தேசிய நோய் தடுப்பாற்றல் கல்வி நிறுவனத்தில் ஆய்வுப் படிப்பு!

1/6/2017 12:06:07 PM

தேசிய நோய் தடுப்பாற்றல் கல்வி நிறுவனத்தில் ஆய்வுப் படிப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

முதுநிலை அறிவியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லியிலுள்ள தேசியத் தடுப்பாற்றல் நிறுவனத்தில் (National Institute of Immunology) 2017 - 2018 ஆம் கல்வியாண்டுக்கான முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பில் (Ph.D) சேர்க்கைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

ஆய்வுத் திட்டப் பிரிவுகள்இப்படிப்பில் நோய்த்தொற்று மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் (Infection and Immunity), மரபியல், மூலக்கூறு மற்றும் கண்ணறை உயிரியல் (Genetics, Molecular and Cellular Biology), வேதியியல், அமைப்பியல் மற்றும் கணிப்பிய உயிரியல் (Chemical, Structural and Computational Biology), இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி (Reproduction and Development) எனும் நான்கு பிரிவுகளில் ஆய்வுத் திட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

கல்வித்தகுதி–்இந்த முனைவர் ஆய்வுப் பட்டப்படிப்பிற்கு உயிரியல், வேதியியல், கணிதம் இயற்பியல் போன்ற அறிவியல் படிப்பு களில் முதுநிலை அறிவியல் (M.Sc) பட்டப்படிப்பு அல்லது முதுநிலைத் தொழில்நுட்பம் (M.Tech), இளநிலை மருத்துவம் (M.B.B.S), முதுநிலைக் கால்நடை அறிவியல் (M.V.Sc), முதுநிலை மருந்தாளுமை (M.Pharm) அல்லது இதற்கு இணையான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

+2, இளநிலைப் பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு என்று அனைத்துப் படிப்புகளிலும் திரண்ட மதிப்பெண் (Aggregate Marks) குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு திரண்ட மதிப்பெண் என்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மேற்காணும் கல்வித்தகுதிக்கான இறுதித் தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

இரு நுழைவுத்தேர்வுகள் தேசியத் தடுப்பாற்றல் நிறுவனத்தின் முனைவர் (Ph.D) படிப்பிற்கு இந்நிறுனம் நடத்தும் 2017ஆம் ஆண்டுக்கான நுழைவுத்தேர்வு, மும்பையிலுள்ள டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம் (Tata Institute of Fundamental Research) நடத்தும் உயிரியல் மற்றும் பலதுறை வாழ்க்கை அறிவியல் பாடங்களுக்கான இணைப் பட்டதாரி நுழைவுத்தேர்வு-2017 எனும் இரு நுழைவுத்தேர்வுகளின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் இரண்டாவது இருக்கும் நுழைவுத்தேர்வு முன்பே நடத்தப்பட்டுவிட்டது. எனவே, தற்போதைய நிலையில் தேசியத் தடுப்பாற்றல் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பம்

இந்த நிறுவனத்தின் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.nii.res.in/phd2017/nii-phd2017.html எனும் இணையதளத்திற்குச் சென்று, இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். பொது, ஓ.பி.சி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.250ம்  விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.1.2017.

நுழைவுத்தேர்வு

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு புதுடெல்லி, ஐதராபாத், புனே, கொல்கத்தா மற்றும் கவுஹாத்தி ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும் 19.2.2017 அன்று நுழைவுத்தேர்வு நடத்தப்பெறும்.

மாணவர் சேர்க்கை

விண்ணப்பிப்பவர்கள் மேற்காணும் இரு நுழைவுத்தேர்வுகளில் ஏதாவதொரு தேர்வினை எழுதியிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் முதலில் குறைக்கப்பட்ட மாணவர் பட்டியல் 31.3.2017 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.

இப்பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு புதுடெல்லியிலுள்ள தேசிய நோய் தடுப்பாற்றல் கல்வி நிறுவனத்தில் ஜூன் 14 முதல் 16 வரை மூன்று நாட்கள் நேர்காணல் நடத்தப்படும். இந்த நேர்காணலுக்குப் பின்பு, மொத்தமுள்ள இடங்களில் எஸ்.சி. 15%, எஸ்.டி. 7.5%, ஓ.பி.சி. 27% மாற்றுத்திறனாளிகள் 3% இடங்கள் என்று இடஒதுக்கீடு நடைமுறைகளைப் பின்பற்றி முனைவர் பட்டப்படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

படிப்பு தொடக்கம்தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கைக்கு வருவதற்கான இரண்டாம் வகுப்பு ரயில்பயணக் கட்டணமும் வழங்கப்படும். இப்படிப்பில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு 10.7.2017 முதல் படிப்புகள் தொடங்கப்படும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றில் பெற்ற தகுதி மற்றும் மாணவர்கள் விருப்பத் தேர்வு ஆகியவற்றிற்கேற்ப ஆய்வுத் திட்டப் பிரிவுகளில் இடமளிக்கப்படும். இந்த ஆய்வுப் படிப்புகளில் சேர்க்கை பெறுபவர்களுக்கு மாதம் ரூ.25000 வரை உதவித்தொகை கிடைக்கும்.

இதுகுறித்து மேலும் கூடுதல் விவரங்களை அறிய, மேற்காணும் இணைய தளத்தைப் பார்வையிடலாம் அல்லது “Administrative Officer (Academic & Training), National Institute of Immunology, Aruna Asaf Ali Marg, New Delhi  110067” எனும் முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியிலோ தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம். இந்நிறுவனத்தின் 011 - 26717101, 26703662, 26703762 எனும் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறமுடியும்.

 - உ.தாமரைச்செல்வி

X