ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வுகள்!

12/4/2017 2:28:53 PM

ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வுகள்!

ஒரு கண்ணோட்டம்

“படித்த படிப்பிற்கு ஏற்ற சரியான வேலை கிடைக்கவில்லையே?”  என்பது சில பட்டதாரிகளின் வேதனைக் குரலாக மாறிவிட்டது. இந்த நிலையைத் தவிர்க்க, படிக்கின்ற காலத்திலேயே ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் நடத்தும் தேர்வுகள் பற்றிய தெளிவான சிந்தனையை வளர்த்துக்கொண்டு, தேர்வுக்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டால் மதிப்புமிக்க மத்திய அரசின் பணியில் சேர்ந்து சிறப்புப் பெறலாம்.    

பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கும் மத்திய அரசின் அமைப்பு “ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன்” (Staff Selection Commission) ஆகும். இதன் தலைமை அலுவலகம் புதுடெல்லியில் இயங்குகிறது.  மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தரம்வாய்ந்த, தகுதியான நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஏற்ற பணிகளை வழங்குவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இதனை “எஸ்.எஸ்.சி.” (SSC) என்று சுருக்கமாக அழைப்பார்கள்.

இந்தியா முழுவதும் 7 மண்டல அலுவலகங்களைக்கொண்டு எஸ்.எஸ்.சி. அமைப்பு இயங்குகிறது. அலகாபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா, கவுஹாத்தி, சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. இவை தவிர, ராய்ப்பூர், சண்டிகார் ஆகிய இடங்களில் துணை மண்டல அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மண்டல அலுவலகமும், மண்டல இயக்குநர் தலைமையில் இயங்குகின்றன. ஆனால், துணை மண்டல அலுவலகம் துணை இயக்குநர் தலைமையில் இயங்குகிறது. “எஸ்.எஸ்.சி.” என்னும் அமைப்பு நடத்தும் சில முக்கியத் தேர்வுகள் விவரம் வருமாறு:

1. கம்பைண்டு கிராஜுவேட் லெவல் எக்ஸாமினேஷன் (CGLE)
2. ஸ்டெனோகிராபர் (Grade C / Grade D)
3. கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் எக்ஸாமினேஷன் (10+2 Level) Examination) (CHSL)
4. மல்டி-டாஸ்க்கிங் ஸ்டாஃப் எக்ஸாமினேஷன் (டெக்னிக்கல் அண்ட் நான்-டெக்னிக்கல்)
5. ஜூனியர் எஞ்சினியர் எக்ஸாமினேஷன் (Junior Engineer Examination)

இந்தத் தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள், இந்தத் தேர்வின் ஒவ்வொரு நிலைகளுக்கும் வழங்கப்படும் மதிப்பெண்கள், தேர்வுக்கான பாடத்திட்டங்கள், தேர்வுக்கான தயாரிப்பு முறைகள் பற்றிய விரிவான விளக்கங்களை உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் www.ssc.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஏனென்றால் ஒவ்வொரு தேர்வுக்கும் கல்வித்தகுதி, வயதுவரம்பு, பாடத்திட்டம், கல்விக்கட்டணம், தேர்வுமுறை போன்றவை மாறுபட்டவையாக மிக விரிவாக இருக்கும்.

கம்பைண்டு கிராஜுவேட் லெவல் எக்ஸாமினேஷன் (CGLE)
பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்காக நடத்தப்படுகின்ற தேர்வு “கம்பைண்டு கிராஜுவேட் லெவல் எக்ஸாமினேஷன்” (Combined Graduate Level Examination) ஆகும்.

கல்வித்தகுதி: பொதுவாக, அரசு அங்கீகரம் பெற்ற பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் (Degree) பெற்றவர்கள் இந்தத் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். ஆனால், அசிஸ்டென்ட் ஆடிட் ஆபீஸர் (Assistant Audit Officer), அசிஸ்டென்ட் அக்கவுன்ட்ஸ் ஆபீஸர் (Assistant Accounts Officer) ஆகிய பதவிகளில் சேர விரும்புபவர்கள், பல்கலைக்கழகப் பட்டத்தோடு, இதர தகுதிகளாக சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்ட் (Chartered Accountant) அல்லது காஸ்ட் அண்டு மேனேஜ்மென்ட் அக்கவுன்ட்டன்ட் (Cost and Management Accountant) அல்லது கம்பெனி செகரட்டரி (Company Secretary) ஆகிய ஏதேனும் ஒரு படிப்பில் வெற்றி பெற்றிருந்தால் விரும்பத்தக்கதாகும்.
இவைதவிர, வணிகவியல் (Commerce), வணிக நிர்வாகம் (Business Administration), வணிகப் பொருளியல் (Business Economics) போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் இந்தப் பதவிக்கான தேர்வில் முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு முறை: இந்தத் தேர்வு ஆண்டுதோறும் 4 நிலைகளில் நடத்தப்படுகிறது. அவை -

