அறிவியல் துறையில் ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டம் படிக்க NEST 2020 நுழைவுத் தேர்வு!

2/13/2020 5:10:48 PM

அறிவியல் துறையில் ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டம் படிக்க NEST 2020 நுழைவுத் தேர்வு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (National Institute of Science Education and Research (NISER), Bhubaneswar) புவனேஸ்வரில் உள்ளது. இந்நிறுவனத்திலும் மும்பைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புடைய அடிப்படை அறிவியலுக்கான அணு ஆற்றல் மையம் (University of Mumbai  Department of Atomic Energy Center for Excellence in Basic Sciences (UMDAE CEBS)) ஆகியவற்றில் உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கான ஐந்து ஆண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகள் (M.Sc) வழங்கப்படுகின்றன. இந்த முதுநிலைப் பட்டப்படிப்புகளில்  சேர்க்கை பெறுவதற்கான தேசியக் கண்டறிதல் நுழைவுத் தேர்வு  (National Entrance Screening Test 2020 - NEST 2020) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.


கல்வி மற்றும் வயதுத் தகுதி

இந்த நுழைவுத் தேர்வுக்கு +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை எடுத்துப் படித்து, 2018 அல்லது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 2020 ஆம் ஆண்டு மேற்காணும் தேர்வினை எழுத விரும்புபவர்களும் விண்ணப்பிக்க முடியும். பொது மற்றும் ஓ.பி சி. வகுப்பினர் 60% மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிப் பிரிவினர் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். மதிப்பெண்கள் தகுதிப் புள்ளிகளாக (Grade) இருக்கும் நிலையில் மேற்காணும் மதிப்பெண்களுக்கு இணையான புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் 1.8.2000 அன்றோ அல்லது அதற்குப் பின்போ பிறந்தவராக இருக்கவேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிப் பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அனுசரிக்கப்படுகிறது.
    
விண்ணப்பிக்கும் முறை

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.nestexam.in எனும் இணையதளத்திற்குச் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக அதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1200, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிப் பிரிவினர் மற்றும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்களும் ரூ.600 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். விண்ணப்பக் கட்டணத்தைக் கடன் அட்டை (Credit Card) / பற்று அட்டை (Debit Card) / இணைய வங்கிச் சேவை (Net Banking) போன்ற வழிமுறைகளின் வழியாகப் பணத்தைச் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசிநாள் 3.4.2020.
    
நுழைவுத் தேர்வு
 
நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 24.4.2020 முதல் தேர்வுக்கான அனுமதி அட்டையினை மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி மற்றும் சேலம் உட்பட இந்தியா முழுவதும் மொத்தம் 90 நகரங்களில் 6.6.2020 அன்று நுழைவுத் தேர்வு நடைபெறும்.
    
மாணவர் சேர்க்கை

நுழைவுத் தேர்வுக்குப் பின்னர், இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நுழைவுத் தேர்வு மதிப்பெண் களைக்கொண்டு உருவாக்கப்பட்ட தரப்பட்டியல் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் இடம்பெற்றிருக்கும் 200 இடங்கள் மற்றும் மும்பைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புமிக்க அடிப்படை அறிவியலுக்கான அணு ஆற்றல் மையத்திலிருக்கும் 57 இடங்கள் என்று மொத்தம் 257 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.
    
கல்வி உதவித்தொகை

தேசிய நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, இந்திய அரசின் அணு ஆற்றல் துறையின் DISHA திட்டத்தின் மூலம் ஆண்டு கல்வி உதவித்தொகையாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும்.
    
கூடுதல் தகவல்கள்

இந்த நுழைவுத் தேர்வு குறித்த மேலும் பல கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் மேற்காணும் இணையதளத்தினைப் பார்வையிடலாம் அல்லது “The Chief Coordinator, NEST 2020, UM-DAE Centre for Excellence in Basic Sciences University of Mumbai, Kalina, Santacurz (East), Mumbai-400098 (India) எனும் அஞ்சல் முகவரியிலோ அல்லது nest2020@cbs.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.  

தொகுப்பு: வெங்கட் குருசாமி. 

X