இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் M.Sc., Ph.D. படிக்க JAM 2019 நுழைவுத்தேர்வு!

10/3/2018 4:34:15 PM

இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் M.Sc., Ph.D. படிக்க JAM 2019 நுழைவுத்தேர்வு!

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

இந்தியா முழுவதுமுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் (Indian Institute of Technology) இடம்பெற்றிருக்கும் முதுநிலை அறிவியல் (M.Sc.), ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டப்படிப்பு (M.Sc, Ph.d), முதுநிலை அறிவியல் மற்றும்  முதுநிலைத் தொழில்நுட்பம் கொண்ட இரட்டைப் பட்டப்படிப்புகள் (M.Sc.-, M.Tech) மற்றும் மேல் இளம்நிலை பட்டப் படிப்புகளில் (Post Bachelor degrees) சேர்க்கை பெறுவதற்கான முதுநிலை அறிவியல் இணைச் சேர்க்கைத் தேர்வு - 2019க்கு (Joint Admission Test for M.Sc. (JAM -2019)) விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. இந்த ஆண்டு இத்தேர்வை நடத்தும் காரக்பூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் படிப்புகள்

1.எம்.எஸ்சி (இரண்டு ஆண்டுகள்) (M.Sc., - 2 years)
2.ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., பி.எச்டி (Joint M.Sc., Ph.D)
3.எம்.எஸ்சி., பி.எச்டி. டியூவல் டிகிரி (M.Sc., Ph.D - Dual Degree)
4.போஸ்ட் பேச்சுலர் டிகிரி (Post Bachelor Degree) (பெங்களூரு, இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்சஸ்)
5.ஒருங்கிணைந்த பி.எச்டி (Integrated Ph.D)

விண்ணப்பிக்கத் தகுதி

மேற்காணும் ஒவ்வொரு பட்டப்படிப்புக்குமான குறைந்தபட்சக் கல்வித்தகுதி குறித்த விவரங்கள் தகவல் குறிப்பேட்டில் தனித்தனியாக இடம் பெற்றிருக்கின்றன. இருப்பினும், இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் நிலையில் இளநிலைப் பட்டப்படிப்பில் மொழியியல் மற்றும் துணைப்பாடங்கள் உட்பட அனைத்துப் பாடங்களிலும் பொது மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் 55% மதிப்பெண்களும், எஸ்சி;  எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் 50% மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மதிப்பெண்கள் புள்ளிகளிலான தரக்குறியீட்டில் (Grade) இருப்பின் மேற்காணும் மதிப்பெண்களுக்கு இணையான புள்ளிகளுடனான தரத்தில் இருக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு

இந்த நுழைவுத்தேர்வு உயிரியல் அறிவியல் - Biological Sciences (BL), உயிர்-தொழில்நுட்பம் Bio-Technology (BT), வேதியியல் - Chemistry (Cy), மண்ணியல் - Geology (GG), கணிதம் - Mathematics (Ma), கணிதப் புள்ளியியல் - (Mathematical Statistics) (MS), இயற்பியல் - Physics (PH) ஆகிய ஏழு பாடங்களின் அடிப்படையில் நடைபெறும். இது 3 மணி நேரம் கொண்ட ஆன்லைன் தேர்வாகும்.  ஆங்கிலத்தில் உள்ள  இந்த வினாத்தாளில் 100 மதிப்பெண்களுக்கான 60 வினாக்கள் இருக்கும் ஒவ்வொரு தாளும் A, B, C என்று மூன்று பிரிவுகளைப் பெற்றிருக்கும்.

* பிரிவு A-யில், 30 சரியான விடையைத் தேர்வு செய்யும் வினாக்கள் இருக்கும். இவற்றில் 10 ஒரு மதிப்பெண் வினாக்களும், 20 இரண்டு மதிப்பெண்  வினாக்களும் இருக்கும்.

* பிரிவு B-யில் 10 இரண்டு மதிப்பெண் வினாக்கள் இருக்கும். இவற்றில் விடைகள், ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகளைப் பெற்றிருக்கும். எல்லா  விடைகளும் சரியானதாக உள்ள விடையை கிளிக் செய்தால்தான் மதிப்பெண் தரப்படும்.

* பிரிவு C-யில் 20 நியூமரிக்கல் விடை தரவேண்டிய வினாக்கள் இருக்கும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் உண்டு.  இவ்வினாக்களுக்கான விடை ஒரு எண்ணாக இருக்கும். இதை வெர்சுவல் நியூமரிக் கீ பேட் வழியாக தரவேண்டும்.

* பிரிவு A-யில் தவறான விடைக்கு, ஒரு மதிப்பெண் வினாவிற்கு 1/3 மதிப்பெண்ணும், இரண்டு மதிப்பெண் வினாவிற்கு 2/3 மதிப்பெண்ணும் குறையும். பிரிவு B மற்றும் பிரிவு C-யில் நெகட்டிவ் மதிப்பெண் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://jam.iitkgp.ac.in என்ற இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் அனைத்துப் பிரிவு மாணவிகளுக்கு ஒரு தாளுக்கு ரூ.750, இரண்டு தாள்களுக்கு ரூ.1,050 ஆகும். மற்றவர்களுக்கு ஒரு தாளுக்கு  ரூ.1,500, இரண்டு தாள்களுக்கு ரூ. 2,100 செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.10.2018

தேர்வு நாள்

இணைய வழியிலான கணினித் தேர்வு (Online Computer Based Exam) முறையில் நடத்தப்பெறும் இத்தேர்வுக்கு பெங்களூரு, மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், சென்னை, ரூர்கி என்று எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 65 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சென்னை மண்டலத்தில் இடம்பெற்றிருக்கும் 10 தேர்வு மையங்களில் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை,  திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி என்று 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
அனைத்துத் தேர்வு மையங்களிலும் 10.2.2019 அன்று காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரையில் உயிரியல் (Biology), கணிதம்  (Mathematics) மற்றும் இயற்பியல் (Physics) பாடப்பிரிவுகளுக்கும் மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரை உயிர்த் தொழில்நுட்பம்  (Biotechnology), வேதியியல் (Chemistry), நிலவியல் (Geology) மற்றும் கணிதப் புள்ளியியல் (Mathematical Statistics) பாடப்பிரிவுகளுக்கும் தேர்வு நடைபெறும்.

இத்தேர்வுக்கான பாடத்திட்டம் (Syllabus), தேர்வு தொடர்பான தகவல் (Examination Related Information) போன்ற கூடுதல்  தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் மேற்காணும் இணையதளத்தினைப் பார்க்கலாம் அல்லது தமிழ்நாட்டிற்கான மண்டல அலுவலகமான  சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழக அலுவலகத்தின் 044 -22578200, 22578204 எனும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு பெறலாம்.

- முனைவர் ஆர்.ராஜராஜன்.

மேலும்

X