முதுநிலை தொழில் படிப்புகளுக்கு TANCET நுழைவுத்தேர்வு

5/21/2019 3:32:16 PM

முதுநிலை தொழில் படிப்புகளுக்கு TANCET நுழைவுத்தேர்வு

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

* விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

அண்ணா பல்கலைக்கழகம் தனது உறுப்புக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ; எம்.இ; எம்.டெக்; எம்.ஆர்க், எம்.பிளான் போன்ற முதுநிலைத் தொழில் படிப்புகளில் சேர தனி பொது நுழைவுத் தேர்வு நடத்தப்போவதாக திடீரென அறிவித்தது. இதனால் மற்ற கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு ‘டான்செட்’ பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. மொத்தத்தில் இரண்டு நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டுமோ என்று மாணவர்களும் குழப்பம் அடைந்தனர்.

இந்நிலையில், உயர்கல்வித் துறையின் அறிவுரையை ஏற்று இதுவரை இருந்து வந்ததைப் போன்று அனைத்துக் கல்லூரிகளுக்கும் சேர்த்து‘டான்செட்’பொது நுழைவுத் தேர்வு நடத்துவதாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா அறிவித்தார். இதைத் தொடர்ந்து டான்செட் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டது. அதோடு ஏற்கெனவே வெளியிட்டிருந்த தனி நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை ரத்து செய்துள்ளது.

தமிழ்நாடு ‘டான்செட்’செயலாளர் வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி, எம்.சி.ஏ. படிப்புக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வு ஜூன் 22-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12மணி வரையிலும், எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், எம்.இ; எம்.டெக்; எம்.ஆர்க்; எம்.பிளான் படிப்பு
களுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 23-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் நடைபெறும்.

தமிழ்நாட்டில் முதுநிலை வணிக மேலாண்மை (Master of Business Administration-MBA), முதுநிலைக் கணினிப் பயன்பாட்டியல் (Master of Computer Application-MCA), முதுநிலைப் பொறியியல் (Master of Engineering-ME), முதுநிலைத் தொழில்நுட்பம் (Master of Technology-M.Tech), முதுநிலைக் கட்டடக்கலை (Master of Architecture-M.Arch) மற்றும் முதுநிலை அமைப்பியல் (Master of Planning-M. Plan) போன்ற முதுநிலைத் தொழில் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான “தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு”(Tamilnadu Common Entrance Test -TANCET 2019) அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.    

கல்வித் தகுதி

எம்.பி.ஏ. படிப்பிற்கு, 10+2+3 முறை அல்லது 10+3 (பட்டயம்) + 3 முறை அல்லது பி.இ / பி.டெக் / பி.ஆர்க் / பி.பார்ம் அல்லது 10+2+AMIE அல்லது 10+3 (பட்டயம்)+ AMIE என ஏதாவதொரு பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.சி.ஏ. படிப்பிற்கு 10+2+3/4 முறை அல்லது 10+3 (பட்டயம்) + 3 முறை அல்லது 10+2+AMIE அல்லது 10+3 (பட்டயம்)+ AMIE என ஏதாவதொரு பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பிலும், எம்.சி.ஏ (நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை) படிப்பிற்கு பி.சி.ஏ, பி.எஸ்சி (கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம்) பட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எம்.இ/எம்.டெக்/எம்.ஆர்க்/ எம்.பிளான் படிப்புகளுக்கு பி.இ/பி.டெக் / பி.ஆர்க் அல்லது பி.பார்ம் அல்லது குறிப்பிட்ட படிப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் அல்லது 10+2+AMIE அல்லது 10+3 (பட்டயம்)+ AMIE படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்காணும் கல்வித் தகுதிக்கான படிப்புகளில் 50 சதவிகிதத்துக்குக் குறையாத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 45 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.

நுழைவுத் தேர்வு

மேற்காணும் படிப்புகளில் எம்.பி.ஏ. படிப்பிற்குத் தனியாக ஒரு நுழைவுத் தேர்வு, எம்.சி.ஏ. படிப்பிற்குத் தனியாக ஒரு நுழைவுத் தேர்வு, எம்.இ / எம்.டெக் / எம்.ஆர்க் / எம். பிளான் படிப்புகளுக்கு ஒரு நுழைவுத் தேர்வு என்று மூன்று பிரிவிலான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படவிருக்கின்றன. இந்த நுழைவுத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்திவருகிறது.     

மேற்காணும் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  www.annauniv.edu/tancet2019 எனும் இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் மூன்று தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்வுக்கும் பொதுப் பிரிவினர் ரூ.500, எஸ்.சி / எஸ்.சி(ஏ) / எஸ்.டி பிரிவினர் ரூ.250 என்று விண்ணப்பக் கட்டணத்தைக் கணக்கிட்டு, இணைய வழியில் மட்டும் செலுத்திட வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 25.5.2019.  

நுழைவுத் தேர்வுக்குப் பின்னர் மதிப்பெண் தாள் (Mark Sheet) மேற்காணும் இணையதளத்தில் வெளியிடப்படும். வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள் மதிப்பெண் தாளைத் தரவிறக்கம் செய்து, அச்சிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

 நகல் பெற்றிட இந்த நுழைவுத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, மதிப்பெண் தாள் போன்றவை மாணவர் சேர்க்கையின்போது, சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களுடன் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என்பதால் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். தவறவிட்டவர்கள், ”The Secretary, TANCET, Anna University, Chennai - 600 025” எனும்
பெயரில் ரூ.100- க்கான வங்கி வரைவோலை பெற்று தங்களுடைய விண்ணப்ப எண் / பதிவு எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் கடிதம் அனுப்பி நகலைப் பெற்றுக்கொள்ள முடியும். இரண்டையும் தவற விட்டவர்கள் இரண்டுக்கும் தனித்தனியாக வங்கி வரைவோலை பெற்று அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களை அறிய: www.annauniv.edu/tancet2019 என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

- எம். சுப்பிரமணி

மேலும்

X