சென்னை ஐஐடி-யில் ஒருங்கிணைந்த மானுடவியல் முதுநிலைப் பட்டம் படிக்க... நுழைவுத் தேர்வு HSEE - 2019

1/7/2019 5:43:39 PM

சென்னை ஐஐடி-யில் ஒருங்கிணைந்த மானுடவியல் முதுநிலைப் பட்டம் படிக்க... நுழைவுத் தேர்வு HSEE - 2019

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நுழைவுத் தேர்வு

இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்விக்கூடங்களில் ஒன்றாகவும் கற்பித்தல், ஆய்வு மற்றும் தொழில் அறிவுரைத் துறைகளில் முதன்மை மையமாக விளங்குவது சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம். சுருக்கமாக IIT  Madras என்று அழைக்கப்படும் இக்கல்வி நிறுவனம் 1959ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவின் மிக முக்கியமான கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட பதினைந்து தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்பக் கழகங்களில் மூன்றாவதாக நிறுவப்பட்டது.

இக்கல்வி நிறுவனத்தின் பழம்பெரும் துறையான மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் (Humonities and Social Sciences) துறை, தற்கால நடைமுறை சமூக வாழ்வியலுக்கு தேவையான அறிவுசார் கலாசார வாழ்வியலுக்கு அடிப்படைத் தேவைக்கேற்ற கல்வியைத் தருகிறது. இத்துறையின் ஐந்து வருட முதுநிலைப் படிப்பான M.A. ஒருங்கிணைந்த படிப்பில், மக்கள், சமுதாயம், சுற்றுச்சூழல் இவற்றில் மானிட வாழ்வியல் நிலைகள் பற்றிய அறிவுசார் சிந்தனைகள், புத்தம்புதிய சித்தாந்தங்கள் ஆகியைவ ஆய்வுநிலையில் வழங்கப்படுகிறது.

+2 முடித்த மாணவர்களுக்கு ஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகளாக வளர்ச்சிப் படிப்புகள் (M.A. Development Studies) மற்றும் ஆங்கிலப் படிப்புகள் (M.A English Studies) எனும் இரு வகையான படிப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறது. இப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு Humanities and Social Sciences Entrance Examinations - HSEE 2019 என்ற நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
இப்படிப்புகளுக்கு மொத்தம் 46 இடங்கள் உள்ளன. இவற்றில் முதல் இரண்டு ஆண்டுகள் இரு படிப்புகளுக்கும் பொதுவான பாடத்திட்டங்கள்தான். இரண்டாண்டுகள் முடிந்த பின்னர், மாணவர்களின் திறமைக்கேற்ப பிரிவுகள் தரப்படும்.

டெவலப்மென்ட் ஸ்டடீஸ் என்ற பிரிவில், மாறும் உலகியல் முன்னேற்றத்திற்கு தேவையான மக்கள் நலனுக்குத் தேவையான பாடங்கள் உள்ளடங்கியிருக்கும். பொருளாதார முன்னேற்றம், முன்னேற்றத்தில் மாநிலத்தின் பங்கு, வணிகநிலை, உலகளாவிய பொருளாதாரம், சம, சமமற்ற பொருளாதார நிலை, வறுமை, ஆண்/பெண் நிலைகள், சுற்றுப்புறச்சூழல், உலகச் சிக்கல்கள், புதிய சமூக நிலை, சார் இயக்கங்கள், அரசியல், கிராம, நகரம்சார்  சூழல்கள்,  நாடுகளுக்கிடையேயான உறவுகள், நகரமயமாதல், அறிவியல் தொழில்நுட்பம், அரசியல் தத்துவம் இவை இடம்பெறும்.

ஆங்கிலத்தில் தற்கால இலக்கியங்கள், அரிதான இலக்கியங்கள், பழங்கால இலக்கியங்கள், மொழி ஆய்வுகள், உலகளாவிய ஆங்கிலம், கலாசாரத்தில் மொழியின் பங்கு, ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன், அமெரிக்கா மற்ற கண்டங்கள் இவற்றின் ஆங்கிலம், அதன் எழுத்தாளர்கள், பொருளாதாரம், சமூகவியல், வரலாறு, தத்துவம் இவை இடம்பெறும்.

நுழைவுத் தேர்வு: இந்த நுழைவுத் தேர்வு, மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும். இது கணினி வழியிலான 2 ½ மணி நேரம் ‘சரியான விடையைத் தேர்வு செய்யும்’ முறையான பிரிவையும் 30 மணித்துளிக்கான விரிவான எழுத்துத் தேர்வு பிரிவையும் உள்ளடக்கியதாகும். தேர்வு 21.4.2019 அன்று நடைபெறும்.

பகுதி I-ல் ஆங்கிலம் மற்றும் காம்ப்ரிஹென்சன், அனாலிட்டிக்கல், குவாண்டிடேடிவ் எபிலிட்டி, இந்திய பொருளாதாரம், இந்திய சமூகம், கலாசாரம்  ஆகியவை மற்றும் பொதுப்பிரிவுகள், சுற்றுப்புறச்சூழல் மற்றும் ஈகாலஜி இவற்றிலிருந்து வினாக்கள் இருக்கும். பகுதி II-ல் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டும்.


விண்ணப்பிக்கத் தகுதி: இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் முதல் முயற்சியிலேயே (First Attempt) பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 60% மதிப்பெண்களுடனும், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் 55% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். புள்ளிக்கணக்கில் (Grade) மதிப்பெண்கள் இருப்பின் மேற்காணும் மதிப்பெண்களுக்கு இணையானதாக இருக்க வேண்டும். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். மாணவர் சேர்க்கையின்போது மேற்காணும் கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

1.10.1994 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க இயலும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.  

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.iitm.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்டவர்கள், ரூ.2,400, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.1,200 நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இந்தியன் வங்கி செலான் வழியாக செலுத்த வேண்டும். நெட்பேங்கிங்கில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.1.2019. இ-செலான் வழியாக 23.1.2019க்குள் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதிநாள் 24.1.2019.
மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.iitm.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மேலும்

X