தமிழர்களை இணைக்கும் தமிழ்மொழி இணையம்

8/10/2017 5:58:47 PM

தமிழர்களை இணைக்கும் தமிழ்மொழி இணையம்

உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான கணினிகளை ஒருங்கிணைக்கும் ஒரு முறையை இணையம் என்கிறார்கள். ஒரு கட்டடத்திற்குள் இருக்கும் கணினிகள் இணைப்பு (ஈதர்நெட் - அட்டை) - குறும்பரப்பு வலைப்பின்னல் (LAN - Local Area Network)குறிப்பிட்ட பகுதிக்குள் உள்ள குறும்பரப்பு வலைப்பின்னல்கள் இணைப்பு - அகன்ற பரப்பு வலைப்பின்னல் (WAN - Wide Area Network) இந்த இரண்டு வலைப்பின்னல்கள் இணைப்பு - அடக்கப்பட்ட வலைப்பின்னல் - இணையம் (Internet)

தொடக்கம்
இணையத்தின் தொடக்கம் 1960 ஆம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்புத்துறை குழுவினரின் முன்னோடி ஆய்வுத் திட்ட முகமை வலைப்பின்னல் (ARPANET - Advanced Research Projects Agency Network) ஆகும். சுவிட்சர்லாந்து நாட்டின் செர்ன் (CERN) என்கிற அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய இயற்பியல் அறிஞர் டிம் பெர்னர்ஸ்லீ 1989 ஆம் ஆண்டில் World Wide Web என்ற இணையத்தை உருவாக்கினார்.

இணையத்தின் அடிப்படை
1. மிகை வாக்கிய மாற்ற வழிமுறை (HTTP- Hyper Text Transfer Protocol) - இதன் வழியாகத் தொடக்கம், எழுத்து, படம், செய்தி போன்றவை முன்பே வழிமுறையாக்கப்பட்டது.
2. மாறுதலில்லாத ஆதார இடம் காட்டி (URL - Uniform Resource Locator) - வலைப்பின்னல்களான இணையத்தில் சரியான இடம் வழிகாட்டும் முகவரியாகும்.
3. மிகை வாக்கிய குறிப்பு மொழி (HTML - Hyper Text Markup Language)  - இணையத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கான குறிப்புகளை எழுதும் மொழி. இதில் ஆவணத்தின் தலைப்பு தலைப் பகுதி, ஆவணம் உடல் பகுதி.

இணைய இணைப்பிற்கான தேவைகள்
கணினி, தொலைபேசி, இணைப்புக் கருவி, தொடர்புக்கான மென்பொருள், இணையச் சேவை வழங்கும் நிறுவனம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றை எளிமையாக்கி போன்களில் கூட இணையத்தை இன்று பார்க்க முடியும்.

இணையப் பயன்பாடு
இணையம் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவிற்கு இன்று இணையம் அடைந்திருப்பது விஸ்‌வரூப வளர்ச்சி. 1995 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 1% பேர் இணையம் பயன்படுத்தினர். 2016 ஆம் ஆண்டில் 40% என அதிகரித்துள்ளது.  உலகளவில் இணையப்பயன்பாடு, 2005 ல் ஒரு பில்லியன், 2010ல் 2 பில்லியன், 2014ல் 3 பில்லியனாக அதிகரித்திருக்கிறது.

இணையப் பயன்பாடு (மக்கள் தொகை)
உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் 46.1% இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். மக்கள்தொகை அடிப்படையில், 201 நாடுகள் இந்த லிஸ்டில் உள்ளன. இணையம் பயன்படுத்துவதில் ஐஸ்லாந்து 100% பெற்று, முதலிடத்தைப் பிடித்துள்ளது. எரீத்ரியா மினிமமாக 1.1% பேர்களுடன் 201வது இடத்திலுள்ளது. இந்தியா 34.8% 127 வது இடத்திலிருக்கிறது.

இணையப் பயன்பாடு (எண்ணிக்கை)
உலகில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும், அமெரிக்கா மூன்றாமிடத்திலும் இருக்கிறது. இதைத் தொடர்ந்து பிரேசில், ஜப்பான், ரஷியா, நைஜீரியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் வருகின்றன.

