MBA படிக்க CAT EXAM 2017 நுழைவுத்தேர்வுக்கு தயாராகுங்க!

9/6/2017 1:09:41 PM

MBA படிக்க CAT EXAM 2017 நுழைவுத்தேர்வுக்கு தயாராகுங்க!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்தியாவில் செயல்பட்டு வரும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சில மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்பு மற்றும் மேலாண்மை ஆய்வாளர் படிப்புகள் போன்றவற்றில் சேர்க்கை பெறுவதற்கான பொதுச் சேர்க்கைத் தேர்வுக்கு (Common Admission Test  CAT 2017) விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்பு: இந்தியாவில் அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, ெகல்கத்தா, இந்தூர், ஜம்மு, காசிப்பூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோதக், சம்பல்பூர், சில்லாங், சிர்மவுர், திருச்சிராப்பள்ளி, உதய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய 20 இடங்களில் அமைந்திருக்கும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (Indian Institutes of Management (IIMs)) இரண்டு வருட கால அளவிலான முதுநிலைப் பட்டப்படிப்புகள் (Post Graduate Programmes in Management) இடம்பெற்றிருக்கின்றன.

மேலாண்மை ஆய்வாளர் படிப்பு: அகமதாபாத், பெங்களூரு, கொல்கத்தா, இந்தூர், காசிப்பூர், கோழிக்கோடு, லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ரோதக், சில்லாங், திருச்சிராப்பள்ளி, உதய்ப்பூர் ஆகிய 13 இடங்களிலிருக்கும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் பி.எச்டி படிப்பிற்கு இணையான மேலாண்மை ஆய்வாளர் படிப்புகளும் (Fellow Programmes in Management - FPM) காசிப்பூர் மற்றும் ராய்ப்பூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் EFPM எனும் ஆய்வாளர் படிப்பும் இடம் பெற்றிருக்கின்றன. பிற கல்வி நிறுவனங்கள்: மேற்காணும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் தவிர்த்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர் சேர்க்கைக்கு இந்தப் பொதுச்சேர்க்கைத் தேர்வை அனுமதித்துத் தங்களையும் இணைத்துக்கொண்டிருக்கின்றன.

கல்வித்தகுதி: இந்தத் தேர்வுக்கு (Common Admission Test  CAT) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 50% மதிப்பெண்களுக்குக் குறைவின்றி, ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 45% மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. பட்டப்படிப்பிற்கான மதிப்பெண்கள் புள்ளிக்கணக்கில் வழங்கப்பட்டிருந்தால் மேற்காணும் சதவிகிதத்துக்கு இணையான புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.   

விண்ணப்பிக்கும் முறை: இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://iimcat.ac.in என்ற இணையதளத்திற்குச் சென்று 9.8.2017 முதல் 20.9.2017 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.1800, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.900 என விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

தேர்வு மையங்கள்: இந்த நுழைவுத்தேர்வுக்குத் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய 7 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 140 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் தேர்வு எழுதுவதற்கான மையங்களாக 4 மையங்கள் வரை குறிப்பிட வேண்டும். இந்த மையங்களில் ஏதாவதொரு மையம் தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மையங்கள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில் அருகிலுள்ள வேறொரு மையம் ஒதுக்கீடு செய்யப்படும்.

அனுமதிச் சீட்டு: விண்ணப்பித்த மாணவர்கள் இந்தத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை (Admit Card) 18.10.2017 முதல் 26.11.2017 வரை மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தப் பொது நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் தேர்வு மையங்களில் 26.11.2017 அன்று நடத்தப்படும். தேர்வு முடிவுகள்: இத்தேர்வின் முடிவுகள் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படும். இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இந்தத் தேர்வை அங்கீகரிக்கும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் 31.12.2018 வரை சேர்க்கை பெறுவதற்குத் தகுதியுடையதாக இருக்கும்.

மாணவர் சேர்க்கை: இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் (Indian Institutes of Management (IIMs)) முந்தைய கல்வியில் பெற்ற மதிப்பெண்கள், பொதுச் சேர்க்கைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், பணி அனுபவம் போன்ற சில அளவீடுகளை அடிப்படையாகக்கொண்டு, எஸ்.சி. பிரிவினர் 15%, எஸ்.டி. பிரிவினர் 7.5% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27%, மாற்றுத்திறனாளிகள் 3% என்றும், மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவினர் எனும் இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ளும். மேலும் பல விவரங்களை அறிய  இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது இந்நிறுவனத்தின் Help Desk Number 18002663549 எனும் எண்ணில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறலாம்.

- தேனி மு. சுப்பிரமணி

மேலும்