மத்திய அரசுப் பணியில் சேர SSC தேர்வு

3/4/2020 3:41:05 PM

மத்திய அரசுப் பணியில் சேர SSC தேர்வு

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்கும் மத்திய அரசின் அமைப்பு ‘ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன்’ (Staff Selection Commission) ஆகும். இதன் தலைமை அலுவலகம் புதுடெல்லியில் இயங்குகிறது. இந்தியா முழுவதும் 7 மண்டல அலுவலகங்களைக் கொண்டு எஸ்.எஸ்.சி. அமைப்பு இயங்குகிறது. அலகாபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா, கவுஹாத்தி, சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. இவை தவிர, ராய்ப்பூர், சண்டிகார் ஆகிய இடங்களில் துணை மண்டல அலுவலகங்கள் செயல்படுகின்றன.

ஒவ்வொரு மண்டல அலுவலகமும், மண்டல இயக்குநர் தலைமையில் இயங்குகின்றன. ஆனால், துணை மண்டல அலுவலகம் துணை இயக்குநர் தலைமையில் இயங்குகிறது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தரம்வாய்ந்த, தகுதியான நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஏற்ற பணிகளை வழங்குவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இதனை ‘எஸ்.எஸ்.சி.’ (SSC) என்று சுருக்கமாக அழைப்பார்கள். அந்தவகையில் தற்போது மத்திய அரசுத் துறைகளில் பேஸ்-8 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள்: லேப் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபரேட்டர், ஸ்டோர் கீப்பர், ஜூனியர் எஞ்சினியர், சயின்டிபிக் அசிஸ்டன்ட், ஃபீல்ட் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபீசர், டயட்டீஷியன், டெக்னிக்கல் சூப்பிரன்டென்ட், டெக்ஸ்டைல் டிசைனர், பமிகேசன் அசிஸ்டன்ட், லேப் அட்டன்டன்ட், லைப்ரரி இன்ஃபர்மேஷன் அசிஸ்டன்ட், லைப்ரரி கிளார்க், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிடங்கள், ஒவ்வொரு துறையிலும் உள்ள காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். மொத்தம் 1355 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு டெக்னிக்கல் ஆபரேட்டர், லைப்ரரி கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படித்தவர்களுக்கு லேப் அசிஸ்டன்ட், பமிகேசன் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகளுக்கும் ஏராளமான பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்குப் பணிகள் உள்ளன. பல பணிகளுக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://ssc.nic.in  என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.3.2020.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள்,
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் இந்தக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

மேலும் முழு விவரங்களை https://ssc.nic.in  என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

மேலும்

X