உலக மொழிகள்
உலக மக்கள் தொகையில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் பேசக்கூடியதாக 8 மொழிகள், 1-10 கோடி வரை மக்கள் பேசக்கூடியதாக 84 மொழிகள், 10 லட்சம் - 1 கோடிக்குட்பட்ட மக்கள் பேசக்கூடியதாக 306 மொழிகள், 1 லட்சம் - 10 லட்சத்திற்குட்பட்ட மக்கள் பேசக்கூடியதாக 944 மொழிகள், 10 ஆயிரம் - 1 லட்சத்திற்குட்பட்ட மக்கள் பேசக்கூடியதாக 1808 மொழிகள், 1000 - 10 ஆயிரத்துக்குட்பட்ட மக்கள் பேசக்கூடியதாக 1979 மொழிகள், 100 முதல் ஆயிரத்துக்குட்பட்ட மக்கள் பேசக்கூடியதாக 1070 மொழிகள், முதல் நூறுக்குட்பட்ட மக்கள் பேசக்கூடியதாக 337 மொழிகள், 1-10 க்குட்பட்ட மக்கள் பேசக்கூடியதாக 132 மொழிகள், எவரும் பயன்படுத்தாத மொழிகள் 220 மொழிகள், எந்த விவரமும் தெரியாத மொழிகளாக 209 மொழிகள் என்று உலகில் மொத்தம் 7097 மொழிகள் இருக்கின்றன.

முதன்மை மொழிகள்
உலக மொழிகளில், ஒரு மொழியை  முதன்மை மொழியாகக்கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், 35 நாடுகளில் இருக்கும் 1302 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் சீன மொழி முதலிடத்திலும், 427 மில்லியன் மக்கள்(31 நாடுகள்) பயன்படுத்தும் ஸ்பானிஷ் (Spanish) இரண்டாமிடத்திலும், 106 நாடுகளில் இருக்கும் 339 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஆங்கிலம் (English) மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதற்கு அடுத்து, 58 நாடுகளில் இருக்கும் 267 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் அரபி (Arabic) நான்காவது இடத்திலும், 4 நாடுகளில் இருக்கும் 260 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்தி (Hindi) ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது. இந்த நாடுகளில் 67.8 மில்லியன் மக்கள்(7 நாடுகள்) பயன்படுத்தும் தமிழ்மொழி பிடித்திருப்பது, 20 ஆவது இடம்.

இணையத்தில் மொழிப் பயன்பாடு
உலக மொழிகளில் 162 மொழிகள் மட்டுமே இணையத்தில் பங்காற்றியுள்ளன. இம்மொழிகளில் ஆங்கிலம் அதிகளவாக 53.7% எனும் அளவில் முதலிடத்தில் இருக்கிறது. ரஷியர்கள் 6.4%, ஜப்பான் 5.7%, ஜெர்மன் 5.4%, ஸ்பானிஷ் 5.0% பிரெஞ்ச் 4.1%, என உள்ளனர். போர்த்துக்கீசு 2.6%, இத்தாலியன் 2.3%, சீனா 2.0%, போலிஷ், துருக்கீஷ்,பெர்சியன்,டச்சு மற்றும் பிளமிஷ் 1-1.7% உள்ளன.

இணையத்தில் தமிழ்
இந்திய மொழிகளில் இந்தி 0.048%, பெங்காலி 0.0185%, தமிழ் 0.0063%, உருது 0.0056%, மராத்தி 0.0016%, தெலுங்கு 0.00143% என இணையத்தில் கோலோச்சுகின்றன. உலக அளவில் இணையத்தில் தமிழ்மொழி பெற்றுள்ள இடம் 55.

