பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள்!

1/10/2019 2:39:01 PM

பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள்!

நன்றி குங்குமச் சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

பிரிட்டிஷ் கவுன்சில் இந்தியா உட்பட 145 நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. பிரிட்டனின் சிறந்த கல்வி நிறுவனங்களின் மூலம் ‘ஃப்யூச்சர் லேர்ன் கம்பெய்ன்’ என்கிற கல்வித் திட்டத்தின் கீழ் இந்த ஆன்லைன் படிப்பு வழங்கப்படுகிறது. இதில் பிசினஸ் அண்ட் மேனேஜ்மென்ட், கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் அண்ட் மீடியா, ஹெல்த் அண்ட் சைக்காலஜி, ஹிஸ்டரி, லாங்குவேஜ் அண்ட் கல்ச்சர்ஸ், ஸ்டடி ஆஃப் லா, லிட்ரேச்சர், நேச்சர் அண்ட் என்விரான்மென்ட், பாலிடிக்ஸ் அண்ட் தி மாடர்ன் வேர்ல்டு, சயின்ஸ், எஞ்சினியரிங் அண்ட் மாத்தமேட்டிக்ஸ், ஸ்டடி ஸ்கில்ஸ், டீச்சிங், டெக் அண்ட் கோடிங் என மொத்தம் 13 துறைகள் அடங்கும்.

இந்தக் கல்வித் திட்டத்தின் மூலம் 320 ‘மாசிவ் ஓபன் ஆன்லைன் கோர்சஸ்’ (எம்.ஓ.ஓ.சி.,) படிப்புகளை, பிரிட்டனின் 49 கல்வி நிறுவனங்களின் மூலம் பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கவுள்ளது. ஒவ்வொரு  துறையிலும் ஆழமான தொழில்முறை சார்ந்த கல்வியின் மூலம் திறமையான மாணவர்களை உருவாக்குவதே இந்தக் கல்வித் திட்டத்தின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாணவருக்கு ஒரு சான்றிதழ் படிப்பு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு மற்ற படிப்புகளில் சேர விரும்பினால் அதற்கான தொகையைச் செலுத்த வேண்டும். படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு பிரிட்டன் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்குக் குறிப்பிட்ட கல்வித் தகுதியோ வயது வரம்போ கிடையாது.

சேர்க்கை முறை: இந்தக் கல்வித் திட்டத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையம் மூலம், வழங்கப்படும் படிப்புகள், கால அளவு, கற்பிக்கும் ஆசிரியர்கள், வழங்கும் கல்வி நிறுவனம் என அனைத்து தகவல்களையும் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். பின்னர் தங்களுக்கு விருப்பமான படிப்பை தேர்வு செய்து, அதில் தங்களைப் பற்றிய விவரத்தை பதிவு செய்யவேண்டும். அது சார்ந்த அனைத்துத் தகவல்களும் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். விண்ணப்பிக்கக் கடைசி நாள்:16.1.2019. மேலும் விவரங்களுக்கு www.britishcouncil.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

X