தேசிய கட்டடக்கலை திறனாய்வுத் தேர்வு NATA 2019

5/22/2019 4:25:34 PM

தேசிய கட்டடக்கலை திறனாய்வுத் தேர்வு NATA 2019

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

* திறனாய்வுத் தேர்வு

இந்தியாவில் இருக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஐந்தாண்டு கால அளவிலான கட்டடக்கலைப் பட்டப்படிப்புகள் (B.Arch) வழங்கப்படுகின்றன. இப்பட்டப்படிப்புகளில் சேர்ந்து ஒரு ஆர்க்கிடெக்ட் ஆக செயல்பட, ‘நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர்’ (நாட்டா-NATA) எனும் தேசிய அளவிலான தகுதித் தேர்வை எழுத வேண்டியது அவசியம். ‘கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர்’ நடத்தும் இந்தத் தேர்வில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியாவில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பி.ஆர்க்.படிப்பில் சேர்க்கை பெற முடியும். ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்படும் இத்தேர்வில், முதல் தேர்வு முடிவடைந்த நிலையில், இறுதி வாய்ப்புக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றால் 2019-2020 ம் கல்வியாண்டில் B.Arch படிக்கலாம்.

இது தவிர, பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஜே.இ.இ. தேர்வுடனும் கட்டடக்கலை படிக்க சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டாலும், கட்டடக்கலை படிப்பை பொறுத்தவரை, நாட்டா மட்டுமே மிக முக்கிய தேர்வாக உள்ளது. மாணவர்களின் துறை சார்ந்த பொது அறிவு, கணிதம் மற்றும் வரைதல் ஆகிய திறன்கள் இந்த திறனாய்வுத் தேர்வின் மூலம் பரிசோதிக்கப்படுகிறது. இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண் ஒரு ஆண்டிற்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்வி மற்றும் வயதுத் தகுதி    

இந்த நுழைவுத்தேர்வுக்கு +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம் பாடத்தை எடுத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள், 10 ஆம் வகுப்பிற்குப் பிறகு மூன்றாண்டு கால அளவிலான பட்டயப்படிப்பில் கணிதத்தைப் பாடமாக எடுத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும். ஆனால், 50% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு 17 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.nata.in எனும் இணையதளத்திற்குச் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக அதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இணைய வழியிலான விண்ணப்பம் தனித்தகவல்கள் (Personal Details), ஆவணப் பதிவேற்றம் (Document Uploading) மற்றும் கட்டணம் செலுத்துதல் (Fee Payment) எனும் மூன்று வகையான செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

முதல் இரு செயல்பாட்டினை முடித்துக் கொண்டு, பொதுப் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.1800, எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் 1500 என Credit Card/ Debit Card/Net Banking போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி இணைய வழியில் செலுத்தலாம்.

இணைய வழியாகத் தனித்தகவல்களைப் பதிவு செய்துகொள்ளக் கடைசி நாள்: 12.6.2019. படம் (Image) உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய, விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரங்களைப் பதிவு செய்யக் கடைசி நாள்: 15.6.2019. பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் பிழைகள் ஏதுமிருப்பின் அப்பிழைகளை 15.6.2019 முதல் 17.6.2019 வரை திருத்தம் செய்து சரிசெய்ய முடியும். அதன் பிறகு, உறுதி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையத்தில் இருந்து தனியாக அச்சிட்டு எடுத்துக் கொள்ள முடியும்.  

நுழைவுத் தேர்வு

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 24.6.2019 முதல் தேர்வுக்கான அனுமதி அட்டையினை மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய நகரங்கள் உட்பட இந்தியா முழுவதும் மொத்தம் 123 நகரங்களில் 7.7.2019 அன்று நுழைவுத் தேர்வு நடைபெறும்.

இந்தத் தேர்வு காலை 10.00 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறும். மூன்று மணி நேர கால அளவிலான இத்தேர்வில் கணிதம், பொதுத்திறன் குறித்த எழுத்துத் தேர்வுக்கு (Written Test) 90 நிமிடங்களும், வரைகலைத் தேர்வுக்கு (Drawing Test) 90 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கும். கணிதத்திற்கு 40 மதிப்பெண்கள், பொதுத்திறன் பாடத்திற்கு 80 மதிப்பெண்கள், வரைகலைப் பாடத்திற்கு 80 மதிப்பெண்கள் என்று மொத்தம் 200 மதிப்பெண்கள் இத்தேர்வுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு முடிவுகள்

இந்த நுழைவுத் தேர்வில் கணிதம், பொதுத்திறன் உள்ளிட்ட பகுதியில் 25% மதிப்பெண்கள், வரைகலைப் பகுதியில் 25% மதிப்பெண்கள் அவசியம் பெற்றிருக்க வேண்டும். இதனடிப்படையில் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கான தேர்வு முடிவுகள் 21.7.2019 அன்று வெளியிடப்படும்.   

மாணவர் சேர்க்கை

கட்டடக்கலைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியா முழுவதுமுள்ள 458 கட்டடக்கலைக் கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் ஐந்தாண்டு கால அளவிலான கட்டடக்கலைப் படிப்புகளில் (B.Arch) இந்த நுழைவுத் தேர்வுத் தகுதி மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, இந்திய/மாநில அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளுக்கேற்ப மாணவர் சேர்க்கையினைப் பெற முடியும்.

இந்த நுழைவுத்தேர்வு குறித்த மேலும் பல கூடுதல் தகவல்களை அறிய விரும்பு பவர்கள் மேற்காணும் இணையதளத்தினைப் பார்வையிடலாம் அல்லது “Council of Architecture, India Habitat Centre, Core 6A, 1st Fl, Lodhi Road, New Delhi - 110 003” எனும் அஞ்சல் முகவரியிலோ அல்லது nata-coa@gov.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 011 - 79412100 அலுவலகத் தொலைபேசி எண்ணிற்கு அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டோ பெறலாம்.

 - முத்து

X