ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் பட்டம் படிக்க NEST 2019 நுழைவுத் தேர்வு

1/23/2019 3:42:44 PM

ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் பட்டம் படிக்க NEST 2019 நுழைவுத் தேர்வு

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

ஒரிசா மாநிலத்தின் புவனேஸ்வரிலுள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (National Institute of Science Education and Research (NISER), Bhubaneswar) மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தின் சிறப்புடைய அடிப்படை அறிவியலுக்கான அணு ஆற்றல் மையம் (University of Mumbai - Department of Atomic Energy Center for Excellence in Basic Sciences (UM-DAE CEBS)) இந்த இரண்டு கல்வி நிறுவனங்களுமே, மத்திய அரசின் அணு ஆற்றல் துறையால் அமைக்கப்பட்ட, தன்னாட்சி நிறுவனங்களாகும். இரண்டுமே உறைவிட வசதிகள் உள்ள கல்விநிறுவனங்களாகும்.

இவற்றில் இடம்பெற்றிருக்கும் உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கான ஐந்து ஆண்டுக் கால அளவிலான ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகளில் (5 Years Integrated M.Sc. Programme)) சேர்க்கை பெறுவதற்கான தேசியக் கண்டறிதல் நுழைவுத் தேர்வு (National Entrance Screening Test 2019 (NEST - 2019)) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இன்ஸ்பையர் (Inspire) அல்லது (Disha) ஆண்டிற்கு ரூ.60000 ஊக்கத்தொகையும் ஆண்டிற்கு ரூ.20,000 பயிற்சிக் கட்டணமும் வழங்கப்படும்.

கல்வி மற்றும் வயதுத் தகுதி :

இந்த நுழைவுத்தேர்வுக்கு +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை எடுத்துப் படித்து, 2017 அல்லது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு மேற்காணும் தேர்வினை எழுதவிருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். பொது மற்றும் ஓபிசி வகுப்பினர் 60% மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிப் பிரிவினர் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

மதிப்பெண்கள் தகுதிப் புள்ளிகளாக (Grade) இருக்கும் நிலையில் மேற்காணும் மதிப்பெண்களுக்கு இணையான புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 1.8.1999 அன்றோ அல்லது அதற்குப் பின்போ பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிப் பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் வரை வயதுத்தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் www.nestexam.in என்ற இணையத்தின் மூலம் பொதுப் பிரிவினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.1200, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.600 என விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட்பேங்கிங் வழியாக செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் 11.3.2019.

நுழைவுத் தேர்வு :

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 24.4.2019 முதல் தேர்வுக்கான அனுமதி அட்டையினை மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி உட்பட இந்தியா முழுவதும் மொத்தம் 60 நகரங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறும். இத்தேர்வு 1.6.2019 அன்று 9.00 AM to 12.00 PM மற்றும் 2.30 PM to 6.00 PM என்ற நேரங்களில் நடைபெறும். தரவரிசைப் பட்டியல் NEST இணையதளத்தில் 17.6.2019 அன்று வெளியாகும்.

தேர்வு ‘சரியான விடையைத் தேர்வு செய்யும்’ முறையிலானது. வினாத்தாளில் 5 பிரிவுகள் இருக்கும். முதல் பிரிவிற்கு 30 மதிப்பெண்கள் உண்டு. இப்பிரிவில் தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்பட மாட்டாது. பிரிவு இரண்டில் உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் என்ற 4 பாடப் பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் 50 மதிப்பெண்கள். மாணவர்கள் அனைத்துப் பிரிவுகளில் உள்ள வினாக்களுக்கும் விடையளிக்கலாம். இதில் அதிக மதிப்பெண் எடுத்த 3 பிரிவுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். சரியான மதிப்பெண் இல்லாத பகுதி விட்டுவிடப்படும்.

தரவரிசை தயார் செய்ய, பொதுப்பிரிவும், நான்கு பாடங்களில் சிறந்த மதிப்பெண் உள்ள 3 பிரிவுகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். வினாக்கள் மாணவர்களின்  காம்ப்ரீஹென்ஷன், அனாலிட்டிக்கல் எபிலிட்டியை சோதிக்கும் வகையில் இருக்கும். சில பிரிவுகளில் தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்படும். சில வினாக்களில், ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் இருக்கும். இது ஒரு கணினி வழியான தேர்வு ஆகும். +1, +2 பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாக்கள் இருக்கும்.

மாணவர் சேர்க்கை :

இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நுழைவுத் தேர்வு மதிப்பெண்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட தரப்பட்டியல் மூலம் கலந்தாய்வு நடத்தப் பெற்றுத் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் இடம்பெற்றிருக்கும் 202 இடங்கள் மற்றும் மும்பைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புமிக்க அடிப்படை அறிவியலுக்கான அணுஆற்றல் மையத்திலிருக்கும் 47 இடங்கள் என்று மொத்தம் 249 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். தொடர்பிற்கு: The Chief Coordinator, NEST 2017, National Institute of Science Education and Research (NISER), At/PO Jatni, District Khurda, PIN - 752050, Odisha, India. மேலும் விவரங்கள் அறிய என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மேலும்

X