காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பட்டப்படிப்புகள்!

3/21/2018 11:47:13 AM

காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பட்டப்படிப்புகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

FDDI AIST 2018 நுழைவுத் தேர்வுக்கு தயாராகுங்க!

இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழிற்சாலை அமைச்சகம் (Ministry of Commerce and Industry) 1986ஆம் ஆண்டில் தன்னாட்சி அமைப்பாக, உத்திரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவைத் தலைமையகமாகக் கொண்டு நிறுவிய காலணி வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (Footwear Design and Development Institute) இடம்பெற்றிருக்கும் காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொடர்பான இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

படிப்புகள்

காலணி வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம் நொய்டா (Noida) தவிர்த்து, ரோக்தக் (Rohtak), கொல்கத்தா (Kolkata), பர்சத்கஞ்ச் (Fursatganj), சென்னை (Chennai), ஜோத்பூர் (Jodhpur), சிந்த்வாரா (Chhindwara), பாட்னா (Patna), சண்டிகர் (Chandigarh), குணா (Guna), ஐதராபாத் (Hyderabad), அங்கலேஸ்வர் (Ankleshwar) ஆகிய இடங்களிலும் தனது வளாகங்களை அமைத்திருக்கிறது.

இந்நிறுவனம் மற்றும் வளாகங்களில் மூன்று ஆண்டு கால அளவிலான காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (Footwear Design & Production  450 இடங்கள்), சில்லரை மற்றும் அலங்கார வணிகம் (Retail & Fashion Merchandise 480 இடங்கள்), அலங்காரத் தோல்பொருட்கள் வடிவமைப்பு (Fashion Leather Accessories Design 150 இடங்கள்), அலங்கார வடிவமைப்பு (Fashion Design  420 இடங்கள்) எனும் நான்கு இளநிலைப் பட்டப்படிப்புகளும் , இரண்டு ஆண்டு கால அளவிலான காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (Footwear Design & Production  300 இடங்கள்), சில்லரை மற்றும் அலங்கார வணிகம் (Retail & Fashion Merchandise  290 இடங்கள்), படைப்புத்திறன் வடிவமைப்பு கேட்/கேம் (Creative Design CAD/CAM  30 இடங்கள்) எனும் மூன்று முதுநிலைப் பட்டப்படிப்புகளும் இருக்கின்றன.

இந்நிறுவனம் இந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துடன் (Indira Gandhi National Open University) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு இப்படிப்பு களை நடத்திவருகிறது.

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு

இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 25.7.2018 அன்று 25 வயதுக்கு மிகாதவராக இருத்தல் வேண்டும். முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு ஏதாவதொரு பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ஏதுமில்லை. இந்த ஆண்டு தேர்வு எழுதவிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://fddiindia.com/ எனும் இந்நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விருப்ப வரிசையைக் (Preference) குறிப்பிட்டு விண்ணப்பிக்க முடியும். இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் என இரண்டுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர், தனித்தனி விண்ணப்பங்களாகச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ 500/- ஐ பற்று / கடன் அட்டையின் (Debit / Credit Card) மூலம் இணையம் வழியில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 22.4.2018.

எழுத்துத் தேர்வு

விண்ணப்பித்தவர்கள் AIEEE / BITSAT / IITJEE / GGSIPU / VIT / SRM / BCECE / UPSEE / MPCET / GUJCET / EAMCET / COMEDK / MHCET / ODISHA JEE போன்ற நுழைவுத் தேர்வு எழுதியவர்கள் இந்நிறுவனம் நடத்தும் எழுத்துத் தேர்வினை எழுத வேண்டியதில்லை. இத்தேர்வு எழுதுபவர்கள் விண்ணப்பத்தில் தாங்கள் எழுதவிருக்கும்/எழுதிய மேற்காணும் நுழைவுத் தேர்வு விவரங்களை விண்ணப்பத்தில் முன்பே தெரிவித்து விட வேண்டும்.

மற்ற விண்ணப்பதாரர்கள் இந்நிறுவனம் நடத்தும் அகில இந்தியத் தெரிவுத் தேர்வு (All India Selection Test (AIST)) எனும் பெயரிலான கணினி வழி எழுத்துத் தேர்வினை (Computer Based Test) எழுத வேண்டியிருக்கும். தமிழ்நாட்டில் சென்னை உட்பட, இந்தியா முழுவதும் 37 மையங்களில் இந்த கணினி வழியிலான தேர்வுகள் 27-4-2018 முதல் 29-4-2018 வரை மூன்று நாட்கள் நடத்தப்படும்.

விண்ணப்பதாரர்கள் இந்நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து தேர்வுக்கான அனுமதி அட்டையினை (Admit Card) தரவிறக்கம் செய்து, அதை அச்சிட்டு எடுத்துக்கொண்டு, அதனுடன் அரசால் அளிக்கப்பட்ட ஏதாவதொரு அடையாள அட்டையையும் கொண்டு சென்று தேர்வினை எழுதலாம்.

மாணவர் சேர்க்கை

 எழுத்துத் தேர்வு முடிவுகள் 21-5-2018 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும். அதன் பின்னர், விண்ணப்பதாரர்கள் எழுதிய நுழைவுத் தேர்வு / அகில இந்தியத் தெரிவுத் தேர்வு ஆகியவற்றின் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியுடைய மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

இந்நிறுவனத்தின் வளாகங்களில் முதல்கட்டமாக 12.6.2018 முதல் 17.6.2018 வரை 6 நாட்களும், 16.7.2018 முதல் 19.7.2018 வரை 4 நாட்களும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக ரூ.25000 செலுத்தித் தங்களது சேர்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும். இப்படிப்புகள் அனைத்தும் 1.8.2018 முதல் தொடங்கப்படும்.

கூடுதல் தகவல்கள்

இப்படிப்புகள் குறித்த மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் மேற்காணும் இணைய முகவரியிலான இந்நிறுவன இணையதளத்திற்குச் சென்று பார்வையிடலாம் அல்லது 0120 - 4818400 (49 lines), 0120 - 4500152, 203 எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டோ அல்லது “Footwear Design & Development Institute, A-10/A, Sector-24, Noida-201301” எனும் முகவரியிலோ அல்லது admission@fddiindia.com எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

- டி.எம்.சுப்பிரமணி

X