சென்னை ஐ.ஐ.டி.யில் ஐந்தாண்டு எம்.ஏ. படிக்க HSEE-2017 நுழைவுத்தேர்வுக்குத் தயாராகுங்க!

12/22/2016 5:40:03 PM

சென்னை ஐ.ஐ.டி.யில் ஐந்தாண்டு எம்.ஏ. படிக்க HSEE-2017 நுழைவுத்தேர்வுக்குத் தயாராகுங்க!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

ஒரு திறமைமிக்க மனிதவளத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடன், அறிவியலாளர்களையும் பொறியாளர்களையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐ.ஐ.டி. என்று சுருக்கமாக சொல்லப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் தொடங்கப்பட்டன. முதலில் இந்தியாவில் கரக்பூர், மும்பை, கான்பூர், சென்னை, டெல்லி ஆகிய ஐந்து இடங்களில் நிறுவப்பட்டன.

தற்போது இந்தியாவின் பல இடங்களில் தொழில்நுட்பக் கழக கல்வி மையங்கள் இயங்குகின்றன. இவற்றில் சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (The Indian Institute of Technology, Madras) +2 முடித்த மாணவர்களுக்கு ஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகளாக வளர்ச்சிப் படிப்புகள் (M.A. Development Studies) மற்றும் ஆங்கிலப் படிப்புகள் (M.A. English Studies) எனும் இரு வகையான படிப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறது. இப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான நுழைவுத்தேர்வுக்கு (Humanities and Social Sciences Entrance Examinations  HSEE 2017) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி மற்றும் வயதுவரம்பு: இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் முதல் முயற்சியிலேயே (First Attempt) பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் 60% மதிப்பெண்களுடனும், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் 55% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். புள்ளிக்கணக்கில் (Grade) மதிப்பெண்கள் இருப்பின் மேற்காணும் மதிப்பெண்களுக்கு இணையானதாக இருக்க வேண்டும். கல்லூரி யில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்துக்கொண்டு இருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். மாணவர் சேர்க்கையின்போது மேற்காணும் கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது மற்றும் ஓ.பி.சி. மாணவர்கள் 1.10.1992 தேதிக்குப் பின்னரும், எஸ்.சி, எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் 1.10.1987 தேதிக்குப் பின்னரும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: இந்த நுழைவுத் தேர்வுக்கு http://hsee.iitm.ac.in/ எனும் இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.2,200ம், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.1,100ம் விண்ணப்பக் கட்டணமாக கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் இணைய வங்கிச்சேவை (Net Banking) வழிமுறையில் செலுத்தலாம். விண்ணப்பிக்கவும், விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும் கடைசி நாள்: 27.1.2017.  
 
நுழைவுத்தேர்வு: இப்படிப்புகளில் சேர நடத்தப்படும் HSEE-2017 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலையினை (Application Status) 17.2.2017 முதல் அறிந்துகொள்ள முடியும். அதன் பிறகு 14.3.2017 முதல் 15.4.2017 வரை நுழைவுத்தேர்வுக்கான அனுமதி அட்டையினை (Admit Card) தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அனுமதி அட்டை பெற்றவர்கள் அனைவரும் பெங்களூரு, போபால், சென்னை, கோயம்புத்தூர், கவுகாத்தி, ஐதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, திருவனந்தபுரம், வாரணாசி ஆகிய 12நகரங் களில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்வு மையங்களில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தில் 16.4.2017 அன்று நுழைவுத்தேர்வினை எழுத வேண்டும்.

மாணவர் சேர்க்கை: நுழைவுத்தேர்வு முடிவுகள் 9.5.2017 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும். இத்தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களைக் கொண்டு பொதுத் தரவரிசைப் பட்டியலும், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித் தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்படும்.

அதன் பிறகு, இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.நுழைவுத்தேர்வு குறித்த தகவல்கள், பாடத்திட்டங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை குறித்த மேலும் பல விவரங்களை அறிய விரும்புவோர் மேற்காணும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது “The Chairman, HSEE-2017, JEE Office, IIT Madras, Chennai-600036” எனும் முகவரிக்கு நேரில் சென்று அறியலாம். 044 22578220 எனும் தொலைபேசி எண்ணிலோ அல்லது hsee@iitm.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.

- உ.தாமரைச்செல்வி

X