கட்டடக்கலைப் பட்டம் படிக்க NATA 2019 திறனாய்வுத் தேர்வு!

2/6/2019 4:11:54 PM

கட்டடக்கலைப் பட்டம் படிக்க NATA 2019 திறனாய்வுத் தேர்வு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்தியாவில் இருக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் ஐந்தாண்டு கால அளவிலான கட்டடக்கலைப் பட்டப்படிப்பில் (B.Arch) 2019-2020ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற கட்டடக்கலைக் குழு (Council of Architecture) தேசியக் கட்டடக்கலைத் திறனாய்வுத் தேர்வை (National Aptitude Test in Architecture  NATA 2019) நடத்திவருகிறது. கட்டடக்கலைப் பட்டம் படிக்க இந்நுழைவுத்தேர்வில் வெற்றி பெறவேண்டியது அவசியம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

ஆண்டுதோறும், ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்பட்டு வந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் சில முக்கிய மையங்களில்குறிப்பிட்ட தேதிகளில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வு முடிந்ததும் இரண்டு மணி நேரத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  அதிகபட்சம் ஐந்து முறை ஆன்லைன் தேர்வில் பங்கேற்கவும், இவற்றில் பெறும் அதிகபட்ச மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை
பெறவும், வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்தத் தேர்வு முறையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, ஆன்லைன் தேர்வு முறை மாற்றப் பட்டு, தேசிய அளவில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வு  நாடு முழுவதும், ஒரே நாளில் நடத்தப்படுகிறது. நடப்புக் கல்வி ஆண்டுக்கான NATA தேர்வு, இரண்டு முறை நடத்தப்படும் என, இந்திய ஆர்க்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.

கல்வி மற்றும் வயதுத் தகுதி

இந்த நுழைவுத்தேர்வுக்கு +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதப் பாடத்தை எடுத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள், 10ம் வகுப்பிற்குப் பிறகு மூன்றாண்டு கால அளவிலான பட்டயப்படிப்பில் கணிதத்தைப் பாடமாக எடுத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும். மேற்காணும் தேர்வினை இந்த ஆண்டு எழுதவிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://nata.nic.in எனும் இணையதளத்திற்குச் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக அதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இணைய வழியிலான விண்ணப்பம் தனித்தகவல்கள் (Personal Details), ஆவணப் பதிவேற்றம் (Document Uploading) மற்றும் கட்டணம் செலுத்துதல் (Fee Payment) எனும் மூன்று வகையான செயல்பாடுகளை அடிப்படையாகக்கொண்டிருக்கிறது.

முதல் இரு செயல்பாட்டினை முடித்துக்கொண்டு, பொதுப்பிரிவினர் ஒரு தேர்வுக்கு மட்டும் விண்ணப்பித்தால் ரூ.1800ம், இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்தால் ரூ.3500ம், எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் ஒரு தேர்வுக்கு மட்டும் ரூ.1500ம், இரண்டு தேர்வுக்கும் விண்ணப்பித்தால் ரூ.2800ம் Credit Card/Debit Card/Net Banking போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி இணைய வழியில் செலுத்தவேண்டும்.

முதல் தேர்வு, ஏப்ரல் 14ம் தேதியும், இரண்டாம் தேர்வு ஜூலை 7ம் தேதியும் நடத்தப்பட உள்ளது. முதல் தேர்வுக்கு மார்ச் 3ம் தேதியும், இரண்டாம் தேர்வுக்கு ஜூன் 12ம் தேதியும் ஆன்லைன் பதிவுகள் முடிகின்றன.

நுழைவுத் தேர்வு

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் முதல் தேர்வுக்கான அனுமதி அட்டையினை 1.4.2019 அன்றும், இரண்டாம் தேர்வுக்கான அனுமதி அட்டையினை 24.6.2019 அன்றும் மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று நகரங்கள் உட்பட இந்தியா முழுவதும் மொத்தம் 122 நகரங்களில் 14.4.2019 அன்று நுழைவுத்தேர்வு நடைபெறும்.

இந்தத் தேர்வு காலை 11.00 மணிக்குத் தொடங்கி மதியம் 2.00 மணி வரை நடைபெறும். மூன்று மணி நேர கால அளவிலான இத்தேர்வில் கணிதம், பொதுத்திறன் குறித்த எழுத்துத் தேர்வுக்கு (Written Test) 60 நிமிடங்களும், வரைகலைத் தேர்வுக்கு (Drawing Test) 120 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கும். கணிதத்திற்கு 40 மதிப்பெண்கள், பொதுத்திறன் பாடத்திற்கு 80 மதிப்பெண்கள், வரைகலைப் பாடத்திற்கு 80 மதிப்பெண்கள் என்று மொத்தம் 200 மதிப்பெண்கள் இத்தேர்வுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நுழைவுத்தேர்வில் கணிதம், பொதுத்திறன் உள்ளிட்ட பகுதியில் 25% மதிப்பெண்கள், வரைகலைப் பகுதியில் 25% மதிப்பெண்கள் அவசியம் பெற்றிருக்க வேண்டும். இதனடிப்படையில் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கான தேர்வு முடிவுகள் முதல் தேர்வுக்கு 3.5.2019 அன்றும், இரண்டாம் தேர்வுக்கு 21.7.2019 அன்றும் வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கைகட்டடக்கலைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியா முழுவதுமுள்ள 458 கட்டடக்கலைக் கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் ஐந்தாண்டு கால அளவிலான கட்டடக்கலைப் படிப்புகளில் (B.Arch) இந்த நுழைவுத்தேர்வுத் தகுதி மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, இந்திய/மாநில அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளுக்கேற்ப மாணவர் சேர்க்கையினைப் பெற முடியும்.

கூடுதல் தகவல்கள்

இந்த நுழைவுத்தேர்வு குறித்த மேலும் பல கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் மேற்காணும் இணையதளத்தினைப் பார்வையிடலாம் அல்லது “Council of Architecture, India Habitat Centre, Core 6A, 1st Fl, Lodhi Road, New Delhi - 110 003” எனும் அஞ்சல் முகவரியிலோ அல்லது e mail: helplinenata2019@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது NATA Help Desk No.: +918296744296 அலுவலகத் தொலைபேசி எண்ணிற்கு அலுவலக நேரத்தில் தொடர்புகொண்டோ பெறலாம்.

-எம்.எஸ்.மணி

X