NCERT இன் ஆசிரியர் பயிற்சிப் பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாரா?

6/15/2017 9:27:39 AM

NCERT இன் ஆசிரியர் பயிற்சிப் பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாரா?

1961 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட NCERT (நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்டு டிரெயினிங்) என்ற அமைப்பானது மத்திய மற்றும் மாநில அளவில் பள்ளிக் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுப்பவர்களுக்குப் பயிற்சி அளிப்பதும், ஆசிரியப் பணியில் உள்ளவர்களுக்குத் தற்கால நடைமுறைகளுக்கேற்ற நவீன யுக்திகளையும் கற்றுத் தருகிறது.

இவ்வமைப்பின் மண்டலக் கிளை, ரீஜினல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் எஜுகேஷன் கர்நாடக மாநிலத்தில் மைசூருவில் உள்ள இந்நிறுவனம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவுகளுக்கான அதாவது தென்னிந்திய மாநிலங்களுக்கான ஒரு நிறுவனம். இதில் தரப்படும் ஆசிரியப் பயிற்சித் திட்டங்கள் யூனிவர்சிட்டி ஆஃப் மைசூரு பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை கட்டாயமாகத் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம், புதுச்சேரி, லட்சத்தீவுகளில் உள்ளவர்களுக்காக மட்டுமே. இதில் உள்ள B.Sc., B.Ed. பட்டப்படிப்பிற்கான இடங்கள் மொத்தம் 80. இயற்பியல் வேதியியல் பிரிவுகளுக்கு 40 இடங்களும், (பயாலஜி) உயிரியல் பிரிவிற்கு 40 இடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

தகுதி: பிளஸ் டூ முடித்த மாணவர்கள் (2015-2016) ஆண்டு முடித்தவர்களும், தற்போது (2017) தேர்வு எழுதியவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், கணிதம் (PC M) அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் (PC B) அல்லது வேதியியல், உயிரியல், உயிர்வேதியியல் படித்திருக்க வேண்டும். கணிதத்திற்கு மாற்றாகப் புள்ளியியல் படித்திருக்கலாம்.

பிளஸ் டூ அல்லது அதற்குச் சமமான கல்வியல் பாடங்களில் 50% தேர்ச்சி தேவை. SC/ST/PH பிரிவினர் 45% எடுத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசாங்க விதிகளின்படி SC 15%, ST 75%, OBC 27%, PH 3% பிரிவினருக்கு முன்னுரிமை தரப்படும். மைசூருவில் தங்கிப் படிக்க ஹாஸ்டல் வசதி உண்டு. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொதுப்பிரிவினர் மற்றும் OBC-க்கு விண்ணப்பத் தொகையாக ரூ. 800 மற்றும் SC/ST/PH பிரிவினருக்கு ரூ. 400-ம் செலுத்த வேண்டும். www.ncert-cee.kar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

நுழைவுத்தேர்வுகள்
குரூப் A - B.Sc.B.Ed./B.A.B.Ed./M.Sc.Ed. (மைசூரு)
குரூப் B - B.Ed., B.Ed-M.Ed. (ஒருங்கிணைந்தது)
குரூப் C - M.Ed. பிரிவுகளில் நடத்தப்படும்.

வினாத்தாள்கள் குரூப்-A பிரிவினருக்கும் பிளஸ்டூவில் அவர்கள் படித்த பாடங்களிலிருந்தும், குரூப்-B பிரிவினருக்கும் அவர்கள் பயின்ற பட்டப்படிப்புப் பிரிவிலிருந்தும், குரூப்-C பிரிவினருக்கு அவர்கள் பயின்ற B.Ed. பகுதிகளிலிருந்தும் வினாக்கள் அமையும்.

எல்லாப் பிரிவினருக்கும்
1. ஆங்கிலப் புலமை (Language proficiency)
2. கல்வி கற்பித்தல் நுணுக்கங்கள் (Teaching aptitude)
3. ரீசனிங் எபிலிட்டி (Reasoning ability)

இவைகளில் வினாக்கள் கேட்கப்படும்.

ஆங்கிலம் - 20 மதிப்பெண்களும்
கற்பித்தல் - 30 கேள்விகளும்
ரீசனிங் - 30 கேள்விகளும் என மொத்தம் இரண்டு மணிநேரத் தேர்வில 80 கேள்விகள் கேட்கப்படும். இந்த நுழைவுத்தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் வினாக்கள் கேட்கப்படும். சரியான விடைகளுக்கு 2 மதிப்பெண்களும், தவறான விடைகளுக்கு -0.5 மதிப்பெண்களும் கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜூலை 2017.

- வசந்தி

மேலும்