ஐஐடியில் முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை படிப்பதற்கான JAM 2018 தேர்வுக்கு ரெடியா?

9/25/2017 11:15:53 AM

ஐஐடியில் முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை படிப்பதற்கான JAM 2018 தேர்வுக்கு ரெடியா?

இந்தியா முழுவதுமுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் முதுநிலை அறிவியல் (M.Sc.), ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டப்படிப்பு (M.Sc, Ph.d), முதுநிலை அறிவியல் மற்றும் முதுநிலைத் தொழில்நுட்பம் கொண்ட இரட்டைப் பட்டப்படிப்புகள் (M.Sc.-M.Tech) மற்றும் மேல் இளம்நிலை பட்டப் படிப்புகளில் (Post Bachelour degrees) சேர்க்கை பெறுவதற்கான முதுநிலை அறிவியல் இணைச் சேர்க்கைத் தேர்வு - 2018க்கு (Joint Admission Test for M.Sc. (JAM -2018) விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

படிப்புகள்
இந்திய அறிவியல் கழகம் மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் கீழ்க்காணும் படிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science, Bangalore) உயிரிய அறிவியல் (Biological Science), வேதியியல் அறிவியல் (Chemical Science), கணித அறிவியல் (Mathematical Science) மற்றும் இயற்பியல் அறிவியல் (Physical Science) பாடங்களில் ஒருங்கிணைந்த முனைவர் பட்டப்படிப்பு (Integrated Ph.D) மும்பையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology, Bombay) ஆற்றல் (Energy) பாடத்தில் முதுநிலை மற்றும் முனைவர் இரட்டைப் பட்டப்படிப்பு.

புவனேஸ்வரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் (Chemistry), நிலவியல் (Geology), கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics) மற்றும் வளிமண்டலம் மற்றும் பெருங்கடல் அறிவியல் (Atmosphere and Ocean Sciences) பிரிவுகளிலான இணை முதுநிலை அறிவியல் ஆய்வுப் படிப்புகள் (Joint M.Sc-Ph.D).

மும்பையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology, Bombay) இரண்டு ஆண்டுகள் கால அளவிலான பயன்பாட்டு நிலவியல் (Applied Geology), பயன்பாட்டுப் புவி இயற்பியல் (Applied Geophysics), பயன்பாட்டுப் புள்ளியியல் மற்றும் தகவலியல் (Applied Statistics and Informatics), உயிர்த்தொழில்நுட்பம் (Biotechnology), வேதியியல் (Chemistry), கணிதம் (Mathematics) இயற்பியல் (Physics) பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் (M.Sc), சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் (Environmental Science and Engineering) மற்றும் செயல் உகமஆய்வியல் (Operations Research) பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டப்படிப்பு (M.Sc-Ph.D) கொண்ட இரட்டைப் பட்டப்படிப்புகள்.

டெல்லி, காந்திநகர், ஜோத்பூர், சென்னை, பாட்னா மற்றும் ரோபாரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் இரண்டு ஆண்டுகள் கால அளவிலான வேதியியல் (Chemistry), கணிதம் (Mathematics) மற்றும் இயற்பியல் (Physics) பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் (M.Sc).

கவுகாத்தி மற்றும் ஐதராபாத்திலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் இரண்டு ஆண்டுகள் கால அளவிலான வேதியியல் (Chemistry), கணிதம் மற்றும் கணிப்பீடு (Mathematics and Computing) மற்றும் இயற்பியல் (Physics) பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் (M.Sc).

இந்தூரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் கால அளவிலான வேதியியல் (Chemistry), கணிதம் (Mathematics) மற்றும் இயற்பியல் (Physics), வானியல் (Astronomy) மற்றும் உயிர்த்தொழில்நுட்பம் (Biotechnology) பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் (M.Sc) சில விதிமுறைகளுக்குட்பட்டு முனைவர் பட்டப்படிப்புக்கு (Ph.D) மாற்றிக் கொள்ளக் கூடியதான இரட்டைப் பட்டப்படிப்பு.

கான்பூரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் கால அளவிலான வேதியியல் (Chemistry), கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics) மற்றும் புள்ளியியல் (Statistics) பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் (M.Sc), இயற்பியல் பிரிவிலான முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டப்படிப்பு (M.Sc-Ph.D) கொண்ட இரட்டைப் பட்டப்படிப்பு.

காரக்பூரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் (Chemistry), நிலவியல் (Geology), புவி இயற்பியல் (Geophysics), கணிதம் (Mathematics) மற்றும் இயற்பியல் (Physics) பிரிவுகளிலான இணை முதுநிலை அறிவியல் ஆய்வுப் படிப்புகள் (Joint M.Sc-Ph.D).
ரூர்கியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டு வருட கால அளவிலான பயன்பாட்டு நிலவியல் (Applied Geology), உயிர்த்தொழில்நுட்பம் (Biotechnology), வேதியியல் (Chemistry), பொருளாதாரம் (Economics), கணிதம் (Mathematics) மற்றும் இயற்பியல் (Physics) பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் (M.Sc).

