B.Des & M.Des பட்டப்படிப்புகளுக்கு NID DAT -2019 நுழைவுத் தேர்வு!

11/13/2018 3:29:53 PM

B.Des & M.Des பட்டப்படிப்புகளுக்கு NID DAT -2019 நுழைவுத் தேர்வு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய வடிவமைப்பு நிறுவனம் (National Institute of Design) செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மற்றும் காந்திநகர் ஆகிய இரு இடங்களிலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலும், அரியானா மாநிலம் குருஷேத்திராவிலும் தனது கல்வி நிறுவனங்களை அமைத்திருக்கிறது.

இவற்றில் இடம்பெற்றிருக்கும் நான்காண்டுக் கால அளவிலான இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (B.Des), பட்டதாரி நிலையிலான வடிவமைப்பு பட்டயப்படிப்பு (GDPD) மற்றும் இரண்டரை ஆண்டுக் கால அளவிலான முதுநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (M.Des) ஆகியவைகளுக்கான இடங்களில் 2019-2020 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வு (Design Aptitude Test - 2019) அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்நிறுவனத்தின் அகமதாபாத் நகர் வளாகத்தில் இளநிலை வடிவமைப்பு (Bachelor of Design), முதுநிலை வடிவமைப்பு (Master of Design) ஆகிய இரு நிலைகளிலான பட்டப்படிப்புகளும், காந்திநகர் மற்றும் பெங்களூர் வளாகங்களில் முதுநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்புகளும், விஜயவாடா மற்றும் குருஷேத்திரா வளாகங்களில் பட்டதாரி நிலையிலான வடிவமைப்புப் பட்டயப்படிப்பும் (Graduate Diploma Programme in Design) நடத்தப்பட்டு வருகின்றன.
 
இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு

அகமதாபாத் வளாகத்தில் நான்கு ஆண்டுக் கால அளவிலான இளநிலை வடிவமைப்பு பட்டப்படிப்பில் மூன்று புலங்களில் மொத்தம் 100 இடங்கள் இருக்கின்றன. Faculty of Industrial Design கீழ் Ceramic & Glass Design எனும் பிரிவில் 10 இடங்களும், Furniture Design எனும் பிரிவில் 10 இடங்களும், Product Design எனும் பிரிவில் 15 இடங்களும் என்று மொத்தம் 35 இடங்கள் இருக்கின்றன.

Faculty of Communication Design கீழ் Animation Film Design எனும் பிரிவில் 15 இடங்களும், Exhibition Design எனும் பிரிவில் 10 இடங்களும், Film &Video Communication எனும் பிரிவில் 10 இடங்களும், Graphic Design எனும் பிரிவில் 15 இடங்களும் என்று மொத்தம் 50 இடங்கள் இருக்கின்றன. Faculty of Textile, Apparel & Lifestyle Accessory Design கீழ் Textile Design எனும் பிரிவில் 15 இடங்கள் உள்ளன.

பட்டதாரி நிலையிலான வடிவமைப்புப் பட்டயப்படிப்பு

விஜயவாடா மற்றும் குருஷேத்திரா வளாகங்களில் நான்கு ஆண்டுக் கால அளவிலான பட்டதாரி நிலையிலான வடிவமைப்பு பட்டயப்படிப்புகள் நடத்தப்பெற்றுவருகின்றன. Industrial Design, Communication Design, Textile & Apparel Design எனும் மூன்று பிரிவுகளில் வளாகத்திற்கு 60 இடங்கள் வீதம் மொத்தம் 120 இடங்கள் இருக்கின்றன.
 
முதுநிலை வடிவமைப்பு பட்டப்படிப்பு

இரண்டரை ஆண்டுக் கால அளவிலான முதுநிலை வடிவமைப்பு பட்டப் படிப்பில் அகமதாபாத் வளாகத்தில் Animation Film Design எனும் பிரிவில் 15 இடங்களும், Ceramic & Glass Design எனும் பிரிவில் 10 இடங்களும், Furniture Design எனும் பிரிவில் 15 இடங்களும், Film&Video Communication எனும் பிரிவில் 15 இடங்களும், Graphic Design எனும் பிரிவில் 15 இடங்களும், Product Design எனும் பிரிவில் 15 இடங்களும், Textile Design எனும் பிரிவில் 15 இடங்களும் என்று மொத்தம் 100 இடங்கள் இருக்கின்றன.

காந்திநகர் வளாகத்தில் Apparel Design எனும் பிரிவில் 15 இடங்களும், Lifestyle Accessory Design எனும் பிரிவில் 15 இடங்களும், New Media Design எனும் பிரிவில் 15 இடங்களும், Photography Design எனும் பிரிவில் 15 இடங்களும், Strategic Design Management எனும் பிரிவில் 15 இடங்களும், Toy & Game Design எனும் பிரிவில் 10 இடங்களும், Transportation & Automobile Design எனும் பிரிவில் 15 இடங்களும் என்று மொத்தம் 100 இடங்கள் இருக்கின்றன. பெங்களூரு வளாகத்தில் Design for Retail Experience எனும் பிரிவில் 15 இடங்களும், Digital Game Design எனும் பிரிவில் 15 இடங்களும், Information Design எனும் பிரிவில் 15 இடங்களும், Interaction Design எனும் பிரிவில் 15 இடங்களும், Universal Design எனும் பிரிவில் 15 இடங்களும் என்று மொத்தம் 75 இடங்கள் இருக்கின்றன.

