2020ல் எய்ம்ஸ், ஜிப்மர் மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு!

10/23/2019 11:59:32 AM

2020ல் எய்ம்ஸ், ஜிப்மர் மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தற்போதைய நிலையில், எய்ம்ஸ், ஜிப்மர் தவிர அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் அந்த இரு மருத்துவக் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கைக்கு தனியே நுழைவுத் தேர்வு நடத்திவருகின்றன. ஆனால் அடுத்த ஆண்டு (2020) முதல் எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமீபத்தில் டெல்லியில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும். மேலும், தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின்கீழ், மருத்துவப் படிப்புக்கு பொதுக் கலந்தாய்வு நடத்தப்படும். நாட்டில் மருத்துவக் கல்விக்கென பொதுவான தரக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்த இது உதவும். அதேபோல், தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்கீழ் எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு இறுதியாண்டில் பொதுத் தேர்வு (நெக்ஸ்ட்) ஒன்று நடத்துவதற்கான முறைகள் பரிசீலிக்கப்பட்டுவருகின்றன. அந்தத் தேர்வு அமலுக்கு வர இன்னும் 3 ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது.

எம்.பி.பி.எஸ் முடிக்கும் மாணவர்கள் முதுநிலை மருத் துவம் படிப்பதற்கான தகுதித் தேர்வாகவும், மருத்துவராகப் பணியாற்றுவதற்கு தொழில் உரிமம் பெறும் தேர்வாகவும் இந்த நெக்ஸ்ட் தேர்வு இருக்கும். மேலும், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் மருத்துவத் தொழில் செய்வதற்கான அனுமதித் தேர்வாகவும் இது இருக்கும். முதுநிலை மருத்துவப் படிப்புக்காக முயற்சிக்கும் மாணவர்கள் தங்களது தரவரிசையை அதிகரித்துக்கொள்வதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நெக்ஸ்ட் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். நெக்ஸ்ட் தேர்வு மூலம் ஒரு மாணவர் பல கல்லூரிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கையிலும், பல்வேறு கலந்தாய்வுகளிலும் பங்கேற்க வேண்டிய அசௌகர்யம் குறைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும்

X