கல்வித்தகுதி
மேற்காணும் ஒவ்வொரு பட்டப்படிப்புக்குமான குறைந்தபட்சக் கல்வித்தகுதி குறித்த விவரங்கள் தகவல் குறிப்பேட்டில் தனித்தனியாக இடம் பெற்றிருக்கின்றன. இருப்பினும், இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் நிலையில் இளநிலைப் பட்டப்படிப்பில் மொழியியல் மற்றும் துணைப்பாடங்கள் உட்பட அனைத்துப் பாடங்களிலும் பொது மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் 55% மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் 50% மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். மாணவர் சேர்க்கைக்குப் பின்பு 30-9-2018 அன்று உரிய தகுதிச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இணைச் சேர்க்கைத் தேர்வு
மேற்காணும் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு நடத்தப்படும் JAM 2018  தேர்வு இரு பிரிவுகளாக இடம் பெற்றிருக்கின்றன. முதல் பிரிவில் 1. உயிர்த் தொழில்நுட்பம் (Biotechnology), 2. வேதியியல் (Chemistry), 3. நிலவியல் (Geology), 4. கணிதப் புள்ளியியல் (Mathematical Statistics) பாடங்களும், இரண்டாம் பிரிவில் 5. உயிரியல் அறிவியல் (Biological Sciences), 6. கணிதம் (Mathematics), 7. இயற்பியல் (Physics) எனும் ஏழு பாடப்பிரிவுகளில் நடத்தப்படுகிறது. இதில் எழுதவிருக்கும் பாடப்பிரிவு (தாள்) குறித்து விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய கல்வித்தகுதிக்கேற்ப இரு பாடப்பிரிவுகளில் தேர்வு எழுதலாம்.    
 
விண்ணப்பம்
http://jam.iitb.ac.in/ எனும் இணையதளத்தில் கிடைக்கும் தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து, அதனை முழுமையாகப் படித்துத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஒரு பாடப்பிரிவுக்கு (தாளுக்கு) பொது மற்றும் இதர பிற்பட்ட வகுப்புப் பிரிவினர் ரூ 1500, எஸ்சி. எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ 750 என்றும், இரு பாடப்பிரிவுகளுக்கு (தாள்களுக்கு) பொது மற்றும் இதர பிற்பட்ட வகுப்புப் பிரிவினர் ரூ 2100, எஸ்சி. எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ 1050 என்றும் விண்ணப்பக் கட்டணத்தை இணைய வழியில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 10-10-2017.

அனுமதிச் சீட்டு இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் மேற்காணும் இணையதளத்திலிருந்து 9-1-2018 முதல் தேர்வு நாள் வரை தேர்வுக்கான அனுமதி அட்டையினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அனுமதி அட்டை தபால் வழியாகவோ, வேறு வழிகளிலோ அனுப்பி வைக்கப்படாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேர்வு நாள்
Online Computer Based Exam முறையில் நடத்தப்பெறும் இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் 65 சென்டர்கள் உள்ளன. அனைத்துத் தேர்வு மையங்களிலும் 11-2-2018 அன்று காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரையில் உயிர்த் தொழில்நுட்பம் (Biotechnology), வேதியியல் (Chemistry), நிலவியல் (Geology) மற்றும் கணிதப் புள்ளியியல் (Mathematical Statistics) பாடப்பிரிவுகளுக்கும், மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரை உயிரியல் அறிவியல் (Biological Sciences), கணிதம் (Mathematics) மற்றும் இயற்பியல் (Physics) பாடப்பிரிவுகளுக்கும் தேர்வுகள் நடைபெறும்.

தேர்வு முடிவுகள்
மேற்காணும் ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்குமான தேர்வு முடிவுகள் மேற்காணும் இணையதளத்தில் 20-3-2018 அன்று வெளியிடப்படும். தகுதியுடைய மாணவர்கள், தங்களுக்கான அகில இந்திய அளவிலான தரம், மதிப்பெண்கள் கொண்ட மதிப்பெண் அட்டையினை மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கலாம்.

மாணவர் சேர்க்கை
இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science) மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் (Indian Institute of Technology) இடம் பெற்றிருக்கும் மேற்படிப்புகளில் சேர்க்கைக்கு மேற்காணும் இணையதளம் வழியாக 3-4-2018 முதல் 17-4-2018 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான பரிசீலனைக் கட்டணமாக ரூ 600/- ஐ 19-4-2018 ஆம் தேதிக்குள் இணையவழியில் செலுத்தலாம்.

இந்தியத் தொழில்நுட்பக் கழகம் வாரியாக, மாணவர் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் மாணவர்கள் பட்டியல் இணையதளத்தில் 22-5-2018 அன்று வெளியிடப்படும். இப்பட்டியலில் இடம் பெற்றவர்கள் தொடர்புடைய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ 10000/- எஸ்சி. எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ரூ 5000/- முன்பணமாகச் செலுத்தி சேர்க்கையை உறுதிப்படுத்திட வேண்டும்.

இதில் சேர்க்கை பெறாமல் காலியாகும் இடங்களுக்கு இரண்டாவது மாணவர்கள் பட்டியல் இணையதளத்தில் 12-6-2018 அன்று வெளியிடப்படும். இப்பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள் தங்கள் சேர்க்கையை உறுதிப்படுத்த மேற்காணும் முன்பணத்தைச் செலுத்திட வேண்டும். இதிலும் காலியிடங்கள் ஏற்படும் நிலையில், அதற்கான மூன்றாவது மாணவர்கள் பட்டியல் இணையதளத்தில் 29-6-2018 அன்று வெளியிடப்படும்.

மூன்றாவது பட்டியலே இறுதி. கூடுதல் தகவல்களுக்கு, தமிழ்நாட்டிற்கான மண்டல அலுவலகமான சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழக அலுவலகத்தின்  044 - 22578200, 22578204 எனும் தொலைபேசி எண்களிலோ அல்லது jam@iitm.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

- உ.தாமரைச்செல்வி

X