கல்வித் தகுதி

இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு +2-ல் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். +2 அரசு பொதுத்தேர்வு எழுதவிருப்போரும் விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பிற்கு (M.Des) விண்ணப்பிப்பவர்கள் நான்கு ஆண்டுக் கால அளவிலான (10+2+4) இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மூன்று ஆண்டுக் கால அளவிலான (10+2+3) இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று ஒரு வருட காலம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நான்கு ஆண்டுக் கால அளவிலான (10+2+4) வடிவமைப்புப் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நடப்புக் கல்வியாண்டில் தேர்வு எழுதவிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

இந்திய மாணவர்களில் பொதுப் பிரிவினர் 01.07.1999 அன்று அதற்கு பின்னரோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு உச்ச வயது வரம்பு 20. நான் கிரீமி லேயர் பிற்படுத்தப்பட்டவர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 01.07.1996 அன்றோ அதற்குப் பின்னரோ பிறந்தவர் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு உச்ச வயது வரம்பு 23. மாற்றுத்திறனாளிகள் 01.07.1994 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர் விண்ணப்பிக்கலாம். இவர்களின் உச்ச வயது வரம்பு 30. அயல்நாட்டு மாணவர்கள் 01.07.1999 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான உச்ச வயது வரம்பு 20.

நுழைவுத் தேர்வு

இப்படிப்புகளுக்குச் சரியான மாணவர்களைத் தேர்வு செய்ய மாணவர்களின் அறிவுத்திறன், தனித்திறன், நடத்தைசார் திறன்கள் ஆகியவற்றை சோதிப்பதாக அமையும். இத்தேர்வுகள் Design Aptitude Test - Prelim (DAT -Prelim), Design Aptitude Test Main (DAT-Main) என்ற இரண்டு நிலைகளில் நடைபெறும். முதல் நிலையில் தேர்ச்சி பெற்றவர்தான் முதன்மைத் தேர்விற்கு தகுதி பெறுவார்கள்.

இத்தேர்வுகள் சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான தேர்வாகும். மொத்த மதிப்பெண் 100. ஸ்டூடியோ அமைப்பில் (studio setup) இத்தேர்வுகள் இரண்டு நாட்கள் நடைபெறும். வினாக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். தரவரிசையை நிர்ணயிக்க பிரிலிம்னரி தேர்வில் 30 விழுக்காடும், மெயின் தேர்வில் 70 விழுக்காடும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பட்டப்படிப்புகளில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.admissions.nid.edu என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (B.Des) மற்றும் பட்டதாரி நிலையிலான வடிவமைப்பு பட்டயப்படிப்பு (GDPD) இடங்களுக்கான வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வுக்கு பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் ரூ.2000/- தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் ரூ.1000/-, இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்புக்கு (B.Des) விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர் இந்தியப்பணம் ரூ 3000/-க்கு இணையான தொகையினையும் தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

முதுநிலைப் பட்டப்படிப்புக்கு ஒரே நேரத்தில் இரண்டு சிறப்புப் பாடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பொதுப் பிரிவினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் ஒரு பாடத்திற்கு ரூ.2000, இரண்டு சிறப்புப் பாடங்களுக்கு ரூ.4000 என்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.1000, இரண்டு பாடப்பிரிவுகளுக்கு ரூ.2000 என்று தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

வெளிநாட்டினர் இந்தியப் பணம் ஒரு பாடத்திற்கு ரூ.3000, இரண்டு பாடப்பிரிவுகளுக்கு ரூ.6000-க்கு இணையான தொகையினையும் தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தை கடன் அட்டை (Credit Card), பற்று அட்டை (Debit Card) போன்றவைகள் மூலம் இணைய வழியில் செலுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 9.11.2018. இப்படிப்புகளுக்கான திறனாய்வுத் தேர்வு, மாணவர் சேர்க்கை  போன்ற கூடுதல் தகவல்களை http://www.admissions.nid.edu என்ற இணையதளத்தைப் பார்வையிட்டுத் தெரிந்துகொள்ளலாம்.                                       

தேர்வு மையங்கள்

வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வுகள் அனைத்தும் அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டெக்ராடூன், கவுகாத்தி, ஐதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கொல்கத்தா, குருசேத்திரா, லக்னோ, மும்பை, நாக்பூர், புதுடெல்லி, பாட்னா, பன்சிம், ரெய்ப்பூர், ராஞ்சி, திருவனந்தபுரம் மற்றும் விஜயவாடா ஆகிய 23 நகரங்களில் மட்டும் நடத்தப்பெறும். வெளிநாட்டு மாணவர்கள் அகமதாபாத் நகர் மையத்தில் மட்டும் இத்தேர்வினை எழுத முடியும். இத்தேர்வுக்கான அனுமதி அட்டையினை 17.12.2018 முதல் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

-முனைவர் ஆர்.ராஜராஜன்.

X