இணையத்தில் தமிழ் பயன்பாடு
1. தமிழ் மின்னஞ்சல்கள், 2. தமிழ் மடலாடற் குழுக்கள் (மின் குழுமங்கள்), 3. தமிழ் வலைப்பூக்கள், 4. தமிழ் இணைய இதழ்கள், 4. தமிழ் விக்கிப்பீடியா, 5. தமிழ் விக்சனரி, 6. தமிழ் மின் நூலகங்கள், 7. தமிழ் மின் நூல்கள், 8. மின் மொழிபெயர்ப்புகள், 10. தமிழ்க் குறுஞ்செயலிகள், 11. தமிழ்த் தளங்கள், 12. சமூக ஊடகங்கள், 13. பிற வழிமுறைகள்

தமிழ் மின்னஞ்சல்கள்
தமிழ் மொழியிலான உள்ளடக்கத்தைக் கடிதப் பகுதியில் ஒருங்குறி எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரியைத் தமிழில் உருவாக்கலாம்தான் எனினும் மற்றவர்கள் அதனைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றன.

தமிழ் மடலாடற் குழுக்கள்
இணையத்தில் கருத்துக்களைப் பரிமாறும் குறிப்பிட்ட தொழிலைச் செய்யும் குழுக்கள் இவை.

தமிழ் வலைப்பூக்கள்
மின்னஞ்சல் மூலம் வலைப்பூக்களை (Blogs) யார் வேண்டுமானாலும் எளிய முறையில் உருவாக்க முடியும். தமிழ்மொழியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வலைப்பூக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தமிழ் வலைப்பூக்களில் 2003 ஆம் ஆண்டு ஜனவரி 26ல் தமிழ்மொழியிலான வலைப்பூவை உருவாக்கிய நவன் என்பவர் தனது வலைப்பூவே தமிழின் முதல் வலைப்பூ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதற்கு முன்பாகவே கார்த்திக்ராமாஸ் என்பவர் 2003 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் ஒரு வலைப்பூவை உருவாக்கியிருக்கிறார்.

தமிழ் இணைய இதழ்கள்
அச்சு இதழ்கள் இணையத்திலும் தங்கள் செய்திகளுக்கென ஒரு இணையதளத்தைக் கொண்டுள்ளன. இவை தவிர்த்து, இணையத்தில் பதிப்பிக்கப்படும் மின் இதழ்கள் உண்டு. ஆன்மிகம், பகுத்தறிவு, அரசியல், சமையல், நகைச்சுவை, தொழில்நுட்பம், சோதிடம், பல்சுவை இதழ்கள், தனி நபர் தளங்கள், சங்கம் அல்லது அமைப்புகள் என்பது போன்ற 23 பிரிவுகள் இணையத்தில் உண்டு.

தமிழ் விக்கிப்பீடியா
2001 ஆம் ஆண்டில் ஜனவரி 12 ஆம் தேதியில் www.wikipedia.com என்கிற இணைய முகவரியும், ஜனவரி 13 ஆம் தேதியில் www.wikipedia.org என்கிற இணைய முகவரியும் பதிவு செய்யப்பட்டன. அதன் பிறகு, ஜனவரி 15 ஆம் தேதியில் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. இன்று 295 மொழிகளில் விக்கிப்பீடியா இருக்கிறது. 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான முதல் பக்கம் உருவாக்கப்பட்டது. உலகம் முழுவது முள்ள அனைத்து மொழிகளுக்கான விக்கிப்பீடியாக்களின் பட்டியலில் தமிழ் விக்கிப்பீடியா 91,420 கட்டுரைகளுடன் 59 வது இடத்திலுள்ளது.

தமிழ் விக்சனரி
விக்கிப்பீடியா அமைப்பு 2002 ஆம் ஆண்டில் இணையத்தில் அகரமுதலியை உருவாக்கும் நோக்கத்துடன் விக்சனரியை உருவாக்கியது. 172 மொழிகளில் விக்சனரி உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியிலான விக்சனரி (http://ta.wiktionary.org/) 2004 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதியில் உருவாக்கப்பட்டது. விக்சனரிகளின் பட்டியலில் 3,54,413 சொற்களுடன் 16 வது இடத்தில் இருக்கிறது.

இதில் நமக்குத் தெரிந்த சொற்களைச் சேர்க்கலாம். விக்கியின் சகோதரத் திட்டங்களில், விக்கி நூல்கள், விக்கி மூலம், விக்கிப் பல்கலைக்கழகம், விக்கி மேற்கோள், விக்கி செய்திகள் என்று பல திட்டங்கள் தமிழிலும் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இருப்பினும், இங்கு பயனாளிகளின் பங்களிப்புகள் மிகமிகக் குறைவாகயிருக்கின்றன.  

