டாய்லட் கிளீன் பண்ண புதுவிதக் கருவி

3/10/2020 3:27:38 PM

டாய்லட் கிளீன் பண்ண புதுவிதக் கருவி

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

இப்போட்டி மொத்தம் மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறுபவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு அனுமதிக்கப்பட்டு தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.  2020ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான போட்டி  சமீபத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி மாணவனின் தானியங்கி டாய்லெட் கிளீனர் கண்டுபிடிப்பு முதல் இடம் பிடித்தது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே எருக்குவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவரும் க.பிருத்விராஜின் வழிகாட்டி ஆசிரியரும், பள்ளியின் தலைமை ஆசிரியருமான சண்முகம் கூறும்போது, ‘‘புத்தாக்க ஆய்வுப் போட்டிகளுக்கான அறிவிப்பு எப்போதும் போல அறிவிக்கப்பட்டது.

பேருந்து வசதி கூட  முழுமையாக கிடைக்காத இந்தியக் கிராமங்களில் ஒன்றுதான் எருக்குவாய். கூலிவேலை செய்யும் பெற்றோர்களின் குழந்தைகள்தான் இப்பள்ளியில் பெரும்பாலும் படிக்கின்றனர். இது நடுநிலைப் பள்ளியாதலால் ஒன்பதாம் வகுப்பிற்கு மாணவர்கள் எட்டு கிலோமீட்டர் செல்ல வேண்டும். ஆகவே, அதிகச் செலவுகள் இல்லாத எளிமையான கண்டுபிடிப்பாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அவ்வாறு உருவானதுதான் தானியங்கி டாய்லட் கிளீனர் கண்டுபிடிப்பு. அம்மிக்கல்லையும், ஆட்டுக்கல்லையும் இன்றைய தலைமுறையினர் பயன்படுத்துவதில்லை. மிக்ஸியும் கிரைண்டரும் அந்த இடத்தை பிடித்துக்கொண்டன. தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் அதிகரித்துவரும் இவ்வேளையில் கழிவறையைச் சுத்தம் செய்யும் கருவியின் பயன்பாடுகள் இன்றியமையாததாக இருக்கும்.

மேலும் இக்கருவியைச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வரை  அனைவரும் பயன்படுத்தும் விதமாக இருக்கவேண்டும் என அதற்கான உருவாக்கத்தில் ஈடுபட்டோம். டாய்லட் கிளீன் பண்ண பயன்படுத்தும் ப்ரஷ், மோட்டர்,  இணைப்பிறகு இரும்பு ராடு போன்றவைதான் தேவையான பொருட்கள். மொத்தம் 200 ரூபாய்தான் செலவு. சுவிட்சை ஆன் செய்தால் போதும் இந்திய மற்றும் வெஸ்டர்ன் கழிவறைகளை மற்றும் யூரினல்களைத் தானியங்கி டாய்லட் கிளீனர் மூலம் சுத்தம் செய்யலாம். திருவள்ளூர் டி.ஆர்.டி.சி இந்து மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 62 பள்ளிகள் கலந்துகொண்ட அப்போட்டியில், இந்தியாவின் பிரபலமான அறிவியலாளர்கள் நடுவர்களாக இருந்தனர். சமூகத்திற்குப் பயன்படும் எளிமையான கண்டுபிடிப்பு.

இதன் சிறப்பே இதன் எளிமைதான் என்பதால் பிருத்விராஜின் தானியங்கி டாய்லட் கிளீனர் கண்டுபிடிப்பு முதல் இடம் பிடித்தது. கும்மிடிப்பூண்டி வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அடுத்ததாக நடக்கவிருக்கும் மாநில அளவிலான போட்டிகளுக்கு பிருத்விராஜ் தயாராகிக்கொண்டிருக்கிறார்’’ என்ற  தலைமை ஆசிரியர் சண்முகம், இக்கண்டுபிடிப்பைப் பரிசோதனை செய்தபோதே கிடைத்த வரவேற்பு பற்றியும் கூறினார். ‘‘மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் முன்னிலையில் எங்கள் கண்டுபிடிப்பைப் பரிசோதித்துக் காட்டினோம். கண்டுபிடிப்பிற்கான செலவைக் கேட்டார்கள். சொன்னவுடன் எங்களுக்கும் செய்துகொடுக்க முடியுமா எனப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்டனர்.

எங்கள் கண்டுபிடிப்பு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற  திருப்தி ஏற்பட்டது. நிச்சயமாக நவீன வடிவமைப்பிற்கு ஏற்றாற்போல் இக்கருவியை மேம்படுத்த வேண்டும். தற்போது மின் இணைப்பு மூலம் இயங்கும் இக்கருவியை பேட்டரி மூலம் இயக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளோம். மேலும் கிருமி நாசினியை நிரப்ப தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம்’’ என்கிறார் தலைமை ஆசிரியர் சண்முகம். சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் உபயோகப்படுத்தும் வகையில் எளிமையான, சிறப்பான கருவியை உருவாக்குவதே எங்கள் இலக்கு என தன்னம்பிக்கையுடன் கூறும் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவனின் தொடர் முயற்சிகள் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்!  

தொகுப்பு: வெங்கட் குருசாமி

X