JEE(Main),JEE(Advanced) நுழைவுத் தேர்வுகள்!

12/22/2016 5:18:25 PM

JEE(Main),JEE(Advanced) நுழைவுத் தேர்வுகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

IIT,NIT,CFTI போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech படிக்க

தேசியத் தொழில்நுட்பக் கல்விக்கழகம் (NIT) மற்றும் இந்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்பட்டுவரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (CFTIs) போன்றவற்றில் உள்ள பி.இ./பி.டெக். பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கும், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institutes of Technology (IIT), இந்தியச் சுரங்கங்கள் பள்ளி (Indian School of Mines) போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர்வதற்குமான JEE (Advanced) 2017 நுழைவுத் தேர்வுக்கு முதன்மைத் தகுதித் தேர்வாக JEE (Main) 2017 நுழைவுத்தேர்வு இருக்கிறது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் JEE (Main) 2017 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. தகுதிகள்: இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் 2015 அல்லது 2016 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2017 ஆம் ஆண்டில் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் 1.10.1992 தேதிக்குப் பின்பும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 1.10.1987 தேதிக்குப் பின்பும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

இரு மாற்றங்கள்: இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட JEE (Main) 2017 நுழைவுத்தேர்வுக் குறிப்புகளில் இரண்டு மாற்றங்கள் அறிவிக்கப்படுள்ளன. JEE (Main) தேர்வு ரேங்க் பட்டியலைக் கணக்கிடுவதில் +2 மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தரப்பட்டியல் தயாரிக்கப்படும்.கடந்த ஆண்டுகளில் JEE (Main) நுழைவுத்தேர்வுக்கு 60%, +2 மதிப்பெண்களுக்கு 40% என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுத் தரப்பட்டியலும், மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு JEE (Advanced)/JEE (Main) நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்பெறும். சேர்க்கை பெறும் மாணவர்கள் +2வில் குறைந்தது 75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அல்லது தொடர்புடைய தேர்வு வாரியங்கள் நடத்திய 12ஆம் வகுப்புத் தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்ற 20% மாணவர்களில் ஒருவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் +2வில் குறைந்தது 65% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.

இதுபோல், இந்த ஆண்டு இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆதார் பதிவு எண், பெயர், பிறந்த நாள், பாலினம் உள்ளிட்ட ஆதார் தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிடவேண்டும். இதுவரை ஆதார் பதிவு செய்யாதவர்கள் ஆதார் பதிவு மையங்களில் பதிவுசெய்து அங்கு தரப்படும் சேர்க்கை எண்ணை (Enrollment Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவேண்டும். இதற்காக சி.பி.எஸ்.இ. மூலம் சிறப்பு ஆதார் சேர்க்கை மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இம்மையங்கள் குறித்த விவரங்கள் JEE (Main) நுழைவுத் தேர்வுக்கான இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.

இரு வகையான தேர்வுகள்: இத்தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. பி.இ., பி.டெக். பட்டப்படிப்புகளுக்கு தாள் 1 தேர்வையும், பி.ஆர்க். (B.Arch) மற்றும் பி.பிளானிங் (B.Planning) பட்டப்படிப்புகளுக்கு தாள் 2 தேர்வையும் எழுத வேண்டும். இரண்டு சேர்க்கைக்கும் விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுதலாம்.

தாள் 1 நுழைவுத் தேர்வு பேனா மற்றும் தாளை அடிப்படையாகக் கொண்ட எழுத்து வழித் தேர்வு (Paper and Pen Based Exam), இணையம் வழியிலான கணினி வழித் தேர்வு (Computer Based Exam) எனும் இருவகையான தேர்வு களைக் கொண்டது. மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப, ஏதாவதொரு தேர்வினைத் தேர்வு செய்துகொள்ள முடியும். தாள் 2 நுழைவுத்தேர்வு எழுதுபவர்கள் பேனா மற்றும் தாளை அடிப்படையாகக் கொண்ட எழுத்து வழித் தேர்வை மட்டுமே எழுத முடியும்.   

விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.jeemain.nic.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தாள் 1 அல்லது தாள் 2 எழுத்து வழித் தேர்வுக்குப் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1000ம், மாணவிகள் ரூ.500ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500ம், இரண்டு தாள்களும் சேர்த்து எழுதுபவர்கள் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1800ம், மாணவிகள் ரூ.900ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.900ம் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தாள் 1 கணினி வழித் தேர்வுக்குப் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாணவர்கள் ரூ.500ம், மாணவிகள் ரூ.250ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250ம், இரண்டு தாள்களும் சேர்த்து எழுது வோர் பொது மற்றும் ஓ.பி.சி. மாணவர்கள் ரூ.1300ம், மாணவிகள் ரூ.650ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.650ம் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 2.1.2017.

