ஐஐஎம்மில் முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கேட் தேர்வுக்குத் தயாரா?

9/14/2017 5:07:54 PM

ஐஐஎம்மில் முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கேட் தேர்வுக்குத் தயாரா?

இந்தியாவில் செயல்பட்டுவரும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சில மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்பு மற்றும் மேலாண்மை ஆய்வாளர் படிப்புகள் போன்றவற்றில் சேர்க்கை பெறுவதற்கான Common Admission Test - CAT 2017 க்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

முதுநிலை மேலாண்மைப் பட்டப் படிப்பு

இந்தியாவில் 20 இடங்களில் அமைந்திருக்கும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (Indian Institutes of Management (IIMs)) இரண்டு ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்புகள் (Post Graduate Programmes in Management) இடம் பெற்றுள்ளன.

மேலாண்மை ஆய்வாளர் படிப்பு

அகமதாபாத், பெங்களூரு, கல்கத்தா, இந்தூர், காசிப்பூர், கோழிக்கோடு, லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ரோதக், சில்லாங், திருச்சிராப்பள்ளி, உதய்ப்பூர் ஆகிய 13 இடங்களிலிருக்கும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் பி.எச்டி படிப்பிற்கு இணையான மேலாண்மை ஆய்வாளர் படிப்புகளும் (Fellow Programmes in Management - FPM) காசிப்பூர் மற்றும் ராய்ப்பூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் EFPM எனும் ஆய்வாளர் படிப்பும் இடம்பெற்றிருக்கின்றன.

பிற கல்வி நிறுவனங்கள்

இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் தவிர்த்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர் சேர்க்கைக்கு இந்தப் பொதுச் சேர்க்கைத் தேர்வை அனுமதித்து தங்களையும் இணைத்துக் கொண்டிருக்கின்றன.

கல்வித்தகுதி

50% மதிப்பெண்களோடு இளநிலைப் பட்டம் தேவை. எஸ்சி; எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 45% மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவம்

https://iimcat.ac.in/ எனும் இணையதளத்திற்குச் சென்று 9-8-2017 முதல் 20-9-2017 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.1800/-, எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ. 900/- என்ற வீதம் விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டும்.  

தேர்வு மையங்கள்

இந்தியாவில் 140 தேர்வு மையங்களில் தங்கள் விண்ணப்பத்தில் தேர்வு எழுதுவதற்கான மையங்களாக 4 மையங்களைக் குறிப்பிடலாம். இந்த மையங்களில் ஏதாவதொரு மையம் தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கீடு செய்யப்படும்.

அனுமதிச் சீட்டு

விண்ணப்பித்த மாணவர்கள் இந்தத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை 18-10-2017 முதல் 26-11-2017 வரை மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கலாம். இந்தப் பொது நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் தேர்வு மையங்களில் 26-11-2017 அன்று நடைபெறும்.

தேர்வு முடிவுகள்

இத்தேர்வின் முடிவுகள் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 வது வாரத்தில் வெளியிடப்படும். இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இந்தத் தேர்வை அங்கீகரிக்கும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் 31-12-2017 வரை சேர்க்கை பெறுவதற்குத் தகுதியுடையது.  

மாணவர் சேர்க்கை

இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் முந்தைய கல்வியில் பெற்ற மதிப்பெண்கள், பொதுச்சேர்க்கைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், பணி அனுபவம் போன்ற சில அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டு, எஸ்சி பிரிவினர் 15%, எஸ்டி பிரிவினர் 7.5% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27%, மாற்றுத் திறனாளிகள் 3% என்றும், மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவினர் எனும் இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிப்படி மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ளும். பொதுச் சேர்க்கைத் தேர்வு (Common Admission Test - CAT) குறித்த விவரங்களை அறிய மேற்காணும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது இந்நிறுவனத்தின் 18002663549 எனும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

கணேஷ் அரவிந்த்

மேலும்