும்; தேறும் வாய்ப்புகள் குறையும்; அனுமதிக்கப்பட்ட காலத்துக்குள் கோர்ஸை முடிக்காமலும் போகலாம்.

அடுத்து, இப்புதிய முறையினால் முன்பு எந்தப் பாடத்திலும் தேற இருந்த வாய்ப்புகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிடுகிறது. (மேல் செமஸ்டர் பாடத் தேர்வு வாய்ப்புகளை இது மிகவும் பாதிக்கும்). இதனால் அரியர்ஸ் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அனுமதிக்கப்பட்ட 8 ஆண்டுகள் கழிந்தும் கோர்ஸ் முடிக்க முடியாமல்போகும் அவலநிலைக்கு உட்படுவோரின் எண்ணிக்கையும் கூடும்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேல் படிப்புக்கும் வேலைக்கும் போக விழைபவர்களையும் இத்தாமதம் பாதிக்கும். பி.இ படிப்பின் முதல் இரண்டு ஆண்டுகளின் பாடங்களுக்குப் புதிய தேர்வு முறையையும், அடுத்த இரண்டு ஆண்டுகளின் பாடங்களுக்குப் பழைய தேர்வு முறையையும் கடைப்பிடித்தால் இச்சங்கடங்கள் கணிசமாகக் குறையும்.

முனைவர் ரத்தினசபாபதி ஆண்டுக்கு ஒரு முறை பொதுத்தேர்வு (பல்கலைக்கழகத் தேர்வு) என்றிருந்த நிலை மாறி இரு பருவமுறைத் தேர்வு பல ஆண்டுகளாக உயர்கல்வியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு என்றிருந்த காலத்திலேயே மார்ச், ஏப்ரல் தேர்வு முடிந்தபின் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இடைத்தேர்வு நடத்தப்பட்டது. படிப்பிடை ஆண்டுகளிலிருந்தோருக்கு அம்முறையால் கால விரயம் ஏற்படாமலிருந்தது.  

ஓராண்டுப் பாடப்பகுதியில் ஆண்டில் இருமுறை தேர்வுகள் நடத்துவதற்குப் பதிலாக பாடப் பகுதியையே அரையாண்டுக்கு உரியதாக்கி ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு என மாற்றப்பட்டதுதான் இரு பருவமுறை. ஒரு பருவத்தில் தேர்ச்சி வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்துவரும் பருவத் தேர்வை எதிர்கொண்டார்கள்.

தேர்ச்சி வாய்ப்பினை ஈடுகட்ட உடனடி வாய்ப்பாகவும் இரு பருவமுறை அமைந்தது. தற்போது அண்ணா பல்கலைக்கழகம் புகுத்தியுள்ள புதிய தேர்வுச் சீர்திருத்தம் மாணவர்களின் வாய்ப்பினை (உரிமையினை) பறிப்பதாக உள்ளது. ஒற்றைப்படை எண் கொண்ட பருவத்தில் தேர்ச்சி வாய்ப்பினை இழந்தோர் அடுத்த ஒற்றைப்படை எண்பருவம் வரை காத்திருக்க வேண்டும். அதனால் அவர்களுக்கு மனஅழுத்தமும் மறதியால் ஏற்படும் தேர்ச்சி வாய்ப்பின்மையும் ஏற்படும். இந்நிலை மாணவர் நலனில் அக்கறையில்லாத போக்கு.

அண்ணா பல்கலை உறுப்புக் கல்லூரிகளும் தன்னாட்சிக் கல்லூரிகளும் ஏற்றுக்கொள்ளும்போது பிற கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பதேன்? என்று எதிர்வினை கொடுக்கப்படுகிறது. அக்கல்லூரிகள் ஏற்றுக்கொண்டனவென்றால் அதற்குக் காரணம் அடக்குமுறையும் எதிர்த்தோரை பழிவாங்கும் செயலுமாகும்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. கடந்த இரண்டு ஆண்டுகள் மாணவர்கள் பெற்ற பட்டறிவின் தாக்கம்தான் இந்த எதிர்ப்பு. யூ.ஜி.சி., ஏஐசிடிஇ போன்றவற்றை காரணம் காட்டி தங்கள் தனித்தன்மையை நமது பல்கலைக்கழகங்கள் இழக்கவேண்டும். நம் மாநில மரபையும் தனித்தன்மையையும் காப்பது நம் கடமையும் பொறுப்பும் ஆகும்.

X