படிப்புக்குப் பயன்படும் இணையதளங்கள்

4/6/2016 12:57:34 PM

படிப்புக்குப் பயன்படும் இணையதளங்கள்

உயர்கல்வியைத் தேர்வு செய்ய...

www.studyguideindia.com
இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கலை அறிவியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், சட்டப்பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரிகள், பெண்களுக்கான கல்வி நிலையங்கள், தொலைதூரக் கல்வி வழங்கும் நிறுவனங்கள், டிப்ளமோ, சான்றிதழ் பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் எனக் கல்வி நிறுவனங்களைப் பற்றிய முழுத் தகவல்களையும் தொகுத்து வழங்குகிறது இந்த இணையதளம். இந்தியா முழுவதும் வழங்கப்படும் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ படிப்புகள், அந்தப் படிப்புகளில் அடங்கியுள்ள பாடங்கள், எந்தெந்த கல்வி நிறுவனங்களில் அந்தப் படிப்புகள் வழங்கப்படுகின்றன போன்ற தகவல்களும் இதில் உள்ளன.

இதுதவிர, ஒவ்வொரு படிப்புக்கும் உள்ள வேலை வாய்ப்புகள், வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களின் இணையதளங்கள், வேலை வாய்ப்புப் பெற்றுத்தரவும், ஆராய்ச்சி செய்யவும் உதவும் அமைப்புகளின் இணையதளங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. நுழைவுத்தேர்வுகள், போட்டித் தேர்வுகள், சர்வதேச தேர்வுகள், மாணவர்களுக்கான போட்டிகள், பாடத்திட்டங்கள், வினா-விடைத் தொகுப்புகள், சர்வதேச கல்வி நிறுவனங்கள் பற்றிய தொகுப்பு என அள்ளக் குறையாத சுரங்கமாக இருக்கும் இந்த இணையம் உயர்கல்வியைத் தேர்வு செய்ய மாணவர்களுக்கு முழுமையாக வழிகாட்டுகிறது.

கல்விக்கடன் பெற...

www.vidyalakshmi.co.in
உயர்கல்வி பெறப் பணம் தடையாக இருக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் கொண்டு வரப்பட்ட கல்விக்கடன் திட்டத்தில் ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள். பல வங்கிகள் விண்ணப்பம் தரக்கூட மறுக்கின்றன. பரிந்துரையும், சொத்துப்பிணையும் உள்ளவர்களுக்கே கல்விக்கடன் கிடைக்கிறது. வங்கிக்கு கால் தேயத்தேய நடந்து ஓய்ந்து போகிறார்கள் பெற்றோர்கள். இந்த மாதிரி சிக்கல்களைக் களைந்து அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கடன் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு தொடங்கியுள்ள இணையதளம் இது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ. வங்கி, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா உள்பட பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இந்த இணையத்திலேயே கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். தகவல்களைப் பெறலாம். விண்ணப்பத்தின் நிலையை அறியலாம். புகார்களையும் பதிவு செய்யலாம். மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகளுக்கான இணைப்பும் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை அறிய...

www.knowyourcollege-gov.in
இந்திய அரசின் மனித வளத்துறை மற்றும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) இணைந்து, இந்தியாவிலிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல், மேலாண்மை, கணினிப் பயன்பாடு, மருந்தாளுமை , உணவுத் தயாரிப்பு மற்றும் விடுதி மேலாண்மைக் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் குறித்த முழுத் தகவல்களையும் அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கியுள்ள இணையதளம் இது. கூகுள் துணையோடு, இந்தியக் கல்வி நிறுவனங்கள் அடங்கிய மேப் ஒன்றும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. கல்வி தொடர்பான தகவல்கள், மாணவர் சேர்க்கை அறிவிப்புகள், நுழைவுத்தேர்வு அறிவிப்புகளுக்கான ‘லிங்க்’கும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகைகள் பெற...

https://scholarships.gov.in/main.do
திட்டங்களை மக்கள் எளிதாகப் பயன்படுத்தவும், ஊழியர்களின் பணிப்பளுவைக் குறைக்கவும் National e-Governance Plan(NeGP) என்ற திட்டத்தின் மூலம் அனைத்துத் துறைகளையும் மின்னணு மயமாக்கி வருகிறது மத்திய அரசு. அவற்றின் ஒரு அங்கம்தான் இந்த இணையதளம். மத்திய அரசின் பல்வேறு துறைகள் மாணவர்களுக்கு ஏராளமான உதவித்தொகைகளை வழங்கிவருகின்றன.

அவற்றை இணையதளங்களில் தேடி, விண்ணப்பிப்பதற்குப் பதிலாக, அனைத்து உதவித்தொகைகளையும் ஒரே குடையின் கீழ் திரட்டியிருக்கிறது இந்த இணையதளம். இதில் மாணவர்களும், கல்லூரி நிர்வாகங்களும் பதிவு செய்துகொள்ளலாம். உதவித்தொகைகள் பற்றிய அனைத்து அறிவிப்புகளும் இதில் அப்டேட் செய்யப்படும். உரிய தகுதி உள்ளவர்கள் இந்த இணையதளத்திலேயே விண்ணப்பிக்கலாம். பள்ளி முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பயனுள்ள இணையதளம் இது.

பாடப் புத்தகங்கள் பதிவிறக்க...

www.textbooksonline.tn.nic.in
தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் நடத்தும் இணையதளம் இது. ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரையிலான, தமிழ் வழி, ஆங்கில வழிப் பாடப்புத்தகங்கள் அனைத்தும் இந்தத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இணையத்திலேயே படிக்கலாம். பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். பருவ வாரியாகப் புத்தகங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால் எளிதாகக் கையாள முடிகிறது. மொபைல் மூலமாகவும் பதிவிறக்கம் செய்ய முடியும். புதிய வகுப்புக்குத் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கோடை விடுமுறையில் பழைய புத்தகங்களுக்கு அலையத் தேவையில்லை. இந்த இணையத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.

X