அகில இந்திய தொழிற்தேர்வு! தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

11/20/2017 12:29:39 PM

அகில இந்திய தொழிற்தேர்வு! தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அகில இந்திய தொழிற்தேர்வு தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCVT)  நடத்தப்பட்டு வருகிறது. மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் முதனிலைத் தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்படும். 2018ம் ஆண்டுக்கான அகில இந்தியத் தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 23 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவிற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி மற்றும் அரசுத் தொழில் நிறுவனத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றுள்ள முறையான பணியாளர்கள், அரசுப் பதிவு பெற்ற தனியார் தொழில் நிறுவனங்களில் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் நபர்கள் தனித்தேர்வராக தேர்வெழுத தகுதியுடையவராவர்.

விண்ணப்பதாரர் முழுநேரப் பணியாளராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மாநில தொழிற்பயிற்சித் திட்டத்தின் கீழ் (S.C.V.T) பயிற்சி பெற்று (அதே பயிற்சிக் காலம் மற்றும் கல்வித்தகுதி) சான்றிதழ் வைத்திருப்பவர்கள் தனித்தேர்வராக தேர்வெழுத அதே தொழிற்பிரிவில் விண்ணப்பிக்கலாம். SCVT பயிற்சி திட்டத்தில் பருவமுறைப்படி பயிற்சி பெற்று வரும் பயிற்சியாளர்களும் தனித்தேர்வாளர்களாக தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

தகுதியுள்ள நபர்களுக்கு முதனிலைத் தேர்வு 13.12.2017 மற்றும் 14.12.2017 ஆகிய தேதிகளில், கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஜனவரி / பிப்ரவரி 2018ல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற்தேர்வில் முதல் பருவமுறைத் தேர்வில் தனித்தேர்வராக கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து தொழிற்பிரிவுக்கு ஏற்ப அனைத்து பருவ முறை தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு N.C.V.T., புதுடெல்லி மூலம் தேசிய தொழிற்சான்றிதழ் (National Trade Certificate) வழங்கப்படும்.

தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், தொழிற்தேர்விற்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விவரங்கள் அடங்கிய விளக்கக் குறிப்பேடு (Prospectus) ஆகியவைகளை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் முதல் ரூ.50 ரொக்கமாகச் செலுத்தி பெற்றுக்
கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 22.11.2017க்குள் மேற்கண்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இதுதொடர்பாக பிற விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

- தோ.திருத்துவராஜ்

மேலும்

X