ஐந்து ஆண்டு கால BS-MS பட்டம் படிக்க IISER - 2017 நுழைவுத்தேர்வுக்கு தயாராகுங்க!

6/6/2017 1:02:52 PM

ஐந்து ஆண்டு கால BS-MS பட்டம் படிக்க IISER - 2017 நுழைவுத்தேர்வுக்கு தயாராகுங்க!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (Indian Institute of Science Education and Research) அளிக்கும் ஐந்தாண்டு கால அளவிலான BSMS எனும் இரட்டைப் பட்டப்படிப்பில் (Dual Degree Programme) 2017 ஆம் ஆண்டு சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

கல்வி நிறுவனங்கள்: இந்தியாவில் பெர்காம்பூர், போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே, திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஏழு இடங்களில் அமைந்திருக்கும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் +2 முடித்தவர்களுக்கு ஐந்தாண்டு கால அளவிலான BS-MS எனும் இரட்டைப் பட்டப்படிப்பு இடம்பெற்றிருக்கிறது.

சேர்க்கைக்கான தகுதி: இப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்குக் கீழ்க்காணும் மூன்று சேர்க்கைத் தகுதிகளில் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY) எனும் உதவித்தொகை அளிக்கும் திட்டத்தின் கீழ் SA (2015-16) / SX (2016-17) / SB (2016-17) தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.

(SA  11 ஆம் வகுப்பில் அறிவியல் பாடமெடுத்துப் படிப்பவர்களும், SX 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடமெடுத்துப் படிப்பவர்களும், SB அறிவியல் பாடங்களிலான பட்டப்படிப்பில் முதல் வருடம் படிப்பவர்களும் இந்த KVPY உதவித்தொகைக்கான தேர்வினை எழுதித் தகுதி பெற முடியும்) JEE (Advanced) - 2017 தேர்வில் பொதுத் தகுதிப் பட்டியலில் (Common Merit List) 10,000க்குள் Rank இருக்கவேண்டும்.

மத்திய அல்லது மாநிலப் பாடத்திட்டத்தில் (State and  Central Boards (SCB)) 2016 அல்லது 2017 ஆம் ஆண்டில் அறிவியல் பாடத்திட்டத்தில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் மாநிலங்கள் வாரியாக நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு 95.2% மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் மாற்றுத்திறனாளி (PD) மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் மதிப்பெண் சதவிகிதத்தில் 5% வரை தளர்வு அளிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் மற்றும் காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் போன்றோர் +2 தேர்வில் 55% மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடைந்திருந்தால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.iiseradmission.in எனும் இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேற்காணும் சேர்க்கைத் தகுதியில் முதல் தகுதியைப் (KVPY) பெற்றவர்கள் 12.6.2017 ஆம் தேதிக்குள்ளும், இரண்டாம் தகுதியைப் (JEE (Advanced)) பெற்றவர்கள் 10.7.2017 ஆம் தேதிக்குள்ளும், மூன்றாம் தகுதியைப் (SCB) பெற்றவர்கள் 18.6.2017 ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்காணும் மூன்று தகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட தகுதிளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு தகுதிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க முடியும் விண்ணப்பிப்பவர்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் ரூ.1000, மற்ற பிரிவினர் ரூ.2000 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

IISER திறனாய்வுத் தேர்வு: மேற்காணும் சேர்க்கைத் தகுதிகளில் மூன்றாவது தகுதியைக்கொண்டு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் IISER நடத்தும் IISER Aptitude Test 2017 திறனாய்வுத் தேர்வில்  கலந்துகொண்டு, அதற்கான தகுதியையும் பெற வேண்டும்.

இந்தியா முழுவதும் குறிப்பிடத்தக்க நகரங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் 25.6.2017 அன்று இந்தத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பெறும். இத்தேர்வுக்கான முடிவுகள் 4.7.2017 அன்று மேற்காணும் இணையதளத்தில் வெளியிடப்படும்.மாணவர் சேர்க்கை உள்ளிட்ட கூடுதல் தகவல்களை அறிய மேற்காணும் இணையதளத்தைப் பார்க்கலாம்.

- உ.தாமரைச்செல்வி

X