எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் பட்டயப்படிப்பு!

5/24/2017 12:39:15 PM

எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் பட்டயப்படிப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

புதுடெல்லியிலுள்ள அறிவியல் மற்றும் தொழிற்சாலைகளுக்கான ஆய்வுக் குழுவின் (Council of Scientific and Industrial Research, New Delhi) கீழ் செயல்படும் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (Central Scientific Instruments Organisation) சுவிட்சர்லாந்து நாட்டிலிருக்கும் சுவிஸ் தொழில்நுட்ப உதவிக்கான அமைப்புடன் (Swiss Foundation for Technical Assistance) இணைந்து 1963 ஆம் ஆண்டு இந்திய சுவிஸ் பயிற்சி மையத்தினை (Indo Swiss Training Center) சண்டிகரில் நிறுவியுள்ளது. இப்பயிற்சி மையத்தில் இடம்பெற்றிருக்கும் பட்டயப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்: இப்பயிற்சி மையத்தில் மூன்று ஆண்டுக் கால அளவிலான மின்னணுவியல் பொறியியல் பட்டயம் (Diploma in Electronics Engineering) 54 இடங்கள், இயந்திரப் பொறியியல் (கருவி மற்றும் வார்ப்புப் படிவம்) பட்டயம் (Diploma in Mechanical Engineering (Tool & Die)) 54 இடங்கள் என 108 இடங்களும், நான்கு ஆண்டுக் கால அளவிலான வார்ப்புப் படிவம் மற்றும் அச்சு உருவாக்கத்திற்கான மேம்பட்ட பட்டயம் (Advanced Diploma in Die & Mould Making) 16 இடங்கள், இயந்திர மின்னணுவியல் மற்றும் தொழிற்சாலை (Advanced Diploma in Mechotronics & Industrial Automation) 16 இடங்கள் என 32 இடங்களுமாக மொத்தம் 140 இடங்கள் இருக்கின்றன.

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு: இப்படிப்பிற்கு ஆண்-பெண் இரு பாலினத்தவரும் விண்ணப்பிக்க முடியும். பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களை எடுத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு தேர்வு எழுதி, முடிவுக்குக் காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். இப்படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 1.8.1998 அன்றோ அல்லது அதற்குப் பின்போ பிறந்தவர்களாக இருக்கவேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மூன்று ஆண்டு வயதுத் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.csio.res.in எனும் இணையதளத்திற்குச் சென்று அங்குள்ள தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து முழுமையாகப் படித்து விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு, ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.1200, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.600 என விண்ணப்பக் கட்டணத்தை எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் (SBI) Power Jyoti Account Number 33004547024 என்ற கணக்கு எண்ணில் செலுத்த வேண்டும். இதற்கான வங்கிச்சலானை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இணையம் வழியாக
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31.5.2017.

நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அச்சிட்டு எடுத்து, அதில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றினை ஒட்டி, அதில் பள்ளியின் தலைமையாசிரியர் / முதல்வர் அல்லது அரசுப் பதிவு பெற்ற அதிகாரியிடம் கையொப்பம் பெற்று, விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவைகளை இணைத்து “The Principal, Indo- Swiss Training Centre, CSIO, Sector-30C, Chandigarh-160 030” எனும் முகவரிக்கு 9.6.2017 தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு: விண்ணப்பித்தவர்கள் அனைவரும் நுழைவுத்தேர்வுக்கான அனுமதி அட்டையினை (Admit Card) மேற்காணும் இணையதளத்தில் 19.6.2017 முதல் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 9.7.2017 அன்று நுழைவுத்தேர்வு நடத்தப்பெறும். இந்த நுழைவுத்தேர்வின் முடிவுகள் 17.7.2017 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கை: இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 26.7.2017 மற்றும் 27.7.2017 ஆகிய இரு நாட்கள் நடைபெறும். கலந்தாய்வு முடிவுக்குப் பின்பு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 7.8.2017 முதல் வகுப்புகள் தொடங்கும்.

மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் மேற்காணும் இணையதளத்திற்குச் சென்று பார்வையிடலாம் அல்லது 0172 - 2657826, 2651745, 2651746 (Ext. 263, 602, 615, 419) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.

 - முத்துக்கமலம்

X