(1) கம்பைண்டு கிராஜுவேட் லெவல் எக்ஸாம் (Combined Graduate Level Examination) - (நிலை-1) (Tier  1)
(2) கம்பைண்டு கிராஜுவேட் லெவல் எக்ஸாம் (Combined Graduate Level Examination) - (நிலை-2) (Tier  2)
(3) விரிவான விளக்க விடைத் தேர்வு (Descriptive) - (நிலை-3) (Tier  3)
(4) திறன் தேர்வு (Skill Test) - (நிலை-4) (Tier  4 --ஆகியவை ஆகும்.
    
இந்த நான்கு நிலைத் தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

ஸ்டெனோகிராபர் (Grade C / Grade D)
மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களுக்குத் தேவைப்படும் குரூப் சி, மற்றும் குரூப் டி ஊழியர்களைத் தேர்வு செய்கின்றது. அந்த வகையில் சுருக்கெழுத்தர் கிரேடு-சி (குரூப்-பி பதவி), சுருக்கெழுத்தர் கிரேடு-டி (குரூப்- சி பதவி) உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு அகில இந்திய அளவில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
 
கல்வித்தகுதி: சுருக்கெழுத்தர் (ஸ்டெனோகிராபர்) தேர்வுக்கு +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சுருக்கெழுத்து தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: முதலில் எழுத்துத் தேர்வும் அதில் வெற்றிபெறுவோருக்குச் சுருக்கெழுத்துத் தேர்வும் (Skill Test) நடத்தப்படும். ஆன்லைன் வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பொது அறிவு, ரீசனிங், பொது ஆங்கிலம் ஆகிய 3 பகுதிகளிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். தவறான பதிலுக்கு மைனஸ் மதிப்பெண் உண்டு. 4 கேள்விகளுக்குத் தவறாக விடையளித்திருந்தால் ஒரு மதிப்பெண் மைனஸ் செய்யப்படும்.

ஜூனியர் எஞ்சினியர் எக்ஸாமினேஷன்(Junior Engineer Examination)
மத்திய அரசின் பொதுப்பணித் துறை, மத்திய நீர் ஆணையம், மத்திய நீர்மின் ஆராய்ச்சி நிலையம் போன்றவற்றில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் ஆகிய பொறியியல் பிரிவுகளில் உள்ள இளநிலைப் பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்படும்.

கல்வித்தகுதி: இளநிலைப் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கச் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப் பிரிவில் டிப்ளமா அல்லது பொறியியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: தகுதியுள்ள நபர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 2 நிலைகளை உள்ளடக்கியது. முதல் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். இதில், பொது விழிப்புத் திறன், ரீசனிங், பொது அறிவு மற்றும் பொறியியல் ஆகிய பகுதிகளிலிருந்து கேள்விகள் இடம்பெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த நிலை தேர்வான விரிவாக விடையளிக்கும் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதில் பொதுப் பொறியியல், சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவு ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

மல்டி-டாஸ்க்கிங் ஸ்டாஃப் எக்ஸாமினேஷன் (டெக்னிக்கல் அண்ட் நான்-டெக்னிக்கல்)
கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்விற்கான வினாக்கள் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழில் அமைந்திருக்கும். ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் எக்ஸாமினேஷன்(10+2 Level) Examination) (CHSL)

கல்வித்தகுதி: பிளஸ் 2 அளவிலான படிப்பை அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: டையர் 1 மற்றும் டையர் 2 என இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு, பின் தட்டச்சு தேர்வு என்ற வகையில் தேர்ச்சி இருக்கும்.

வயது வரம்பு: வயது வரம்பைப் பொறுத்தவரையில், இந்த அனைத்து தேர்வுகளுக்குமே பணியின் தன்மைக்கு ஏற்ப 27, 30, 32 என வெவ்வேறு உச்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். வயது வரம்பில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

தேர்வு மையங்கள்: இந்தியா முழுவதும் நடத்தப்படும் இந்தத் தேர்வு தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. மேலும், தென் மண்டல அலுவலகத்தோடு தொடர்புடைய குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, பாண்டிச்சேரி, ஐதராபாத், நிசாம்பாத், வாரங்கல் ஆகிய இடங்களிலும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு பற்றிய அனைத்து விவரங்களையும் The Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, IInd Floor, College Road, Chennai - 600 006 Tamilnadu. - என்னும் மண்டல இயக்குநரக முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும்

X