தமிழ் மின் நூலகங்கள்
தமிழ்ப் படைப்புகள் மின் நூலாக்கம் செய்யப்பட்டு இணையத்தில் பார்வைக்குக் கிடைக்கின்றன. நூலகம், மதுரை மின் இலக்கியத் தொகுப்புத் திட்டம், இந்திய எண்ணிம நூலகம், தமிழ் இணையக் கல்விக் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், நூலகம், சென்னை நூலகம், காந்தளகம் போன்ற இணைய நூலகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த மின் நூலகங்களில் இடம் பெற்றிருக்கும் மின் நூல்களைத் தரவிறக்கம் செய்தோ அல்லது அச்சிட்டு எடுத்தோ படித்துக் கொள்ள முடியும். நூலை அச்சு வடிவில் படிப்பது போல் கணினி மற்றும் திறன்பேசிகளில் படிப்பதற்கேற்றதாக வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. தமிழிலும் இது போன்று பல மின்நூல்கள் உண்டு.

மின் மொழிபெயர்ப்புகள்
ஒரு மொழியிலிருந்து பிறமொழிக்கு மொழிபெயர்த்துத் தரக்கூடிய இணைய தளங்கள் சில இருக்கின்றன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் சில மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன. கூகுள் மொழிபெயர்ப்புக்கென ஒரு இணையதளத்தைக் கொண்டிருக்கிறது. இது 103 மொழிகளில் மொழிபெயர்க்கக்கூடியதாக அமைக்கப்பட்டிருக்கிறது.  

தமிழ்க் குறுஞ்செயலிகள்
கைக்கணினி, திறன்பேசி போன்றவற்றில் பயன்படுத்தக்கூடியதாகக் குறுஞ்செயலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது தமிழிலும் இந்தக் குறுஞ்செயலிகள் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன.  

தமிழ்த் தளங்கள்
தமிழ்நாடு அரசு இணையதளங்கள் சில தமிழில் தங்களது செயல்பாடுகள் குறித்த தகவல்களைக் கொண்டிருக்கின்றன. இவை தவிர சில அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவை தங்கள் செயல்பாடுகளை இணையவழியில் மேற்கொண்டிருக்கின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் மூலமும் தமிழில் உரையாடல்கள் நிகழுகின்றன.

அருகி வரும் மொழிகள்
அதிகமான குழந்தைகளால் பேசப்பட்டாலும், சில களங்களில் கட்டுப்படுத்தப்பட்டு வைத்திருக்கும் நிலையிலான மொழிகளைத் தாக்குதலுக்குள்ளாகக் கூடியவை (Vulnerable - 595) என்றும், குழந்தைகள் தங்கள் வீட்டில் தாய்மொழியில் பேசினாலும், அதைக் கற்காமலிருக்கும் நிலையிலுள்ள மொழிகளை உறுதியாக அருகி வருபவை உலகளவில் 645 (Definitely Endangered - 645) என்றும், வயதான பெரியவர்கள் அந்த மொழியைப் பயன்படுத்தினாலும், அதைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்காத நிலையிலுள்ள அழிந்துவரும மொழிகள் (Severely Endangered - 527) 527 என்றும், மொழிகளை நெருக்கடிக்கு அருகி வருபவை (Critically Endangered - 574) என்றும், தொடர்பற்றுப் போனவை (Extinct -230) என்றும் ஐந்து பிரிவு களாகப் பிரித்து மொத்தம் 2571 மொழிகள் அழிந்துவரும் பட்டியலிலுள்ளன.

இணையத்தில் தமிழுக்கான தேவைகள்
எதிர்காலத்தில் இணையத்தில் தமிழுக்கான தேவைகளாகத் தமிழ் உள்ளடக்கங்களை அதிகரித்தல், தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்குதல், தமிழை எளிமையாகப் பயன்படுத்துவதற்கான புதிய தமிழ் மென்பொருட்களை உருவாக்குதல், இணையத்தில் தமிழ் வாசிப்புகளை ஊக்குவித்தல் தேவை.

- தேனி மு. சுப்பிரமணி

X