தேர்வு நாள்: விண்ணப்பித்தவர்கள் அனைவரும் JEE (Main) 2017 தேர்வுக்கான அனுமதி அட்டையை 2017ஆம் ஆண்டு மார்ச் 2வது வாரத்தில் மேற்காணும் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட இந்தியா முழுவதுமுள்ள 117 தேர்வு மையங்களில் நடைபெறவிருக்கும் நுழைவுத்தேர்வில், எழுத்து வழித் தேர்வுகளில் தாள் 1 தேர்வு 2.4.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், தாள் 2 தேர்வு பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரையிலும் நடைபெறும். இணைய வழியிலான கணினி வழித் தேர்வு 8.4.2017 (சனி) மற்றும் 9.4.2017 (ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நடைபெறும்.

தேர்வு முடிவுகள்: JEE (Main) 2017 நுழைவுத்தேர்வுகளில் தாள் 1 தேர்வின் மதிப்பெண்கள் / JEE (Advanced) 2017 நுழைவுத்தேர்வுக்குத் தகுதியுடைய அகில இந்திய அளவிலான 2,20,000 மாணவர்கள் பட்டியல் 27.4.2017 அன்றும், தாள் 2 தேர்வுக்கான அகில இந்திய அளவிலான தரப்பட்டியல் 27.5.2017 அன்றும் வெளியிடப்படும்.

JEE (Advanced) 2017 தேர்வு: இந்தியாவிலிருக்கும் இந்திய தேசிய தொழில்நுட்பக் கழகங்களில் ஏதாவது ஒரு நிறுவனம் JEE (Advanced) 2017 நுழைவுத்தேர்வை ஆண்டுதோறும் சுழற்சி முறையில் நடத்திவருகிறது. 2017ஆம் ஆண்டுக்கான இத்தேர்வினை சென்னையிலுள்ள இந்திய தேசியத் தொழில்நுட்பக் கழகம் நடத்தவிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: JEE (Main) 2017 நுழைவுத்தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள்  JEE (Advanced) 2017 நுழைவுத்தேர்வுக்கு http://www.jeeadv.ac.in எனும் இணையதளத்தில் 28.4.2017 முதல் 2.5.2017 வரை விண்ணப்பிக்கலாம். தாமதக் கட்டணத்துடன் 3.5.2017 முதல் 4.5.2017 வரை விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பக் கட்டணம்: இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பெண்கள், எஸ்.சி./எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.1200ம், பொதுப்பிரிவினர் ரூ.2,400ம் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். தாமதமாக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பக் கட்டணத்துடன்  தாமதக் கட்டணமாக ரூ.500 சேர்த்துச் செலுத்த வேண்டும்.

தேர்வு நாள்: விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தேர்வுக்கான அனுமதி அட்டையை http://www.jeeadv.ac.in என்ற இணையத்தில் 10.5.2017 முதல் 21.5.2017 காலை 9.00 மணி வரை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 117 மையங்களில் 21.5.2017 அன்று காலை 9.00 முதல் மதியம் 12.00 மணி வரை தாள் 1 தேர்வும், பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தாள் 2 தேர்வும் நடைபெறும். தேர்வு முடிவுகள் 11.6.2017 அன்று வெளியிடப்படும்.   

கட்டடக்கலைத் திறனாய்வுத் தேர்வு: இதனைத் தொடர்ந்து கட்டடக்கலை படிப்புகளில் சேர்க்கை பெற விரும்புவோர் http://www.jeeadv.ac.in எனும் இணையத்தில் கட்டடக்கலைத் திறனாய்வுத் தேர்வுக்கு 11.6.2017 மற்றும் 12.6.2017 ஆகிய இரு நாட்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு 14.6.2017 அன்று நடைபெறும். இதற்கான முடிவுகள் 18.6.2017 அன்று வெளியிடப்படும்.

JEE (Main) 2017 குறித்து மேலும் விவரங்களை அறிய http://www.jeemain.nic.in/ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது jeemain@nic.in  எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம்.

JEE (Advanced) 2017 தேர்வு குறித்து அறிய http://www.jeeadv.ac.in எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 044 - 2257 8220 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.  

- தேனி மு. சுப்பிரமணி

மேலும்